மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு ‘தமிழ்நாடு’ உருவான நாள்– நவம்பர் 1 இப்போதுள்ள தமிழகம் உருவாக்கப்பட்டதன் அறுபத்தி ஒன்பதாம் ஆண்டு நிறைவு நாளின்று . ஆம்.. சுதந்திரம் வாங்கி எட்டாண்டுகள் வரை தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களை உள்ளடக்கி “மெட்ராஸ் பிரசிடென்சி’யாகத்தான் செயல்பட்டு வந்தது. 1956ம் ஆண்டு நவ., முதல் தேதி மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் அமலாக்கப்பட்டு, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களின் பிரிப்புக்குப் பின் இன்றைய மெட்ராஸ் ஸ்டேட் உருவானது. தொடக்கத்தில் மெட்ராஸ் ஸ்டேட், கேரளா ஸ்டேட், மைசூர் ஸ்டேட், நிஜாம் ஸ்டேட் என்ற பெயரில் அழைக்கப்பட்டன. பின்னர்தான் தற்போதைய பெயர்கள் இடப்பட்டன. 1968 ஜூலை 18 ல் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்டது.
உலக நனிசைவ நாள் (World Vegan Day) ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் முதல் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது. உலக வீகன் தினம் என்ற பெயராலும் இந்நிகழ்வு அழைக்கப்படுகிறது. உலகம் முழுவதுமுள்ள சைவ உணவு உண்பவர்களால் இந்நாள் கொண்டாடப்படுகிறது. விலங்குகள், மனிதர்கள் மற்றும் இயற்கை சூழலுக்கு சைவ உணவுகள் அளிக்கும் நன்மைகளை பரப்புரை செய்வது அதற்கான கடைகளை அமைப்பது, நினைவு மரங்களை நடுதல் போன்ற செயல்பாடுகள் இந்நாளில் மேற்கொள்ளப்படுகின்றன. நனிசைவ வாழ்க்கை முறையை பின்பற்ற மக்கள் இந்த நாளில் ஊக்குவிக்கப்படுகிறார்கள். நனிசைவ உணவு முறை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, விலங்குகளின் நல்வாழ்வை பாதுகாக்கவும் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் பெரிதும் உதவும் என்பதும் நனிசைவர்களின் நம்பிக்கையாகும். சைவ உணவு முறை என்பது முற்றிலுமாக தாரவங்களிலிருந்து பெறப்பட்ட உணவாகும். இந்த உணவு முறையினை தாவர உணவு முறை அல்லது மரக்கறி உணவு முறை என்றும் சொல்கின்றனர். காய்கறிகள் சார்ந்த உணவு முறை என்பது உணவில் மீன், விலங்குகளின் இறைச்சி வகைகளைத் தவிர்ப்பதாகும். அதே சமயம் நனிசைவர்கள் விலங்குகளிலிருந்து பெறப்படும் இறைச்சி, முட்டை, பண்ணைப் பொருட்களான பால், பாலாடைக்கட்டி, தயிர் ஆகியவற்றைத் தவிர்க்கின்றனர். சில நனிசைவர்கள் தேனும் உண்பதில்லை. இவர்கள் தோல் சரக்கு நுட்பியல், கம்பளி, இறகுகள், எலும்பு, அல்லது முத்து இவற்றைக் கொண்ட பொருட்களையும் பயன்படுத்துவதில்லை. விலங்குகளின் மீது சோதிக்கப்பட்டவற்றையும் தவிர்க்கின்றனர். இவர்கள், விலங்குகளின் உரிமைகளில் ஈடுபாடு உடையவர்களாகவும் அதற்காகப் போராடுபவர்களாகவும் உள்ளனர். நனிசைவர்கள் பழங்கள், காய்கனிகள், அவரைகள், தானியங்கள், கொட்டைகள், விதைகள் ஆகியவற்றையும், அவற்றிலிருந்து உருவாக்கப்பட்ட நனிசைவ இனிப்புகள், நனிசைவ பாலடைக்கட்டி, நனிசைவ அணிச்சல்களை உணவாகக் கொள்கின்றனர். நன்கு திட்டமிடப்பட்ட நனிசைவ உணவுமுறைகள் இதய நோய்கள் உள்ளிட்ட சில வகையான நாட்பட்ட நோய்களுக்குத் தீர்வாகிறது. அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவுமுறையாகப் பரிந்துரைக்கப்படுகின்றது. குழந்தைப் பருவத்திலும், கருவுற்ற காலங்களிகளிலும் இதனை அமெரிக்க ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் அகாதமி, கனடிய உணவு முறையாளர்கள், பிரித்தானிய உணவு முறையாளச் சங்கம் போன்ற பல அமைப்புகள் பரிந்துரைக்கின்றன. ஆனால், ஜெர்மானிய ஊட்டச்சத்து சமூகம், நனிசைவ உணவுமுறைகளை குழந்தைகளுக்கும் வளர்சிதை மாற்றக்கால சிறாருக்கும் கருவுற்ற பெண்களுக்கும் தாய்ப்பாலூட்டுவோருக்கும் ஏற்கவில்லை. நனிசைவ உணவு முறையில் நார்ச்சத்து, மக்னீசியம், இலைக்காடி, உயிர்ச்சத்து சி, உயிர்ச்சத்து ஈ, இரும்பு, ஃபைட்டோவேதிகள் கூடுதலாக உள்ளன; உணவிலிருந்து பெறப்படும் ஆற்றல், நிறைவுற்ற கொழுப்பு, கொலஸ்டிரால், நீள்-சங்கிலி ஒமேகா-3 கொழுப்பமிலங்கள், உயிர்ச்சத்து டி, கால்சியம், துத்தநாகம், உயிர்சத்து B12 ஆகியன மிகக்குறைவாகவே உள்ளன. சம விகிதமில்லா நனிசைவ உணவு முறை ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும். இதனால் மிகக் கடுமையான உடல்நலக் கேடுகள் வரலாம் என்று எச்சரிக்கின்றது. இத்தகைய சில ஊட்டச்சத்துக் குறைகளை சரிக்கட்ட செறிவூட்டிய உணவுகளோ அல்லது வழமையாக உணவுக் குறை நிரப்பிகளை எடுப்பதோ கட்டாயமாகும். குறிப்பாக உயிர்ச்சத்து B12 குறைதல் குருதிக் குறைபாடுகளுக்கும் தொடர்ந்த மீட்கவியலா நரம்புமண்டல சேதத்திற்கும் காரணமாவதால் மாத்திரையாக B12 நிரவல் மிக முக்கியமானது.
இன்று கிருஸ்துவர்களுக்கு “அனைத்து புனிதர்கள் தினம் “ (All saints day)… கத்தோலிக்க, மற்றும் ஆங்கிலிக்கன், ஆர்தொடாக்ஸ் , லுத்திரன் சபையினர் இதை அனுசரிக்கிறார்கள்….புனிதர்கள் என்றால் அவர்களும் பெரும்பாலும் பாவிகளாக வாழ்ந்தவர்களே..ஆனால் பரிசுத்த வாழ்க்கை வாழவேண்டும் என வைராக்கியத்தோடு இறுதி மூச்சு வரை போராடி இறைவனை கண்டவர்கள்..நாமும் அப்படி பரிசுத்த வாழ்க்கை வாழ வேண்டும் என முயற்சித்தால் ,நாமும் புனிதர்களே …பேதுரு எனப்படும் பீட்டர் ,சாவுக்கு பயந்து இயேசுவை யாரென்றே தெரியாது என மறுதலித்தவர்..ஆனால் பிறகு அதே இயேசுவுக்காக தனது உயிரையே துணிந்து அளித்தவரானார்… இயேசுவை பின்பற்றுபவர்களை கொல்வதே தனது லட்சியம் என வாழ்ந்து அதை செய்துவந்த பவுல் பின்னர் இயேசுவுக்காகவே தனது உயிரையே அளித்தவரானார்…இப்படியாக பல புனிதர்கள்…. இத்தாலி, ஆஸ்திரியா, பிரான்ஸ், ஜெர்மனி ,போலந்து போன்ற பல நாடுகளில் இன்று அரசு விடுமுறை….. பல்வேறு நூற்றாண்டுகளில் பல்வேறு விதங்களில் கொண்டாடப்பட்டு வந்த இத்திருநாள் எட்டாம் நூற்றாண்டில் திருத்தந்தை மூன்றாம் கிரகரியின் காலத்தில் நவம்பர் முதல் தேதியன்று கொண்டாடப்பட்டது. திருஅவையால் புனிதர் பட்டம் அளிக்கப்பட்ட புனிதர்கள் பலர் இருக்கும் போதிலும் இவ்வகை அங்கீகாரம் பெறாமல்இ ஆனால் புனித வாழ்வு வாழ்ந்த பலரை நினைவு கூறும் வண்ணம் இவ்விழா கொண்டாடப்படுது.
ரயில் நிலையங்களில் புத்தகக்கடைகள் உருவாகக் காரணமான டபிள்யூ.எச்.ஸ்மித் நிறுவனம், முதல் கடையை லண்டனின் யூஸ்ட்டன் ரயில் நிலையத்தில் தொடங்கியது.இன்றைய நூல்களின் தனிப்பட்ட அடையாளமாகக் குறிப்பிடும் ஐஎஸ்பிஎன் (இன்ட்டர்நேஷனல் ஸ்டேண்டர்ட் புக் நம்பர்) உருவாவதற்கும் இந்த நிறுவனமே காரணமாக அமைந்தது. இந்நிறுவனத்தைத் தொடங்கிய வில்லியம் ஹென்றி ஸ்மித் பிறப்பதற்குச் சில மாதங்கள் முன்புதான், அவர் தந்தை ஹென்றி வால்ட்டன் ஸ்மித், லண்டனில் ஒரு செய்தித்தாள் விற்பனையகத்தைத் தொடங்கியிருந்தார். தந்தையின் மறைவுக்குப்பின் அதே தொழிலைத் தொடர்ந்த ஸ்மித், வளர்ந்துகொண்டிருந்த ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்தி, பல நகரங்களுக்கும் செய்தித்தாள்களை அனுப்பத் தொடங்கினார். (அக்காலத்திய செய்தித்தாள்கள் வெளியாகிற ஊரில் மட்டுமே கிடைப்பவையாக இருந்தன!) தொடர்வண்டியின் பயன்பாடு அதிகரித்த நிலையில், வயதாலும், (ரயில் விபத்துகளால்!) ஊனமுற்றதாலும் ரயில்வே பணியிலிருந்து ஓய்வளிக்கப்பட்டவர்கள், பழைய நூல்களை ரயில் பயணிகளிடம் விற்பதைக் கண்டார் ஸ்மித். (அக்காலத்தில் ஓய்வூதியமெல்லாம் இல்லை!) அக்காலத்திய வாகனங்களான குதிரை வண்டிகளைவிட, தொடர்வண்டியில் படிப்பது சிரமமின்றி இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட ஸ்மித், அன்றைய நாளிதழ்கள், புதிய நூல்கள் ஆகியவற்றை பயணிகளுக்கு விற்பதற்காக இந்தக் கடையைத் தொடங்கினார். அடுத்த பத்தாண்டுகளில், இங்கிலாந்தின் எல்லா பெரிய ரயில் நிலையங்களிலும் ஸ்மித்தின் கடைகள் இருந்தன. இவற்றின்மூலம் புகழ்பெற்ற ஸ்மித் 1868இல் நாடாளுமன்ற உறுப்பினராக ஆனதுடன், இங்கிலாந்தின் அமைச்சராகவும் ஆனார். விமான நிலையங்கள், துறைமுகங்கள் என்று எல்லா பயணிக்கும் இடங்களிலும் டபிள்யூ.எச்.ஸ்மித் கடைகள் திறக்கப்பட்டு, மிகப்பெரிய வளர்ச்சியேற்பட்டபின், ஒரே மாதிரியான தலைப்புகளால் குழப்பங்கள் உருவாயின. 1965இல் இந்நிறுவனம் வேண்டியதால், அயர்லாந்திலுள்ள ட்ரினிட்டி கல்லூரியின் புள்ளியியல் துறைப் பேராசிரியர் கார்டான் ஃபாஸ்ட்டர், எஸ்பிஎன் (ஸ்டேண்டர்ட் புக் நம்பர்) என்ற ஒன்பது இலக்கக் குறியீட்டை உருவாக்கினார். இது இங்கிலாந்தில் மட்டும் பயன்படுத்தப்பட்ட நிலையில், இதைப் பின்பற்றி, உலகம் முழுவதற்குமான 10 இலக்க ஐஎஸ்பிஎன் குறியீட்டை 1970இல் ஐஎஸ்ஓ நிறுவனம் உருவாக்கியது. இவ்வளவும் இருந்தாலும் உலகின் மிகப்பெரிய நூல் விற்பனை நிலையம் இதுவல்ல! உலகின் மிகப்பெரிய நூல் விற்பனை நிலையமாக இருந்த பார்ன்ஸ் அண்ட் நோபிள்-கூட இன்று மூன்றாமிடத்திற்குச் சென்றுவிட, முதலிடத்தில் அமேசானும், இரண்டாமிடத்தில் (இந்தியாவின்) ஃப்ளிப்கார்ட்டும் உள்ளன. பதினோராமிடத்தில் டபிள்யூ.எச்.ஸ்மித் உள்ளது!
இன்று தியாகராஜ பாகவதர் மறைந்த நாள்.மயிலாடுதுறையில் 1910 மார்ச் முதல் தேதி கிருஷ்ணமூர்த்தி-மாணிக்கத்தம்மாள் தம்பதியின் மகனாக தியாகராஜன் பிறந்தார். அவரின் சிறுவயதிலேயே தந்தை கிருஷ்ணமூர்த்தி, தமது குடும்பத்துடன் திருச்சிக்குச் சென்றுவிட்டார். சிறுவன் தியாகராஜனுக்குப் பள்ளிப்படிப்பில் நாட்டம் செல்லவில்லை. யார் பாடினாலும், இசைக் கச்சேரி எங்கு நடைபெற்றாலும் தியாகராஜன் அங்கே செல்வது மட்டுமல்ல, மறுபடியும் அந்தப் பாடல்களை ஒழுங்காகக் கேட்போர் வியக்கும் வகையில் பாடிக்காட்டுவாராம். ÷தந்தைக்கு இது பிடிக்கவில்லை. தியாகராஜன் படிக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியபடி இருந்தார். தொல்லை தாங்காமல் திடீரென்று மகன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். எங்கே தேடியும் தாயும் தந்தையும் அவதிப்பட்ட நிலையில், கடப்பாவில் அவர் இருப்பதாகச் செய்தி வந்தது. தனிமைப்பட்டு, கையில் காசில்லாமல் சென்றவர் எவ்வளவு அவதிப்படுகிறாரோ என்ற கவலையுடன் தந்தை கடப்பா சென்றார். அங்கு அவர் ஆச்சரியப்பட்டார், கடப்பாவில் ஒரு மண்டபத்தில் மக்களின் கூட்டம் அவர் பாடுவதைக் கேட்டு ஆரவாரித்தபடி இருந்ததாம். திருச்சி திரும்பிய பாலபாடகனின் பாட்டைக் கேட்டுப் பலரும் பாராட்டினார்கள். எப்.ஜி.நடேச அய்யர் தமது திருச்சி ரசிக ரஞ்சனி சபா நடத்தும் அரிச்சந்திரன் நாடகத்தில் லோகிதாசன் பாத்திரத்தில் தியாகராஜன் அரங்கேற்றம் நடைபெற்றது. பத்து வயது சிறுவன் திடீரென்று ஓர் இரவில் ஒளிமிக்க நட்சத்திரமாக ஆகிவிட்டார். அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்த பிரபல வயலின் வித்துவான் மதுரை பொன்னு ஐயங்கார், தியாகராஜனின் குரல் வளத்தையும், இசை நயத்தையும் கண்டு பாராட்டியதுடன் அவருக்குக் கர்நாடக இசையை முறையாகக் கற்றுத்தர முன்வந்தார். அதற்கு எத்தகைய சன்மானமும் வேண்டாமென்று அவர் கூறிவிட்டார். கர்நாடக இசையில் பயிற்சி பெற்ற அதேநேரத்தில், நாடகத் துறையில் ஆசானாக விளங்கிய நடராஜ வாத்தியார், நடிப்பில் அவருக்குப் பயிற்சியும் தந்தார். ஆறு ஆண்டுகள் பயிற்சி தரப்பட்டதும், தியாகராஜனுடைய பாட்டுக் கச்சேரியின் அரங்கேற்றத்தை நடத்த பொன்னு ஐயங்கார் திட்டமிட்டு, இசைக்கலையில் மிகப் பெரியவர்களாகத் திகழ்ந்தவர்களை அணுகி, தமது மாணவரின் இசைத் திறமையை விளக்கினார். கடைசியாக, தமிழ்நாட்டில் தலைசிறந்த சங்கீத மேதையான புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை, தியாகராஜன் கச்சேரியில் கஞ்சிரா வாசிக்க முன்வந்தார். அவரையொட்டி, மிருதங்கம், வயலின் ஆகியவற்றில் தலைசிறந்தவர்களும் தியாகராஜனின் அரங்கேற்றத்தில் உடன் வாசிக்க இசைந்தனர். இது அன்றைய இசை உலகில் மிகப்பெரிய நிகழ்ச்சியாகக் கருதப்பட்டது. யாரும் எதிர்பார்க்காத வகையில் அன்றைய தினம் தியாகராஜனின் குரல் வளமும், கர்நாடக இசையின் இனிமையும் நுணுக்கமும், கேட்போர் வியப்படையும் வகையில் நான்கு மணி நேரக் கச்சேரியைச் சிறப்படையச் செய்தன. கச்சேரி முடிவில் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை எழுந்து, தியாகராஜன் ஒரு பாகவதர் என்று பட்டம் வழங்கினார். அவ்வாறு தியாகராஜ பாகவதர் தமிழிசை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். நாளடைவில் பாகவதர் என்றால் அவரை மட்டுமே குறிப்பதாக அது மக்களிடம் அமைந்தது. (கட்டிங் கண்ணையா) 1926-ல் திருச்சி பொன்மலையில் முதன்முதலாகப் பவளக்கொடி நாடகத்தில் அர்ஜுனனாக வேடமேற்று தியாகராஜ பாகவதர் நடித்தார். அதில் பவளக்கொடி வேடமேற்றுப் பெண் வேடத்தில் டி.பி.ராமகிருஷ்ணன் நடித்தார். பிறகு அவருடன் இணைந்து நாடகத்தில் பவளக்கொடி வேடத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமி நடித்தார். பாகவதர், சுப்புலட்சுமி நாடகமேடை நட்சத்திரங்களாகப் பிரபலமடைந்தனர். 1934-ல் அவர்கள் நடித்த பவளக்கொடி நாடகம் திரைப்படமாக லேனா (லெட்சுமணன் செட்டியார்) தயாரிப்பில், பாபநாசம் சிவன் பாடல்களுடன், கே.சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்தது. அந்தப் படத்தில் இருந்த 55 பாடல்களில் 22 பாடல்களை பாகவதர் பாடியிருந்தார். தமிழ்நாடெங்கும் திரைப்படக் கொட்டகைகளில் மக்கள் வெள்ளம் வரலாறு காணாத அளவுக்கு நிரம்பி பவளக்கொடிக்கு பெரிய வரவேற்பு இருந்தது. ஒன்பது மாதங்கள் தொடர்ந்து அப்படம் ஓடியது. அதன்பிறகு பாகவதர் நடிப்பில், நவீன சாரங்கதாரா (1936), சத்தியசீலன் (1936-பாகவதர் இரட்டை வேடமேற்று நடித்தது), சிந்தாமணி (1937), அம்பிகாபதி (1937), திருநீலகண்டர் (1939), அசோக் குமார் (1941), சிவகவி (1943), ஹரிதாஸ் (1944) ஆகிய திரைப்படங்கள் ஒன்றை ஒன்று மிஞ்சும் அளவுக்கு வெற்றிப்படமாக வந்தபடி இருந்தன. வீதிகளில், வேலை செய்யும் இடங்களில், வயல்களில், சாலையோரங்களில், ஒற்றையடிப் பாதைகளில், தோட்டம், துரவுகளில், எங்கும் பாகவதரின் கந்தர்வ கானம் எதிரொலித்தது. ÷திரையுலகில் பாகவதர் அடைந்திருந்த உன்னதமான புகழையும், பெருமையையும் கண்டு பொறாமையடைந்த சிலர், அவரைப் பற்றி அடிப்படையற்ற அவதூறுகளைக் கிளப்பியவாறு இருந்தனர். இந்தச் சமயத்தில்தான் லட்சுமிகாந்தன் பற்றிய கொலை வழக்கு வந்தது. ÷அதற்கு முன்பு பல்வேறு குற்றங்களுக்காக ஏழு ஆண்டுகள் தண்டனை பெற்று ராஜமுந்திரி சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபொழுது வழியில் போலீஸôரிடமிருந்து தப்பியோடி மீண்டும் சென்னையில் பிடிபட்டு அந்தமான் சிறைக்கு அவர் அனுப்பப்பட்டார். 1942 மார்ச் மாதத்தில் ஜப்பானியப் படை அந்தமானைக் கைப்பற்றி அங்குள்ள சிறைவாசிகளை வெளியேற்றியதும் சென்னைக்குத் திரும்பிய லட்சுமிகாந்தன், “சினிமா தூது’ என்ற கீழ்த்தரமான மஞ்சள் ஏடு மூலம், பொதுவாழ்விலும், தொழில்துறையிலும், கலையுலகிலும் இருந்த பிரமுகர்கள் பலர்மீது பலவிதமான வீண்பழிகளைச் சுமத்தியும், மிரட்டியும், பணம் பறித்து வந்தார். ÷திரையுலக நடிகர்கள், தயாரிப்பாளர்கள் பற்றி சினிமா தூது இதழில் எழுதப்பட்ட அவதூறுகளைக் கண்டித்து பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், சீராமுலு நாயுடு உள்ளிட்ட பலர் ஆளுநர் ஆர்தர் ஹோப்பிடம் சமர்ப்பித்த மனுவின்மீது போலீஸார் விசாரணை செய்து அவதூறுகள் கிளப்பிய சினிமா தூது பத்திரிகையைச் சட்டப்படி தடைசெய்தனர். அதன் பிறகு, “இந்து நேசன்’ என்ற மற்றொரு பத்திரிகை மூலம் பழையபடி வீண்பழிகளைச் சுமத்திப் பணம் பறிப்பதில் லட்சுமிகாந்தன் ஈடுபட்டார். அந்நிலையில் 1944 நவம்பர் 8-ம் நாள் சென்னை வேப்பேரியிலுள்ள கால்நடை மருத்துவமனை அருகில் ரிக்ஷாவில் சென்றுகொண்டிருந்த லட்சுமிகாந்தனைச் சிலர் வழிமறித்துக் கத்தியால் காயப்படுத்தினர். அதையொட்டித் தன்னுடைய வழக்கறிஞரின் ஆலோசனைப்படி அருகிலிருந்த காவல்நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட காயம் பற்றிப் புகார் செய்துவிட்டு, சென்னை பொது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார். அங்கு தங்கியிருந்த லட்சுமிகாந்தன் மறுநாள் அதிகாலையில் மர்மமான முறையில் இறந்துவிட்டார். இதை அடுத்து1944 நவம்பர் 27-ம் தேதி பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களைப் பற்றி லட்சுமிகாந்தன் அவதூறாகச் செய்திகள் வெளியிட்டதைக் கொலைக்குக் காரணமாகக் காவல்துறை குறிப்பிட்டது. சென்னை மாநில மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. நீண்ட விசாரணைக்குப் பிறகு பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் நால்வர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்மீது செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன்மீது மேலும் லண்டன் ப்ரிவி கவுன்சில் அமைப்புக்கு முறையீடு செய்யப்பட்டது. வழக்கை மீண்டும் விசாரணை செய்யுமாறு ப்ரிவி கவுன்சில் தந்த உத்தரவின்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகளால் மறுவிசாரணை தொடங்கியது. பிரபலமான வழக்கறிஞர் வி.எல்.எத்திராஜ் முன்வைத்த வாதங்களும், ஆதாரங்களும் நடத்தப்பட்ட வழக்கில் தரப்பட்ட வலுவற்ற புனைந்துரைகளை முழுமையாகச் சிதறடித்தன. அதன் பிறகு பாகவதரும், கிருஷ்ணனும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாக சமர்ப்பிக்கப்பட்ட ஒரு கத்தியைப் பார்த்து மனுவை விசாரித்த நீதிபதி ஒருவர் கூறியதாவது: இந்தக் கத்தியால் ஓர் எலியைக்கூட கொன்றிருக்க முடியாது. இந்த அளவுக்கு மோசமான ஆதாரங்கள் மீது திரையுலக நட்சத்திரங்களான தியாகராஜ பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் முப்பது மாதங்களுக்கு இருண்ட சிறைச்சாலைக்குள் அடைத்து வைக்கப்பட்டனர். முன்னர் ஒரு மன்னர்போல வாழ்ந்த பாகவதர் சிறையிலிருந்து வெளிவந்ததும் எல்லாப் பற்றுகளையும் விட்டு நீங்கிய, துறவிபோல் ஆகிவிட்டார். மேற்கொண்டு நடிப்பதற்கான பல அழைப்புகளை அவர் தவிர்த்தார். நடிப்பதிலோ, பொருளீட்டுவதிலோ அவருக்கு நாட்டம் இல்லாமல் போனது. வறுமையால் அவர் வாடிவிட்டார் என்று கூற முடியாது. கடைசிவரை ஒரு கவரிமான்போல அவர் வாழ்ந்தார். பவளக்கொடி படம் தொடங்கி ஹரிதாஸ் வரை அவர் சிறை செல்வதற்குமுன் நடித்த ஒன்பது படங்கள்தான் பெரும் வெற்றியைப் பெற்றன. சிறையிலிருந்து வெளிவந்ததும் ராஜமுக்தி (1948), அமரகவி (1952), சியாமளா (1952), புதுவாழ்வு (1957), சிவகாமி (1960) ஆகிய படங்கள் பெரும் வெற்றியைப் பெறவில்லை. ஆனால் அவர் பாடல்கள் அந்தப்படங்களில் எப்போதும்போல் சிறப்பாக அமைந்திருந்தன. எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த படங்கள் எண்ணிக்கையில் குறைவு என்றாலும், பல கோடி மக்கள் இதயத்தில் அவருடைய பாட்டுகள் என்றும் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கும். நவம்பர் 1, 1959-ல் தியாகராஜ பாகவதர் மறைந்தாலும் அவர் வாரி வழங்கிய இசைச் செல்வம், தமிழ் மக்களுக்கு நிலையான பெரும் பேறாக இருந்து வருகிறது. இப்போதுள்ள காலத்தில் உள்ள கிராபிக்ஸ் அல்லது டப்பிங் வசதி மற்றும் டூப் போடத் தெரியாத தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் காலமான நாளின்று எளிமையான குடு்ம்பத்தில் பிறந்து தனது கந்தர்வ கானக் குரலால் தமிழகத்தை 40 களில் கட்டிப்போட்டவரிவரை இன்றைய ஜென்ரேசன் மறந்தே போய் விட்டது என்பதுதான் சோகமான உண்மை. . தங்க நிற உடல் கந்தர்வ குரல் ஆழமான பார்வை இதுதான் எம்.கே.தியாகராஜபாகவதர். நாடக உலகில் இருந்து திரையுலகம் வந்த பாகவதர் தன் கணீர் குரலால் ஒட்டுமொத்த மக்களைக் கட்டிப்போட்டவர். அவரது ஹரிதாஸ் திரைப்படம் 3 தீபாவளியை கடந்து ஓடியதை இன்றளவும் தாண்டி செல்ல எந்த படமும் வரவில்லை என்பதே அன்னாரின் புகழுக்கு சாட்சி. திரையுலகில் புகழின் உச்சியை தொட்ட பாகவதர், பத்திரிகையஆளர் கொலை ஒருவர் வழக்கு ஒன்றில் சிக்கி அதிலிருந்த மீள முடியாமல் உடல் கெட்டு மனம் கெட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தம் இறுதிநாளில் சர்க்கரை நோயின் தாக்கத்தால் கண்பார்வை பறிபோனது. அதற்கு மேல் சென்னையில் இருக்க முடியாமல் தன் சொந்த ஊருக்கு திரும்பி அங்குள்ள தனது குலதெய்வம் கோவிலில் தங்கி வாழ்ந்தார். பின்னர் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் 1959 ஆம் ஆண்டு அக்டோபர் இறுதிவாரத்தில் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர். சிகிச்சை பலனின்றி இதே நவம்பர் 1 ஆம் தேதி தன் இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார் ஏழிசை மன்னர் பாகவதர்.
லெனாக்ஸ்-காஸ்டாட் நோய்க்குறி தினம் நவம்பர் 1 – Lennox-Gastaut Syndrome Day. லெனாக்ஸ்-காஸ்டாட் நோய்க்குறி என்றால் என்ன? லெனாக்ஸ்-காஸ்டாட் நோய்க்குறி (எல்.ஜி.எஸ்) என்பது குழந்தை பருவத்தில் தொடங்கும் கால்-கை வலிப்பு நோயின் மிக மோசமான நிகழ்வு ஆகும். இதன் மிகப் பொதுவான அறிகுறிகள் வலிப்புத்தாக்கங்கள் மற்றும் பலவீனமான கற்றல் / மன ரீதியான திறன்கள் ஆகியவையே ஆகும்.
மதராஸ் மாகாணம் மொழிவாரியாக தனது நிலத்தில் பெரும்பகுதியை இழந்த நாள் நவம்பர் 1 1956.. அன்றைய மதராஸ் மாகாணத்தில் இருந்து பல மாவட்டங்கள் ஆந்திராவுக்கும் கர்நாடகாவுக்கும் கேரளாவுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டன.. திருவாங்கூர் மற்றும் மைசூர் மாகாணத்திலிருந்து சில மாவட்டங்கள் அன்றைய மதராஸ் மாகாணத்துக்கு வந்தன .. இப்படி எடுத்து மற்றும் கொடுத்தது போக கிட்டத்தட்ட தனது நில எல்லைகளை 30% அளவு இழந்தது மதராஸ் மாகாணம் நவம்பர் 1 அன்று.. 1956 நம்பர் 1 க்கு முன் பிரிப்பதற்கு முன் நிலத்தின் வடிவை பார்க்க ஏதுவாக இணைக்கப்பட்டுள்ளது மதராஸ் மாகாணத்தில் நிலத்தின் வரைபடம்.
1954 – புதுச்சேரியிலிருந்து, ஃப்ரான்ஸ் முறைப்படி வெளியேறிய நாள் நவம்பர் 1 இந்தியாவில் கடைசியாக நுழைந்த பெரிய ஐரோப்பிய நாடு ஃப்ரான்ஸ்தான். 1498இல் முதல் ஆளாக வாஸ்கோ-ட-காமா தொடங்கி போர்ச்சுகீசியர்களும், அதன்பின், 1605இல் நெதர்லாந்தைச் சேர்ந்த டச்சுக்காரர்களும், 1611இல் ஆங்கிலேயர்களும், 1620இல் டென்மார்க்கின் டேனிஷ்காரர்களும் இந்தியாவுக்கு வந்து காலூன்றியிருந்த நிலையில், 1674இல்தான் ஃப்ரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியில் காலூன்றினர். இவர்களில் சோழமண்டலக் கடற்கரை, கேரளம் ஆகியவற்றில் சில பகுதிகள், சூரத் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்திய டச்சுக்காரர்கள், திருவனந்தபுரத்தின் அரசர் மார்த்தாண்ட வர்மாவிடம் 1741இல் தோற்றதோடு படிப்படியாக வெளியேறத் தொடங்கி, 1825இல் முழுமையாக வெளியேறிவிட்டனர். தரங்கம்பாடி, வங்கத்தில் ஸ்ரீராம்பூர், நிக்கோபார் தீவுகள் ஆகிவற்றில் ஆதிக்கம் செலுத்திய டேனிஷ்காரர்கள், நெப்போலியப் போர்களின்போது ஏற்பட்ட நெருக்கடிகளால், 1869இல் வெளியேறினர். 1839இல் ஸ்ரீராம்பூரை ஆங்கிலேயர்களுக்கு விற்பனை செய்த, டேனிஷ்காரர்களிடமிருந்து நிக்கோபார் தீவுகளை 1845இல் விலைக்கு வாங்க இத்தாலி முயற்சித்து, பாதியில் நின்றுபோனது. பின்னர் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட இவர்களது பகுதிகள் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டன. புதுச்சேரி, காரைக்கால், சோழமண்டலக் கடற்கரையில் யேனாம், கேரளக் கடற்கரையில் மாஹே, வங்கத்தில் சந்தன்நகர் ஆகிய பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவந்த ஃப்ரெஞ்சுக்காரர்களும், கோவா, டையூ, டாமன், தாத்ரா, நாகர் ஹவேலி ஆகிய பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவந்த போர்ச்சுகீசியர்களும், ஆங்கிலேயர்கள் வெளியேறியபோது இந்தியாவைவிட்டு வெளியேறவில்லை. 1961இல் ராணுவ நடவடிக்கைக்குப்பின்னர்தான் போர்ச்சுகீசியர்கள் வெளியேறினர். (விளக்கமாக டிசம்பர் 19 அன்று பார்க்கலாம்!) ஃப்ரான்சிடமிருந்த மசூலிப்பட்டணம், கோழிக்கோடு, சூரத் ஆகியவை 1947இலேயே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், 1948இல் ஓர் ஒப்பந்தமும் எட்டப்பட்டது. அதன்படி, 1950 மே 2இல் சந்தன்நகரும், 1954 நவம்பர் 1இல் புதுச்சேரி, காரைக்கால், யேனாம், மாஹே ஆகியவையும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த நான்கும் சேர்ந்தது புதுச்சேரியானது. ஃப்ரெஞ்சுப் பாராளுமன்றம் இதற்கான ஏற்பளிப்பு செய்த 1962 ஆகஸ்ட் 16, புதுச்சேரியின் விடுதலை நாளானது.
சேலம் தினம் ( ஆங்கிலேயர்களால் சேலம் நகரம் உருவாக்கபட்ட நாள்) #சேலம்_தினம் (நவம்பர் 1)., 1866 முன்னொரு காலம் சேர மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்த சேலம் பின் மைசூர் சாம்ராஜ்யத்தின் கீழ் வந்தது. (அதாவது இபோது உள்ள கர்நாடகம்) போரில் தோற்ற திப்புசுல்தானிடம் செய்துகொண்ட ஒப்பந்தப்படி சேலம் மாவட்டம் கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் வந்தது. அதன் பின்னரான சேலத்தின் வளர்ச்சியில் ஆங்கிலேயர்களுக்கு முக்கிய பங்கு உண்டு .. இன்றளவும் ஆங்கிலேயர்களின் பெயரிலேயே உள்ள சேலம் பகுதிகளின் வரலாறு இதோ… ➨ 1853 முதல் 1862 வரை சேலம் கலெக்டராக இருந்த ஹேரி அகஸ்டஸ் பிரட்ஸ் [Harry Augustus Bretts] நினைவாக கலெக்டர் ஆபீஸ் முதல் முள்ளுவாடி கேட் வரையிலான சாலைக்கு பிரட்ஸ் ரோடு என பெயரிடப் பட்டது. ➨ 1870 முதல் 1881 வரை கலெக்டராக இருந்த C .T .லாங்லி (C.T.LONGLY) நினைவாக செவ்வாய்பேட்டை மார்க்கெட் பகுதி சாலைக்கு லாங்லி ரோடு என பெயரிடப் பட்டது. ➨ சேலத்தின் மொத்த வியாபார பகுதி இட நெருக்கடியான இடத்தில் செயல் பட்டு வந்தது.1914 முதல் 1919 வரை கலெக்டராக இருந்த லீ ( Leigh) , தனியாக ஒரு மார்கெட் பகுதியை உருவாக்கினார் . அதற்க்கு அவர் பெயரே லீ பஜார் என சூட்டப்பட்டது. ➨ 1857 முதல் 1866 வரை சேலம் மாவட்ட நீதிபதியாக இருந்தவர் ஜே.டபுள்யூ.செரி (J.W.Cherry) . நீதி துறைக்கென சேலம் மாவட்டம் முழுவதும் கட்டிடங்கள் கட்டினார் . சிறப்பாக பணியாற்றிய அவரின் நினைவாக சேலம் அஸ்தம்பட்டி முதல் வள்ளுவர் சிலை வரை உள்ள சாலைக்கு செரி ரோடு (Cherry Road) என பெயரிடப்பட்டது. ➨ காய்கறி , பால் வியாபாரம் செய்யும் மக்களுக்காக அப்போது கலெக்டராக இருந்த பால் (PAUL ) ஒரு மார்கெட் பகுதியை உருவாக்கினார் . அவரின் பெயரிலேயே இன்றும் பால் மார்கெட் என்றே அழைக்கப் படுகிறது. ➨ இன்றைய கருவாட்டுப் பாலம் பகுதியில் வசித்துவந்த கீழ்தட்டு மக்களின் குடிசைகள் வெள்ளம் வரும் போதெல்லாம் அடித்து செல்லப்பட்டன. அப்போது காவல்துறை அதிகாரியாக இருந்த ஜான்சன் (JOHNSON) என்பவர் அந்த மக்களுக்காக ஒரு பேட்டையை (குடியிருப்பு ) உருவாக்கினார் . அது இன்றும் அவர் பெயரால் ஜான்சன்பேட்டை என்று அழைக்கப்படுகிறது. ➨ தமிழகத்தின் பழமையான சோடா கம்பெனி சேலத்தில் ஆங்கிலேய வியாபாரி வின்சென்ட் (VINCENT) என்பவர் உருவாக்கிய வின்சென்ட் சோடா கம்பெனி . பின் இந்தியர் வசம் வந்தது. இன்றும் அந்த கம்பெனி இருந்த பகுதி வின்சென்ட் என்றே அழைக்கிறோம். அதே நேரம் வின்சென்ட் என்ற பிரிட்டிஷ் அதிகாரியின் பெயர் என்றும் சொல்லப் படுகிறது. இவை மற்றும் அன்றி இன்று உள்ள லைன் ரோடு , பென்சன் லைன் , மிலிட்டரி ரோடு , ஜட்ஜ் ரோடு , பேர்லேண்ட்ஸ், கன் பயரிங் ஸ்ட்ரீட் (குண்டு போடும் தெரு) போன்ற பெயர்கள் ஆங்கிலேயர்கள் வைத்தவை .சேலத்தை ஆட்சி செய்த ஆங்கிலேய அதிகாரிகள் பலர் ஓய்வுக்கு பிறகும் சேலத்திலேயே வாழ்ந்து மறைந்தனர். அவர்களின் கல்லறைகள் இன்றும் சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே மாட்டு ஆஸ்பத்ரி அருகிலும், ஏற்காட்டிலும் உள்ளன.
தமிழ்நாடு சட்ட மன்றத்தின் மேலவை கலைக்கப்பட்ட நாள் நவம்பர் 1., 1986 மேலவையின் வரலாறு நீதிக் கட்சியின் ஆட்சி 1920-ல் தொடங்கியதிலிருந்தே மேலவையின் வரலாற்றையும் பேசலாம். 1861-ம் ஆண்டிலிருந்தே மேலவைக்கான வரலாறு இங்கே உண்டு என்றாலும், 1919-ல் மேற்கொள்ளப்பட்ட மாண்டேகு-செம்ஸ்போர்டு அரசியல் சீர்திருத்தமே பம்பாய், வங்காளம், மதறாஸ் மாகாணங்களில் சட்டப்பேரவையோடு கூடிய ஆட்சி முறை உருவாகக் காரணமானது. அப்படி மதராஸ் மாகாணத்தில் அமைந்ததுதான் ‘சட்ட மேலவை’ (Legislative council). அதன் தொடர்ச்சியாக 1920-ல் நடைபெற்ற தேர்தலில் நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்தது. அதன் முதல் கூட்டம், 1921 ஜனவரியில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்றது அடுத்ததாக, 1937-ல் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் இன்னொரு அரசியல் சட்டத்தின் மூலம் மாகாணங்களில் ஈரவைகள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டது. இதன்படி புதிதாக அமைந்ததுதான் ‘கீழவை’ (Legislative Assembly). பழைய அவை அந்தப் பெயரிலேயே நீடித்தது.1937-ல் மேலவை, கீழவை என இரு அவைகளோடு தொடங்கிய நம் மாநிலத்தின் சட்டப்பேரவைப் பயணம் 1986 வரை நீடித்தது. அந்த ஆண்டில்தான் மேலவை கலைக்கப்பட்டது. இதற்கு இரு வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. திவாலான நடிகை ‘வெண்ணிற ஆடை’ நிர்மலாவை மேலவை உறுப்பினராக்க எடுத்த முயற்சி பலனளிக்காததால், மேலவையைக் கலைக்கும் முடிவை அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் எடுத்தார் என்று கூறப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் கருணாநிதி மேலவை உறுப்பினராகத்தான் இருந்தார். அவர் மேலவை எதிர்க்கட்சித் தலைவராவதைத் தடுக்கவே எம்ஜிஆர் கலைப்பு நடவடிக்கையை எடுத்தார் என்று இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. எப்படிப் பார்த்தாலும், அரசியல் காரணங்களுக்காகவே மேலவை கலைக்கப்பட்டது. அதற்கு அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியும் ஆதரவாக இருந்தார். விளைவாக 1986 நவம்பர் 1 முதல் தமிழ்நாட்டில் மேலவை அதிகாரபூர்வமாக இல்லாமல் போனது. அடிசினல் குறிப்பு: நான் சென்னை வந்த புதிதில் அண்ணன் நூருல்லா தயவில் மேலவை செய்தியாளர் மாடத்தில் பல நாள் அமர்ந்து பார்த்துளேன். தினமலருக்கான இருக்கையில் அமர்ந்தபடி ஒரு பக்கம் எம் ஜி ஆர்., ஒரு பக்கம் கலைஞர் கருணாநிதி ஆகியோர் போக்கை கண்காணித்துள்ளேன்
