இன்று உலக சிக்கன நாள்! 1924 அக்., 31ல், இத்தாலியின் மிலன் நகரில், சர்வதேச சேமிப்பு வங்கிகளின் மாநாடு நடந்தது. இதில் பல நாடுகளைச் சேர்ந்த, வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது சிக்கனத்தின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்தும் வண்ணம், அக்.31ம் தேதி உலக சிக்கன தினம் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அக் 31ல் இந்திரா காந்தி காலமான நாளானதால் ஒரு நாள் முன்னதாக கடை பிடிக்கிறோம் இன்று ஒரு நாள் மட்டும் சிக்கனமாக இல்லாமல், வாழ் நாள் முழுக்கவே சிக்கனமாக இருங்கள். தண்ணீர், மின்சாரம்… என்று எல்லாவற்றிலும் சிக்கனமாக இருங்கள். ‘யூஸ் அண்ட் த்ரோ…’ எனும் ‘தூக்கி எறியும்’ வாழ்க்கை முறையை மாற்றி, ‘ரீசைக்ளிங்’ எனும் மறுசுழற்சி முறையை கடைபிடியுங்கள். உங்களின் சிக்கனம்… உங்கள் சந்ததிகளை நலமாக வாழ வைப்பதோடு, உலகத்தின் வாழ்நாளையும் அதிகரிக்கும்!
வானொலி வரலாற்றின் மிகப் புகழ்பெற்றதும், மிக மோசமானதுமாகக் குறிப்பிடப்படும், ‘வார் ஆஃப் த வேர்ல்ட்ஸ் (உலகங்களின் போர்)‘ நாடக ஒலிபரப்பு நிகழ்ந்த நாள் அதாவது புவியில் செவ்வாய்க்காரர்கள்(மனிதர்கள் என்று எப்படிச் சொல்வது?!) இறங்கி தாக்குதல் நடத்துவதான இந்த அறிவியல் புதினத்தை, எச்.ஜி.வெல்ஸ் எழுதி, 1898இல் வெளியிட்டார். வானொலியின் வருகைக்குப்பின், அதில் நாடகங்களை ஒலிபரப்புதல் என்பது 1920களில் தொடங்கி பரவத்தொடங்கியது. (ஆனாலும், கி.மு.முதல் நூற்றாண்டின் ரோமானிய நாடக ஆசிரியரான செனகா-வின் நாடகங்கள் மேடையில் நடிக்கப்படாமல், குரலில் மட்டும் நடிக்கப்பட்டதால், வானொலி நாடகத்தின் முன்னோடியாக இவரே குறிப்பிடப்படுகிறார்.) அமெரிக்காவின் சிபிஎஸ் வானொலியில் ஒலிபரப்புவதற்காக மேற்படி வெல்ஸ் புதினத்தை வானொலி நாடகமாக எழுதிய ஹோவர்ட் கோச், 1938இன் சூழல்களுடன், அமெரிக்காவில் நடப்பதுபோல உருவாக்கியிருந்தார். (அமெரிக்க வரைபடத்தில் அவர் கண்ணை மூடிக்கொண்டு தொட்டு, கதை நடைபெறும் இடமாக நியூஜெர்சியைத் தேர்ந்தெடுத்தார்!) நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பும், நிகழ்ச்சிக்கு இடையில் 40, 55ஆவது நிமிடங்களிலும், அது ஒரு கற்பனை நிகழ்ச்சி என்று அறிவிக்கப்பட்டாலும், அன்றைக்கு வானொலிமீது மக்களுக்கிருந்த நம்பிக்கையால், உண்மையிலேயே புவி தாக்கப்படுவதாக மிகப்பெரிய பதட்டம் ஏற்பட்டது. அதே சமயம் இந்நிகழ்ச்சிக்கு விளம்பரதாரர் கிடைக்கவில்லை. இடையிடையே விளம்பரங்களும் வரவில்லை என்பதால், உண்மையிலேயே நடைபெறும் நிகழ்வுகள் நேரடியாக ஒலிபரப்பப்படுவதாக மக்கள் நம்ப, வானொலி நிலையத்துக்கு ஆயிரக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் வந்தன. முதல் இடைவேளையின்போதே, ஏராளமான காவல்துறையினர் வானொலி நிலையத்தில் குவிய, அவர்களுக்கு நாடகம் என்று விளக்கவேண்டியிருந்தது. இரண்டாம் உலகப்போர் தொடங்கியிருந்து ஏற்கெனவே போர்ச்செய்திகளாக ஒலிபரப்பிக்கொண்டிருந்ததும் பதட்டத்திற்குக் காரணமாக அமைந்தது. பயத்தினால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக ஒருவர் 50,000 டாலர் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடர்ந்தார். அமெரிக்க மக்களில் வெறும் 2 சதவீதம் மட்டுமே இந்நிகழ்ச்சியைக் கேட்டதாகப் பின்னர் வெளியான ஆய்வு, மக்களிடம் வானொலி ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது. மீண்டும் 1949இல் ஈக்வேடாரில், (உள்ளூர்ப் பெயர்களுடன்) இந்நாடகம் ஒலிபரப்பப்பட்டபோது, ஊடுருவல் நிகழ்ந்ததாக நாடகம் குறிப்பிட்ட இடத்திற்கு அந்நாட்டு அரசு ராணுவத்தை அனுப்பிவிட்டது. உலகம் அழியப் போகிறது என்று மதகுருக்கள் பாவங்களுக்கு மன்னிப்பு வழங்கத் தொடங்கிவிட்டார்கள். பின்னர் நாடகம் என்று தெரிந்தவுடன், வானொலி நிலையம் தாக்கப்பட்டது. 1968இல் இந்நாடகம் அமெரிக்காவின் எல்லைப்புற நகரமான பஃபலோ நகரில் ஒலிபரப்பப்பட்டபோது, எல்லைப் பகுதிக்குப் படைகளையே அனுப்பிவிட்டது கனடா!
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத் திறன் படைத்த ஏறக்குறைய 60 ஆண்டுகாலம் திரைப்படத் துறையில் கோலோச்சி வந்த வி. சாந்தாராம் காலமான நாளின்று தமிழ் நாட்டில் டைரக்ஷனில் புதுமையைப் புகுத்திய ஸ்ரீதர், கே.பாலசந்தர் உள்பட பல டைரக்டர்களும், வடநாட்டில் உள்ள பல பிரபல டைரக்டர்களும் கூட, சாந்தாராமை தங்கள் வழி காட்டியாகக் கொண்டிருதாங்களாக்கும். அதையெல்லாம் விட குறிப்பாக சொல்லணுமுன்னா ‘‘படங்களை இயக்குவதற்கு என் மானசீக குருவாகத் திகழ்ந்தவர் வி.சாந்தாராம்’’ என்று புகழாரம் சூட்டிய எம்.ஜி.ஆர்., அவர் காலில் விழுந்து வணங்கினார் என்றால், சாந்தாராம் எப்படிப்பட்ட மாமனிதராக இருக்க வேண்டும்! சாந்தராம் தக்கணூண்டு வயசிலேயே பாபுரா சினிமா கம்பெனியில் சேர்ந்து சினி புரொடக்ஷன், லேப் ஜாப் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் போன்ற டெக்னாலஜிக்களைத் தெரிந்துகொண்டார். அப்பாலே 1929ஆம் ஆண்டு நண்பர்களுடன் சேர்ந்து ‘பிரபாத் பிலிம் கம்பெனி’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். தாதா சாஹேப் பால்கே தயாரித்த ‘ராஜா ஹரிச்சந்திரா’ படத்தின் கதையை 1932இல் ‘அயோத்யா கா ராஜா’ என்ற பெயரில் இயக்கி முதன் முதலில் பெண்களை நடிக்க வைத்தார். அதுக்கு முன்னடி வரை லேடீஸ் வேஷத்தில் ஜெண்ட்ஸ்கள்தான் நடிச்சு வந்தாய்ங்க என்பது குறிப்பிடத்தக்கது மவுனப் பட காலத்திலேயே 6 படங்களை எடுத்திருந்தார். இந்தி, மராத்தி, தமிழ் ஆகிய மொழிகளில் 1934ஆம் ஆண்டு முதல் படம் எடுக்கத் தொடங்கினார். ‘அம்ரித் மந்தன்’ படம் மூலம் புகழ்பெற்றார். பெண்கள் பிரச்சினைகள் குறித்த ‘துனியா ந மானே’, பாலியல் தொழிலில் இருந்து மீள நினைக்கும் பெண்ணின் வாழ்க்கையைச் சொல்லும் ‘ஆத்மி’ (1939) ஆகிய படங்களை அக்காலகட்டத்திலேயே எடுத்துக்காட்டினார். இந்து – முஸ்லிம் ஒற்றுமையை ‘படோஸி’ திரைப்படம் மூலம் வலியுறுத்தினார். 1941இல் பிரபாத் ஸ்டுடியோவை விட்டு விலகி ‘ராஜ்கமல் கலா மந்திர்’ என்ற திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் மூலம் தயாரிக்கப்பட்ட ‘சகுந்தலை’, வர்த்தக ரீதியில் வெளிநாட்டில் திரையிடப்பட்ட முதல் திரைப்படம். இவரது ‘டாக்டர் கோட்னிஸ் கீ அமர் கஹானி’ திரைப்படம் சோஷலிச நாடுகளில் புகழ்பெற்றது. இவரது ‘தோ ஆங்க்கே பாரஹ் ஹாத்’ திரைப்படம் 1957இல் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ‘வெள்ளிக் கரடி’ விருது பெற்றது. நம்ம எம்.ஜி.ஆர். இந்தப் படத்தைத் தமிழில் ‘பல்லாண்டு வாழ்க’ என்ற பெயரிலும் இவரது ‘அப்னா தேஷ்’ படத்தை ‘நம் நாடு’ என்ற பெயரிலும் எடுத்தார். இவர் 1959இல் தயாரித்த ‘ஜனக் ஜனக் பாயல் பாஜே’ திரைப்படம், இந்தியாவின் முதல் கலர் படமாக்கும். அப்பேர்ப்பட்ட சாந்தாராம் இதே அக்டோபர் 30ல் காலமானார்.
ரா.கி என்றழைக்கப்படும் ரா. கிருஷ்ணசாமி நாயுடு காலமான தினமின்று விடுதலைப் போராட்ட வீரர். அதே சமயம் தியாகி என்ற சொல்லுக்கு களங்கம் ஏற்படாத வகையில் சுதந்திர போராட்ட தியாகி விருது வழங்கப்பட்டபோது தியாகத்துக்கு விலை இல்லை, பென்ஷன் வாங்கக்கூடாது என்று ஏற்கமறுத்த உத்தம தலைவர். ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் புது.ராமச்சந்திரபுரம் கிராமத்தில் 1902 ஆம் ஆண்டு விவசாய குடும்பத்தில் பிறந்தார். நான்காம் வகுப்பு வரையில் பள்ளிக் கல்வி பயின்று, பின் பல அறிஞர்களை அணுகி அவர்கள் வழியாகக் கல்வி கற்றுப் புலவரானார். இவர் இசை ஞானமும், பக்தியும் மிகுந்தவர். 1922-ல் காங்கிரஸ் மகாசபையில் சேர்ந்தார். 1930 இல் சட்டமறுப்பு இயக்கம், 1940 இல் தனிநபர் சத்தியாக்கிரகம், 1942 இல் ஆகஸ்ற் இயக்கம் ஆகியவற்றின்போது சிறை சென்றார். தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் மூன்றுமுறை போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றார். 1952 முதல் 1967 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 1968முதல் 1973 வரை சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார். 1924 ஆம் ஆண்டிலிருந்து அன்றைய காங்கிரஸ் இயக்கத்தில் பல பொறுப்புகளை வகித்து இறுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும் உயர்ந்தார். 1926ல் தனது கிராமம் பி.ராமசந்திரபுரத்தில் சேலம் பெ. வரதராஜுலு நாயுடு அவர்கள் தலைமையில் தேசீய காங்கிரஸ் மாநாடு மிகச்சிறப்பாக நடத்தினார். இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக காமராஜர் இருந்தபோது, ரா.கி செயலாளராக பல ஆண்டு பணிபுரிந்தார். 1959 முதல் 1962வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும்,1962 முதல் 1967 வரை அதன் தலைவராகவும் இவர் இருந்தார். 15 ஆண்டுகள் சட்டப் பேரவையில் ஆளும்கட்சி உறுப்பினராக இருந்தார். வருக்கென்று சொந்த வாகனம் ஏதுமில்லை மக்களுடன் சாதாரணமாகப் பேருந்தில் பயணம் செய்வார். பொது வாழ்வில் ஈடுபடுவோர் பொதுப்பணத்தை எவ்வாறு செலவிடவேண்டும் என்பது குறித்து ரா.கி பின்பற்றிய வழிதான் அவரது வாழ்க்கையின் முக்கியமானசெய்தி. மகாத்மா காந்தியின் ஆணைப்படி சிக்கனமாக செலவிடுவதில் காந்தியடிகளின் வாரிசாகவே விளங்கினார் என காமராஜர் புகழாரம் சூட்டினார். வினோபா பாவே பூமிதானக் கொள்கைக்காக ஏழை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர்களுக்கு தனது சொந்த நிலத்தைத் தானமாக வழங்கினார்.இவர், கூட்டுறவு அமைப்புகளில் பல முக்கியப் பொறுப்புகளையும் வகித்தார்.
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் பிறந்த நாள். தமிழ்நாடு லால்குடியில் பிறந்த தமிழ் எழுத்தாளர். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்தில் இருந்து எழுதி வந்தவர். லா.ச.ரா.வின் முதல் கதை 18வது வயதில் வெளியானது. தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிவந்த லா. ச. ராவை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் “புத்ர” என்ற நாவல் எழுத வைத்தது. அவருக்கு 1989-ல் “சாகித்ய அகாதமி விருது” பெற்றுத் தந்த சுயசரிதை “”சிந்தாநதி தினமணி கதிரில் தொடராக வந்தது. லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட “மஹஃபில்”, பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட “நியூ ரைட்டிங் இன் இந்தியா” செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.ச.ரா.வைக் கருதினார். அவருடைய “பாற்கடல்” என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய “புத்ர” மற்றும் “அபிதா” நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் “சிந்தாநதி” அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டது. அவருடைய படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டுவிட்டதால், அவற்றில் பல தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் கிடைக்கின்றன.
