அனஸ்தீஸியா – ஈதர் தினம்! அந்தக் காலத்திலே அதாவது 1840-களுக்கு முன்னாடி நோயாளிகள ஆப்ரேஷன் தியேட்டருக்குள்ளே கூட்டிட்டு போனாலே அம்புட்டுத்தான், பயத்திலேயே அவிங்க பாதி செத்துடுவாங்கன்னு சொல்லலாம். எதுக்குன்னு கேக்கறீங்களா? அப்போதெல்லாம் ஆப்ரேஷனின்போது வலி தெரியாமலிருக்க கொடுக்கப்படும் மயக்க மருந்து கண்டுபிடிக்கப்படவே இல்லை. அதுனாலே அறுவை சிகிச்சை பண்ணும் டாக்டர், ஆப்ரேஷன் தியேட்டருக்குள் ரெண்டு விஸ்கி பாட்டில்களுடன் நுழைவார் என சொல்லப்படுகிறது. ஒரு பாட்டில் பேஷண்டுக்கு—நோயாளி வலியைப் பொறுத்துக்கொள்ள, இன்னொன்னு மருத்துவருக்கு—நோயாளி அதையும் மீறி வேதனையால் கதறுகையில் அதை சகித்துக்கொள்ள அப்படீனு டெனெஸ் ஃப்ராடென் என்பவர் “வேதனையை வென்றுவிட்டோம்” என்ற தன் ஆங்கில புத்தகத்தில் எழுதினார். இது மாதிரி ஆப்ரேஷனின்போது ஏற்படும் வலியை குறைக்க, அறுவை மருத்துவர்களும், பல் மருத்துவர்களும், நோயாளிகளும் எதையும் செய்ய தயாராய் இருந்தாங்க. சீன, இந்திய மருத்துவர்கள் கஞ்சாவையும் ஹசீஷையும் பயன்படுத்தினர். மதுபானத்தைப் போலவே அபினி ஒருவகை போதை பொருளாதலால் அதுவும் உலகத்தின் பல பாகங்களில் பயன்படுத்தப்பட்டது. தியாஸ்காரிதெஸ் என்ற பண்டைய கிரேக்க மருத்துவர், மேன்ட்ரேக்ஸ் என்ற மூலிகையை ஒயினுடன் கலந்து தயாரித்த பானம் மரத்துப் போக செய்யும் தன்மையுடையது என்பதாக உரிமை பாராட்டினார். இவர்தான் முதன்முதலில் “அனஸ்தீஸியா” என்ற வார்த்தையையும் பயன்படுத்தியதாக தெரிகிறது. பிற்காலங்களில் சில மருத்துவர்கள், நோயாளிகளை ஹிப்னாட்டிஸம் என்ற ஒருவகை மயக்கத்தில் ஆழ்த்த முயற்சி செய்திருக்கின்றனர். ஆனாலும், வலி குறைந்த பாடில்லை. இதனால், அறுவை மருத்துவர்களும், பல் மருத்துவர்களும் அரக்கப்பரக்க ஆப்ரேஷன் செய்தனர். ஒரு மருத்துவர் எந்தளவுக்கு வேகமாக ஆப்ரேஷன் செய்கிறாரோ அந்தளவுக்கு அவர் திறமைசாலி என்ற பட்டத்தைத் தட்டிச் சென்றார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். வேகமாக அறுவை சிகிச்சை செய்யும் திறமையுடையவராக இருந்தாலும் நோயாளிக்கு தாங்க முடியாத வலி எடுத்தது. அதனால், மக்கள் தங்களுக்கு எந்த வியாதி வந்தாலும் அவர்கள் மீது கத்தி வைக்கப்படுவதை விரும்பவில்லை. இதன் விளைவாக, அபாயகரமான கட்டி வந்தாலும், பற்களெல்லாம் சொத்தையானாலும் அறுவை சிகிச்சையையோ பல் பிடுங்குவதையோ தேர்ந்தெடுப்பதற்கு பதில் அவற்றை அப்படியே விட்டுவிடுவது நல்லது என நினைத்தனர். 1275-ல், ஸ்பானிய மருத்துவர் ரேமன்ட் லுல்லெஸ், இரசாயனங்களை ஆராய்கையில், எளிதில் ஆவியாகிவிடும், சீக்கிரம் தீப்பிடிக்கும் தன்மையுடைய ஒரு திரவத்தை தயாரித்தார். அதற்கு ஸ்வீட் விட்ரியோல் என பெயர் வைத்தார். 16-ம் நூற்றாண்டில், பேரசெல்ஸஸ் என்று பொதுவாக அறியப்பட்ட ஸ்விட்ஸர்லாந்தை சேர்ந்த மருத்துவர், அந்தத் திரவத்தை கோழிகளில் பரிசோதித்துப் பார்த்தார். அதை முகர்ந்தவுடன் கோழிகள் தூங்கி விட்டது மட்டுமன்றி, அவை வலியை உணராததையும் கவனித்தார். ஆனால், இவரும் லுல்லெஸைப் போலவே மனிதரில் இதைப் பரிசோதிக்க வில்லை. அந்தத் திரவத்திற்கு 1730-ல் ஃப்ரோபேனியுஸ் என்ற ஜெர்மானிய மருந்து தயாரிப்பாளர் ஈதர் என பெயர் சூட்டினார். அது இன்றும் அந்த பெயரிலேயே அழைக்கப்படுகிறது. ஈதர் என்ற அந்த கிரேக்கச் சொல்லுக்கு, “விண்ணுலகத்து” என அர்த்தம். ஆனால் 112 வருடங்களுக்குப் பிறகே, ஈதருக்கு இருக்கும் மரத்துப்போக செய்யும் சக்தி முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, புழக்கத்திற்கு வந்தது. பின்னர் 1846-ஆம் வருடம் அக்டோபர் திங்கள் 16ம் நாள் அமெரிக்காவில் நாட்டில் போஸ்டன் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பல் மருத்துவர் டாக்டர்.வில்லியம் தாமஸ் கீரின் மார்ட்டன் என்பவர் ஈதர் எனும் வாயுவின் மூலம் எட்வர்டு கில்பர்ட் அபார்ட் என்பவருக்கு மயக்க கொடுக்க, டாக்டர்.ஜான் கொலின்ஸ் வாரண் என்பவர் வெற்றிகரமாக நோயாளியின் கழுத்தில் இருந்து ஒரு கட்டியை அறுவை சிகிச்சையை செய்து எடுத்தார்.இதுதான் முதலாவதாக பொதுமக்கள் அறியும் வண்ணம் மயக்கம் கொடுத்து அறுவை சிகிச்சை செய்த நிகழ்ச்சியாகும். இந்த நாள்தான் உலக #அனஸ்தீஸியா தினமாக (ஈதர் தினம்) கொண்டாடப்படுது.
உலக உணவு தினம்! உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அக்டோபர் 16ம் தேதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1979ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் இந்த தினம் அறிவிக்கப்பட்டது. உயிர் வாழ உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. இது மனித உரிமையும் கூட. எவரொருவரும் பசியால் யாரும் வாடக் கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலக உணவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உணவு தொடர்பான பிரச்னையில் மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், உலக அளவில் வறுமையை ஒழிப்பதும் இந்தத் தினத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. உணவில் மாவு, புரதம், தாது, கொழுப்பு, உயிர் சத்து (விட்டமின்) போன்றவை கலந்து இருப்பதே சரிவிகித உணவாகும். உயிர் சத்தும் தாது உப்புகளும் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக வங்கி தகவல்படி ஆண்டு தோறும் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் சுமார் 7 கோடி பேர் வறுமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். வளரும் நாடுகளில் நிலவும் விலைவாசி காரணமாக உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகை பெருக்கம், உற்பத்தி குறைவு போன்றவை, விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கின்றன. ஏழைகளுக்கு 3 வேளை உணவு என்பது எட்டாக்கனியாக இருக்கிறது. எனவே சமச்சீரான வளர்ச்சியை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். எதிர் காலங்களில் பட்டினியால் சாவு என்பதை தவிர்க்க உறுதிமொழி ஏற்க வேண்டும். DON’T waste food.
வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தினம் பாஞ்சாலங்குறிச்சியையும், கயத்தாறையும் உலக வரைப்படத்தில் நிரந்தரமாகப் பதித்த பெருமைக்குரியவர் வீரபாண்டிய கட்டபொம்மன். ‘வீரம் மிகுந்தவர்’ என்ற பொருள்படும் ‘கெட்டி பொம்மு’ என்ற தெலுங்கு வார்த்தைகள் ‘கட்டபொம்மன்’ என்று நாளடைவில் மாறின. இந்த வீரப்பரம்பரையில் 1760ம் ஆண்டு சனவரி 3ம் நாள் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். தனது 30வது வயதில் பாளையக்காரராகப் பொறுப்பேற்ற வீரபாண்டியன், ஆங்கிலேயக் கிழக்கிந்திய நிறுவன அதிகாரிகளுடன் அடிக்கடி மோத வேண்டியிருந்தது. இந்த நிறுவனம் விதித்திருந்த வரியைக் கட்ட மறுத்ததால், இந்த மோதல்கள் முற்றுகைகளாக, சண்டைகளாக உருவெடுத்தன. இவற்றில் கட்டபொம்மன் படையும், ஆங்கிலேய நிறுவனமும் மாறி மாறி வெற்றி பெற்றன. 1799ம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தில், ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1ம் தேதி புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு, கிழக்கிந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டார். 1799ம் ஆண்டு, இதே அக்டோபர் 16ம் தேதி வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டு, வீரமரணம் அடைந்தார்.
புகழ்பெற்ற கர்நாடக இசை மேதை செம்பை கைதயநாத பாகவதர் நினைவு நாள் செம்பை வைத்தியநாத ஐயர் என்ற பெயராலும் அறியப்பட்ட இவர். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக இசையுலகில் திகழ்ந்து பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றார். மிக கம்பீரமாக பாடும் ஆற்றலை பெற்ற பாகவதரின் குரல்வளம் கேட்போரை வியக்க வைக்கும்படி இருந்தது. இவருக்கு கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் ஏராளமான சீடர்கள் இருந்து வந்துள்ளனர்.3ஆம் வயதில் முறையாக தன் தந்தையிடமிருந்து இசை கற்கத் தொடங்கிய செம்பை, 1904 ஆம் ஆண்டு 8 ஆம் பிராயத்தில் தமது அரங்கேற்ற கச்சேரியை தன் சகோதரனுடன் நிகழ்த்தினார். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக இசையுலகில் திகழ்ந்து பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றார். மற்ற கலைஞர்களை ஊக்குவித்து உயர்வடைய செய்வதில் செம்பை மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.”ரக்ஷ மாம்”, “வாதாபி கணபதிம்”, “பாவன குரு” போன்ற பாடல்களை பலமுறை தன் கச்சேரிகளில் பாடி பிரபலப்படுத்தினார். ஜய-விஜயன், யேசுதாஸ், டி. வி. கோபாலகிருஷ்ணன், பி. லீலா, வி.வி.சுப்பிரமணியம், போன்றோர் கருநாடக இசையில் இவரின் சீடர்கள்.இவரின் மறைவிற்கு பிறகு இவரின் பெயரில் பல இசை விழாக்கள் நடைபெறுகின்றன (உதாரணமாக குருவாயூரில் ஒவ்வொரு ஆண்டும் செம்பை சங்கீத உற்சவம் நடைபெறுகிறது.
நவரச திலகம் என அழைக்கப்பட்ட மூத்த நடிகர் ஆர்.முத்துராமனின் நினைவு நாள் இன்று. இவர் நவரச நாயகன் கார்த்திக்கின் அப்பாவாக்கும் . எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களிலும், ஶ்ரீதர், கே.பாலச்சந்தர் போன்ற முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடித்தவர் ஆர்.முத்துராமன். ஷூட்டிங்குக்காக ஊட்டிக்குச் சென்றிக்கும்போது மூச்சுத் திணறி இறந்துபோன ஆர்.முத்துராமன் பற்றி அப்போது அவருடன் நடித்த சிவகுமார் பகிர்ந்த சேதி இது: 1981 – அக்டோபர் – 16ம் தேதி – காலை 6.30 மணி இடம் : ஊட்டி – கால்ப் காட்டேஜ்… ‘ஆயிரம் முத்தங்கள்’ படத்திற்கு ஒப்பனை செய்து கொண்டிருந்தேன். உதவியாளர் ஓடிவந்து ’’சார்,முத்துராமன் சார் ரோட்ல மயக்கமா கிடக்கறார் சார்’ என்றான். ஓடிச்சென்று காரில் ஏற்றி ஊட்டி டாக்டரிடம் காட்ட, உயிர்போய் அரைமணி ஆகிவிட்டது என்றார். மீண்டும் காட்டேஜ்… காரிலிருந்து உடம்பை நிமிர்த்தி இறக்கும்போது அவர் மூச்சுக்காற்று குபுக்கென என்மேல் பட, அய்யோ உயிரோட இருக்கறவரை செத்துப்போயிட்டார்னு டாக்டர் சொல்லிட்டாரே’ அண்ணா, அண்ணா எழுந்திருங்கண்ணா’ என்று நானும் நடிகை ராதா, அவரது அம்மா, மூவரும் யூகலிப்டஸ் ஆயிலை அவர் உடம்பு முழுக்க பூசி தேய்த்தவாறு கதறினோம். அவர் பேசவில்லை. போய்விட்டார். ரத்த அழுத்த நோய் பல ஆண்டுகளாக அவருக்கு இருந்தது. படத்தில் ராதாவுக்கு அப்பாவாக நடிக்க வந்தவர் நான் அதற்கு முந்தைய நாள் காலை ஓடியதைப் பார்த்து ஆர்வத்தில் ஓடியிருக்கிறார். ஊட்டியில், 7000 அடி உயரத்தில் அதிகாலையில், பனிமூட்டம் அதிகம் இருக்கும்போது, ஆக்சிஜன் மிகவும் குறைவாக இருக்கும். அதனால் ஓடியவர் மூச்சுத்திணறி விழுந்து விட்டார். வங்காள நடிகரைப் போல் கம்பீரத்தோற்றம், காந்தக் கண்கள், கணீரென்ற குரல், கனிவான உள்ளம், எவரையும் குறை சொல்லாத, எல்லோரையும் நேசித்த, சகோதரக் கலைஞன் இதோ நம்மை விட்டு அவசரமாகப் புறப்பட்டுப் போய்விட்டார். தாங்க முடியாத சோகத்துடன் இந்தச்செய்தியை சென்னையிலுள்ள அவர் வீட்டுக்குத் தெரிவித்தோம். ‘தாயே உனக்காக’, ‘காவல் தெய்வம்’, ‘ராஜ ராஜ சோழன்’, ‘காரைக்கால் அம்மையார்’, ‘திருமாங்கல்யம்’, ‘தீர்க்க சுமங்கலி’ என அவரும் நானும் 15 படங்களுக்கு மேல் சேர்ந்து நடித்தோம். ஒரு மூத்த சகோதரனாக என் மீது அன்பைப் பொழிவார். அதிமுக அமைச்சராக அன்று இருந்த ஆர். எம். வீரப்பன் அவர்கள் மூலம் அரசு போக்குவரத்து மினி பஸ் ஒன்றை ஏற்பாடு செய்து, டி.ஜி.பி. ஆக இருந்த பரமகுரு அவர்கள் அனுமதியுடன், வழியில் பரிசோதனைத் தடைகள் தவிர்த்து காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல் மாலை 4 மணிக்கு ஊட்டியிலிருந்து புறப்பட்டு மறுநாள் விடியற்காலை 5.00 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தோம். சிவாஜி அண்ணனும் திரளாக, திரை உலகத்தினரும் காத்திருந்தனர். சென்ற வாரம் சிரித்துக்கொண்டு ஊட்டி போனவர், சடலமாய்த் திரும்பிய கோரக்காட்சியைக் கண்டதும், மயங்கிச் சரிந்துவிட்டார் திருமதி. சுலோசனா. ‘டேய் தம்பி ! அந்தக் காலத்தில் முருகன் வேஷத்தில, நாடக மேடையில நடிச்சிட்டு இருக்கும்போது, விஸ்வநாத தாஸ் உயிரை விட்டமாதிரி, முத்துராமன், படப்பிடிப்புக்குப் போய் ‘ஜாக்கிங்’ பண்ணும்போது உயிரை விட்டிருக்கான். நல்ல சாவு. யாரும் வருத்தப்படாதீங்க’ என்று சிவாஜி கூறியது, அதிர்ந்து இருண்டு போயிருந்த எங்களுக்குச் சற்று ஆறுதலாக இருந்தது. – அப்படீன்னார்
நாடக ஆசிரியராகவும், கவிஞராகவும் புகழ் பெற்ற ஐரிஷ் எழுத்தாளரான ஆஸ்கார் வைல்டு பர்த் டே இந்நாளில் அவரின் மேற்கோள்களில் சில ஆந்தை குழும நண்பர்கள் கவனத்துக்கு “வாழ்க்கையில் இரண்டே துயரங்கள்தான். ஒன்று, ஒருவருக்கு தேவைப்படுவது கிடைப்பது இல்லை. மற்றொன்று, ஒருவருக்கு தேவையில்லாதது கிடைக்கின்றது.” “எந்த மனிதனும் தனது கடந்த காலத்தை திரும்ப வாங்கும் அளவுக்கு பணக்காரனாக இல்லை.” “நாம் அனைவருமே பள்ளத்தில்தான் இருக்கிறோம். ஆனால், நம்மில் சிலரே நட்சத்திரங்களைப் பார்க்கிறார்கள்.” “வெற்றி என்பது ஒரு அறிவியல்; அதற்கான நிபந்தனைகள் உங்களிடம் இருந்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.” “உங்கள் இதயத்தில் அன்பை வைத்துக் கொள்ளுங்கள்; அன்பு இல்லாத வாழ்க்கை, சூரிய ஒளியற்ற, இறந்த மலர்களைக் கொண்ட தோட்டத்தைப் போன்றது.” “நமது செயல்களில் நாம் செய்யும் தவறுகளுக்கு நாம் கொடுத்துள்ள பெயரே அனுபவம் என்பதாகும்.” “ஒரு மனிதன் தனது எதிரிகளைத் தேர்வு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க முடியாது.” “பெண்களைப் படைத்ததன் நோக்கம், அவர்களின் மீது அன்பு செலுத்துவதற்காகவே தவிர அவர்களை புரிந்துகொள்வதற்காக அல்ல.” “சிறிய அளவிலான நேர்மை ஓர் ஆபத்தான விஷயம்; பெரிய அளவிலான நேர்மை முற்றிலும் ஆபத்தான விஷயம்.”
