இன்றைய முக்கிய நிகழ்வுகள் (அக்டோபர் 15)

உலக கை கழுவும் தினம்! “சுத்தம் சுகம் தரும், சுகாதாரம் நாட்டைக் காக்கும்” என்பது நம் முன்னோர்களின் வாக்கு. நோயில்லா மக்களைக் கொண்ட நாடே வல்லரசாகும். ஒரு நாட்டின் ஆரோக்கியமே அந்நாட்டின் வளம். அதனால்தான் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்கிறது பழமொழி. ஆக செல்வங்களில் எல்லாம் முதன்மையான செல்வம் நோயற்ற வாழ்வுதான்.இத்தகைய செல்வத்தைப் பெற நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன. சுற்றுப்புறச் சூழலை சிறந்ததாக்கி, நம் உடலை நோய் அணுகாமல் தடுக்கும் சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம். அதற்கான வழிமுறைகளில் மிக முக்கியமானது நம் கைகளை சுத்தப்படுத்துவது. அதாவது கை கழுவுவது. கைகளை கழுவுவதால் நோய் தீருமா என்ற எண்ணம் சிலருக்குத் தோன்றலாம். ஆம். காற்றின் மூலமும், நீரின் மூலமும், மற்ற பொருட்களைத் தொடுவதன் மூலமும் பரவும் நோய்கள் ஏராளம்.இப்படிப்பட்ட நோய்கள் பரவாமல் தடுக்க கைகளை கழுவுதல் மிகவும் முக்கியமானது. பழங்காலத்தில் வீட்டின் முன்புறத்தில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்திருப்பார்கள். வெளி இடங்களுக்குச் சென்று வருபவர்கள், அந்த நீரில், கை கால்களை சுத்தம் செய்து பிறகே வீட்டிற்குள் நுழைவார்கள். ஆனால் இந்தப் பழக்கம் தற்போது மறைந்துபோய்விட்டது.நாம் முன்னோர்களையும் மறந்தோம், அவர்கள் கற்றுத் தந்த நல்ல பழக்க வழக்கங்களையும் அடியோடு மறந்துவிட்டோம். இன்று உலக அரங்கில் சுகாதாரத்தை முன்னிறுத்தி சொல்லப்படும் விஷயங்களில் கை கழுவும் முறைதான் முதன்மையாக உள்ளது. அதன் ஒரு குரலாகத்தான் உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ம் நாளை உலக கை கழுவும் நாளாக அறிவித்துள்ளது. இந்நாளில் கை கழுவும் முறை பற்றியும், அதனால் உண்டாகும் நன்மை பற்றியும் உலகம் முழுவதும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.இந்த கை கழுவும் முறையை சரியாகப் பின்பற்றாமல் பல நோய்களுக்கு ஆட்பட்டு அவதியுறுவது வளரும் நாடுகள்தான். நம் இந்தியா போன்ற ஆசிய நாடுகள், உணவை கைகளால் எடுத்து உண்ணும் வழக்கம் கொண்டுள்ளது. இந்தியாவில், கைகளை ஒழுங்காக கழுவாமல் சாப்பிடுவதால் உண்டாகும் வயிற்றுப்போக்கு நோயால் வருடத்திற்கு 12 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இதே காரணத்திற்காக உலக அளவில் 409 லட்சம் குழந்தைகள் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. இதனால் வளரும் நாடுகள் மற்றும் பின்தங்கிய நாடுகளில் கை கழுவுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. மேலும் குழந்தைகள் மணலில் விளையாடும் போதும், மலம் கழித்துவிட்டு வரும்போதும், கை கால்களில் பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொள்கின்றன. இவற்றை சரியான முறையில் கை, கால்களை சுத்தம் செய்வதால் மட்டுமே அழிக்க முடியும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அடிக்கடி உண்டாகும் வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், வாந்தி, மயக்கம், குடல்புண் போன்ற பல நோய்களுக்கு அடிப்படைக் காரணம் அவர்கள் கைகளை ஒழுங்காக சுத்தம் செய்யாமல் இருப்பதே. ஸ்டெபைலோகாக்கஸ் ஆரியஸ் (Staphylococus Aureus) என்ற கிருமி நகங்களின் இடுக்குகளில் ஒட்டிக்கொண்டு உணவருந்தும் சமயம் உட்சென்று குடலில் பல்கிப் பெருகி நோயைத் தோற்றுவிக்கிறது. எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்?

காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். பிறகு தான் பல் துலக்க வேண்டும்.

மலம் கழித்தபின் சோப்பு போட்டு கைகளை கழுவுவது நல்லது.

எந்த வேலை செய்தாலும், உடனே கைகழுவுதல் வேண்டும். சமைத்த பின்பு கூட பெண்கள் கைகளை கழுவுவது நல்லது.

வாகனம் ஓட்டி வந்தபின்பும், உடனே கை கழுவுதல் நல்லது.

குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவு கொடுப்பதற்கு முன்பும், அவர்களது கைகளை நன்கு சுத்தமாக கழுவிய பின்பே கொடுக்க வேண்டும். இந்த பழக்கத்தை அவர்கள் சீராக கடைப்பிடிக்கும்படி செய்ய வேண்டும்.

கைகளை அவசர அவசரமாக 2-3 வினாடிகளில் கழுவக் கூடாது. குறைந்தது 30 வினாடியாவது கை கழுவுவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதிக ரசாயனம் கலந்த சோப்புகள், கிரீம்களை பயன்படுத்தக்கூடாது.

கைகளை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். நக இடுக்குகளில் தண்ணீர் விட்டு கழுவ வேண்டும். இந்த முறைகளைக் கடைப்பிடித்து வந்தாலே, நோய்கள் நெருங்காத வண்ணம் 60 விழுக்காடு தடுக்கலாம்.

சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம்! வீட்டு வேலைகளை மட்டுமல்லாமல் விவசாயம், மீன் பிடித்தல், மேய்ச்சல் உள்ளிட்ட தொழில்களையும் கிராமப்புற பெண்கள் செய்கின்றனர். உலகளவில் பெண்களின் வேலைவாய்ப்பில் மூன்றாவது இடத்தில் விவசாயத்துறை உள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் 60 சதவீத பெண்கள் விவசாயப் பணிகளில் ஈடுபடுகின்றனர். உலக உணவு உற்பத்தியில் கிராமப்புற பெண்களின் பங்கு தான் அதிகம். காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பூக்கள் உள்ளிட்ட விவசாயத் துறையின் முதுகெலும்பாக இவர்கள் திகழ்கின்றனர். உலகளவில் பெண்களின் வேலைவாய்ப்பில், மூன்றாவது இடத்தில் விவசாயத்துறை உள்ளது. ஆப்ரிக்கா, தெற்கு ஆசிய நாடுகளில் 60 சதவீத பெண்கள், விவசாயப் பணிகளில் தான் ஈடுபடுகின்றனர். கிராம பெண்களின் வேலை நேரம், ஆண்களை விட கூடுதலாக உள்ளது. இவர்களை அங்கீகரிக்கும் விதத்தில் 2008ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 15ஆம் தேதி சர்வதேச கிராமப்புற பெண்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கிராமப்புற பெண்களுக்கு உணவு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர இத்தினம் வலியுறுத்துகிறது.

சீரடி சாய்பாபா மறைந்த நாளின்று சீரடி சாய்பாபா மகா சமாதி அடைந்து விட்டார் என்று கூறப்பட்டாலும், இன்றும் அவர் நம்மோடுதான் இருக்கிறார். நம்மை காத்து, நல்வழிபடுத்துகிறார். அவர் மீது மாறாத நம்பிக்கையும் அன்பும், பக்தியும் கொண்டவர்கள் அவரது தரிசனத்தைப் பெற்றுள்ளனர். நிறைய பேரிடம் அசரீரியாக பேசியுள்ளார். லட்சக்கணக்கான பக்தர்கள் என்ன வேண்டுகிறார்களோ… அதையெல்லாம் நிறை வேற்றி கண்கண்ட தெய்வமாக அவர் திகழ்கிறார். தன் பக்தனை அவர் ஒரு போதும் கைவிட்டதே இல்லை. இதுவே இறை அவதாரங்களில் சாய்பாபா தனித்துவம் மிக்கவர் என்பதற்கு உதாரணமாகும். பாபா இப்போதும், இந்த வினாடி கூட நம்மோடு தான் இருக்கிறார். அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் விதங்களில் இருந்து இதை உணரலாம். 1918-ம் ஆண்டு இதே அக்டோபர் 15-ந்தேதி அவர்தம் உடலில் இருந்து பிரிந்து எல்லைத்தாண்டியதும் சிலரது கனவில் தோன்றி பேசினார். தாஸ்கானு என்ற பக்தர் கனவிலும் தோன்றினார். “இப்போது மசூதி சிதைந்து விட்டது. வியாபாரிகளும், கடைக்காரர்களும் என்னை மிக, மிக கொடுமைப்படுத்தி விட்டார்கள். எனவே நான் மசூதியை விட்டுப் போகிறேன். இதை உனக்குத் தெரிவிக்கவே நான் இங்கு வந்தேன். வா… வந்து என்னை வாசனை மலர்களால் நிரப்பு” என்று தாஸ்கானுவிடம் பாபா தெரிவித்தார். இந்த கனவைக் கண்டபோது தாஸ்கானு பண்டரிபுரத்தில் இருந்தார். பாபா விடைபெற்று விட்டார் என்பதைப் புரிந்து கொண்ட அவர், தனது பக்தர்களுடன் உடனே சீரடிக்குப் புறப்பட்டு வந்தார்.பாபாவின் மகாசமாதி மீது மிக அழகான, பிரமாண்ட மலர் மாலையை போர்த்தினார். பிறகு அவர் அங்கேயே அமர்ந்து பஜனை செய்தார். பாபா மகாசமாதி ஆகியிருந்த மூன்றாவது நாள் அதாவது அக்டோபர் 18-ந்தேதி ஏராளமான ஏழை-எளியவர்களுக்கு அன்னதானம் செய்தார். 13-ம் நாள் முக்கிய சடங்குகள் நடந்தன. உபாசினி கங்கை கரைக்கு சென்று ஆயிரக்கணக்கான வர்களுக்கு உடை வழங்கி அன்னதானம் செய்தார். சீரடியில் இருந்த முஸ்லிம்கள் சந்தனக் கூடு ஊர்வலம் மேற்கொண்டனர். இப்படி சடங்குகள், சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்த நிலையில் கோபர்கவுன் கோர்ட்டு, சாய்பாபாவின் உடமைகளை கையகப்படுத்திக் கொண்டது. பாபா சட்டைப் பையில் இருந்த 16 ரூபாயையும் கோர்ட்டு எடுத்துக் கொண்டது. இதையடுத்து பாபாவின் மகா சமாதியை பராமரித்து, நிர்வகிக்க ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டது. அதுதான் பல்வேறு மாற்றங்களைக் கண்டு, இன்று “சீரடி சாய்சன்ஸ்தான்” ஆக வளர்ச்சிப் பெற்றுள்ளது.பாபா மகாசமாதி அடைந்த முதல் சில ஆண்டுகளுக்கு அவர் சமாதி மீது பக்தர்கள் மலர் வைத்து வழிபட்டனர். இந்த நிலையில் பிரபல ஓவியரும், பாபாவின் தலை சிறந்த பக்தர்களில் ஒருவருமான சாம்ராவ் ஜேகர் என்பவர் சாய்பாபா படத்தை வரைந்தார். அந்த படம் அச்சு அசல் அப்படியே சாய்பாபா உயிருடன் இருப்பது போல இருந்தது. சாய் கமிட்டி உறுப்பினர்கள் அனைவருக்கும் அந்த படம் மிகவும் பிடித்துப் போனது. அந்த படத்தை பாபா மகாசமாதி முன்பு பீடத்தில் வைத்து வழிபட தொடங்கினார்கள். சுமார் 35 ஆண்டுகள் அந்த படம் பாபாவின் மகா சமாதியை அலங்கரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் சமாதி மந்திரில் உயிரோட்டமாக இருக்கும் பளிங்கு கல் சிலை போல் நாடெங்கும் உருவாகி அருள் பாலிக்கிறது.

சோவியத்தில் புகழ்பெற்ற தாய்மண் அழைக்கிறதுசிலை திறக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் ஸ்டாலின்க்ராட் யுத்த வீரர்களின் நினைவாக இது அமைக்கப்பட்டது. தற்போது வால்காக்ராட் என்று அழைக்கப்படும் ஸ்டாலின்க்ராடைக் கைப்பற்றவும், முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியின் தொழில்துறையை அழிக்கவும், ஜெர்மானியப் படைகள் நடத்திய இந்த யுத்தம், போர்களின் வரலாற்றிலேயே மிக அதிக உயிர்ப்பலி ஏற்படுத்திய யுத்தங்களுள் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது. ஸ்டாலின்க்ராட் நகரின் மக்கள் தீவிர கம்யூனிஸ்ட்கள் என்று கூறிய ஹிட்லர், அந்நகரின் அனைத்து ஆண்களையும் கொல்லவும், பெண்கள், குழந்தைகள் அனைவரையும் வெளியேற்றவும் உத்தரவிட்டிருந்தான். ஆனால், உள்ளே நுழைந்த ஜெர்மானியர்களை எதிர்த்து, துப்பாக்கியைத் தூக்க முடிந்த அனைத்து சோவியத் மக்களும் களத்தில் இறங்கிப் போராட, மிகக்குறுகிய இடைவெளியில் ‘வீட்டுக்குவீடு’ நடக்கும் போராகியது. சோவியத்துக்கு மிகப்பெரிய இழப்புகளை ஏற்படுத்தினாலும், 164 நாட்களில் ஜெர்மானியப் படைகள் சரணடைந்தன. இந்த யுத்தத்தின் நினைவாக நிறுவப்பட்ட இந்த 279 அடி உயர(மேடை சேர்க்காமல்) சிலை, 1989வரை உலகின் மிக உயரமான சிலையாக இருந்தது. ஒரு கையில் உயர்த்திய வாளுடன், மறு கையால், தன் மக்களை அழைக்கும் ரஷ்யத் தாயை உருவகப்படுத்தும் இச்சிலை, ஓரடிவரை தனிமனுள்ள கான்க்ரீட்டால், உள்ளீடற்றதாக உருவாக்கப்பட்டுள்ளது.. இன்றும், உலகின் மிகஉயரமான பெண் சிலை இதுதான் என்றாலும் கூட, உயரமான சிலைகளில் 9ஆம் இடத்திற்கு வந்துவிட்டது. அதாவது, இதற்குப்பின் 8 பெரிய சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்பதுடன், அனைத்தும் ஆண்களுக்கான சிலைகளே! அத்துடன், கடவுளர்கள் போன்றோர் மட்டுமின்றி, ஆண்களுக்கே சிலைகள் அமைக்கப்பட்டாலும், சுதந்தரதேவி போன்று அடையாளப்பூர்வமான சிலைகளே பெரும்பாலும் பெண்களுக்கு அமைக்கப்படுகின்றன.

முடிசூடா மன்னன் மருதநாயகத்தின் நினைவு நாள்.சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மண்ணின் விடுதலைக்காக வாழ்ந்த மருதநாயகத்தின் வரலாறு இன்றைய தலைமுறையினர் அறியாத ஒன்றாகும். மதுரையில் கான்பாளையம், கான்சா மேட்டுத்தெரு, கான்சாபுரம், மம்சாபுரம், கான்சாகிப்புரம் ஆகிய பெயரெல்லாம் இந்த மன்னனின் பெயரைத் தாங்கி, இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன ஆங்கிலேயரை எதிர்த்து ஆட்சிபுரிந்த குற்றத்திற்காகத் தொழுகையின்போது, சூழ்ச்சியால் மருதநாயகம் என்ற யூசுப்கானை கைது செய்து, மதுரையில் 1764ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் நாள் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். இன்று அவரது 260ஆவது நினைவுநாளாகும். மக்கள் விரும்பும் தனிப்பெரும் ஆட்சியாளனாக மதுரையின் நீர்நிலைகளைச் சீரமைத்து அவ்வப்போது இங்கு நிகழ்ந்துவந்த கலவரங்களை ஒடுக்கியும் பல்லாண்டு காலமாக ஆக்கிரமிக்கப்பட்டுக் கிடந்த மீனாட்சியம்மன் கோயில், அழகர் கோயில் நிலங்களைக் கைப்பற்றி மீண்டும் அக்கோயில்களின் நிர்வாகத்திடமே ஒப்படைத்து மிகச்சிறந்த ஆட்சியை வழங்கியவர்தான் கான்சாகிபு என்ற கம்மாந்தோகான் என்ற மருதநாயகம். ஒரு காலக்கட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகிப் போன மருதநாயகத்தை 1764 அக்டோபர் 13ஆம் நாள் சிறைப்பிடித்தனர். பிறகு வெள்ளையர்களால் சித்ரவதை செய்யப்பட்டு, மதுரைக்கு மேற்கே இன்றைய காளவாசலுக்கு அருகேயுள்ள சம்மட்டிபுரத்திலிருந்த மாமரத்தில் தூக்கிலேற்றப்பட்டார். தூக்கிலேற்றப்பட்ட கயிறு இரண்டு முறை அறுந்துவிழுந்தது. மூன்றாவது முறையாகவே மருதநாயகம் தூக்கிலேற்றப்பட்டு கொல்லப்பட்டதை ஆங்கிலேய அரசு உறுதி செய்தது. அத்துடன் விடாமல் அவரது உடலை கைகள், கால்கள், தலை, உடல் எனத் தனித்தனியாக அறுத்து தலையை திருச்சிக்கும், கைகள் பாளையங்கோட்டைக்கும், கால்கள் பெரியகுளத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு புதைக்கப்பட்டன. உடலை மட்டும் தூக்கிலிட்டப்பட்ட இடத்தின் அருகே புதைத்தனர். அந்த இடத்தில்தான் அவரது நினைவாக பள்ளிவாசல் எழுப்பப்பட்டு, இஸ்லாமிய மக்களால் வழிபாட்டுத் தலமாக பராமரிக்கப்பட்டுவருகிறது. 1808ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்தப் பள்ளிவாசல், ‘மகான் முகம்மது யூசுப்கான் தர்ஹா’ என்ற பெயரில் அவரது உடல் புதைக்கப்பட்ட கல்லறையோடு இன்றைக்கும் மதுரை சம்மட்டிபுரத்தில் கம்பீரமாக எழுந்து நிற்கிறது.

உலக வெண்மைத்தடி தினம் வெண்மைத்தடி பயன்படுத்தும் முறை என்பது 1931ஆம் ஆண்டிலிருந்து உலகம் முழுவதும் நடைமுறைக்கு வந்தது. உலகெங்கும் வாழும் இலட்சக்கணக்கான பார்வையற்ற மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் இத்தினம் அக்டோபர் 15ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் பிக்ஸ் என்பவர் 1921ஆம் ஆண்டில் ஒரு விபத்தின்போது தனது பார்வையை இழந்தார். இவர் சாலையை கடக்கும்போது தனது கையில் வெள்ளைத் தடியைப் பயன்படுத்தினார்.

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாளான இன்றைய அக்டோபர் 15ஐ உலக மாணவர்கள் தினமாக கொண்டாடி வருகிறோம் . மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் மாணவர்களுக்கான கல்வியை மேம்படுத்துவதிலும், மாணவர்கள் சமூதயாத்தில் தனது வாழ் நாள் முழுவதும் நிலை நாட்டியவர் . விங்ஸ் ஆஃப் ஃபயர்’, ‘மை ஜர்னி’ ‘பற்றவைக்கப்பட்ட மனங்கள்’ ‘இந்தியா 2020′ போன்ற புத்தகங்களின் மூலம் தனது எழுத்து திறமையையும் உலகத்திற்கு வித்திட்டார் இதன் வெளிப்பாடாக 2010 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அப்துல் கலாம் பிறந்த அக்டோபர் 15 “உலக மாணவர் தினம்” என்று அறிவித்தது.

இசைமேதை டி.ஆர்.பாப்பா காலமான நாளின்று தஞ்சாவூர் ராதாகிருஷ்ண பிள்ளை அப்படீங்கற நாமகரணம் கொண்ட டி.ஆர்.பாப்பா, 1923ம் ஆண்டு பிறந்தவர். தனது தந்தை ராதாகிருஷ்ண பிள்ளை மற்றும் கும்பகோணம் வடிவேல் பிள்ளை ஆகியோரிடம் இசை கற்ற பாப்பா1965ம் ஆண்டு திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார். சுமார் 60க்கும் மேற்பட்ட படங்களுக்கு அவர் இசையமைச்சிருக்கார். சிந்துபைரவி ராகத்தில் அவர் இசையமைத்த சின்னஞ்சிறு பெண் போலே, சித்தாடை உடை உடுத்தி என்ற பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் இன்றும் கூட ஒலித்துக் கொண்டுள்ளது. இவரது இரவும் பகலும் படம் மூலம்தான் தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் என்று புகழப்பட்ட ஜெய்சங்கர்திரையுலகில் காலடி எடுத்து வைச்சார். டி.ஆர்.பாப்பாவும், சீர்காழி கோவிந்தராஜனும் சேர்ந்து புகழ் பெற்ற பலமெல்லிசைப் பாடல்களை கொடுத்துருக்காய்ங்க. சீர்காழி கோவிந்தராஜனின் குரலில், டி.ஆர்.பாப்பாவின் இசையில் உருவான அபிராமி அந்தாதி பாடல் கேசட் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. திமுக தலைவர் கருணாநிதியின் வசனத்தில் உருவான பல படங்களுக்குஇசையமைத்துள்ளார் பாப்பா.கலைஞர் மு.கருணாநிதிக்கும் இவருக்கும் நீண்டகால நட்பு உண்டு. எத்தனையோ தடவை அவர் இவருக்கு உதவி புரிந்து வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார். 1989-இல் முதலமைச்சராக ஆனதும் இவரை அரசு இசைக் கல்லூரியில் கௌரவ இயக்குநராக நியமித்தார். பிறகு அவரது ஆட்சி கலைக்கப்பட்ட போது முதன்முதலாக ராஜினாமா செய்தது இவர்தான். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முதல்வரான போது கலைஞர் பழையனவற்றை மறக்காமல் இவரை மீண்டும் தமிழ்நாடு இசைக் கல்லூரி இயக்குநராக பதவியேற்க வைத்தார். கலைமாமணி, இசைச்செல்வம், கலைச் செல்வம், இசைப் பேரறிஞர் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். தேவாரம், திவ்ய பிரபந்தம், அபிராமி அந்தாதி, கந்தர் அலங்காரம், திருவெம்பாவை, வேல் விருத்தம் உள்பட பல காவியங்களுக்கு இசையமைத்த பெருமை இவருக்கு உண்டு. நல்லவன் வாழ்வான், மல்லிகா, குமார ராஜா, அருணகிரி நாதர், எதையும் தாங்கும் இதயம், அன்பு, தாய் மகளுக்குக் கட்டிய தாலி, ஆசை, விளக்கேற்றியவள், டீச்சரம்மா, ஏன், விஜயபுரி வீரன், பிறந்த நாள், காதல் படுத்தும் பாடு, அவரே என் தெய்வம், யார் ஜம்புலிங்கம், மறு பிறவி, ரங்கோன் ராதா, வைரம், குறவஞ்சி, அவசர கல்யாணம், ராஜா ராணி, இரவும் பகலும், மாப்பிள்ளை, மகனே நீ வாழ்க போன்ற படங்கள் உட்பட அறுபது படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழில் மட்டுமல்லாது சில சிங்கள, மலையாளப் படங்களுக்கும் இசையமத்துள்ளார். இதே 15.10.2004-ஆம் ஆண்டு தனது 81-ஆவது வயசில் மாரடைப்பால் காலமானார்.

குடும்பக் கதை டைரக்டர் பீம்சிங் பர்த் டே டுடே தனக்குப் பிடிச்ச ஆக்டர், ஆக்டரஸ்களின்ன் பெயர் திரையில் ஒளிரும்போது, கைத்தட்டி விசிலடித்துப் பாராட்டுவதே சாமானியன் ரசிக மனம். அப்படி 60-களில் ஒரு இயக்குநருக்கும் அந்தப் பாராட்டு கிடைச்சுது. அத்தகைய பெருமைக்குரிய நட்சத்திர இயக்குநர் ஏ.பீம்சிங். ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்க – ஏ.பீம்சிங் டைரக்‌ஷனில்’ என்ற கொட்டை எழுத்துகளுடன் அன்றைய செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியானால் போதும், அடுத்த சில நாட்களில் அந்தப் படத்தின் வியாபாரம் அம்புட்டு விநியோகப் பகுதிகளுக்கும் விற்றுத் தீர்ந்துடும். இந்த அதிசயத்தை சிவாஜி – பீம்சிங் கூட்டணி தொடர்ந்து நிகழ்த்தி வந்துச்சு. குடும்ப உறவுகளை மையப்படுத்தும் உணர்ச்சிக் கொந்தளிப்பு மிக்க கதைகளை, பிரபலமான நடிகர்களை வைத்து இயக்கி தொடர் வெற்றிகளைக் கொடுத்தார் பீம்சிங். குடும்பம் இல்லாத பீம்சிங்கின் படங்களே இல்லை. காட்சிகளில் நிறைந்திருக்கும் உணர்ச்சிப் போராட்டம், பாடல்களிலும் இடம்பெற்றுவிடுவது அவரது படங்களின் தனித்த அம்சம். 60-களின் சமூக வாழ்க்கையில் மதிப்பளிக்கப்பட்ட மதிப்பீடுகள் அனைத்தையும் கட்டிக்காக்கும் அரணாகவே இவரது படங்கள் இருந்தன. கவர்ச்சி நடனங்களும் சண்டைக் காட்சிகளும் ரசிகர்களுக்குப் போதையூட்டத் தொடங்கிவிட்ட அந்தக் காலத்தில் அவற்றை அடியோடு தவிர்த்துப் படமெடுத்த வகையில் பீம்சிங்கின் தர நிர்ணயத்தைத் தெரிந்துகொள்ளலாம் ’‘ஒரு சினிமா எப்படி இருக்கணும் தெரியுமா. குடும்பத்தோட எல்லாரும் வந்து பாக்கும்படி இருக்கணும்’’ என்ற வார்த்தையைச் சொல்லித்தான் கதையைத் தேர்வு செய்யவே இறங்குவாராம் பீம்சிங். ஒரு கதையை வெறும் கதையாகப் பார்க்காமல், அதை ரத்தமும் சதையுமாக, உணர்வுகளும் உணர்ச்சிகளும் உலவுகிற கதாபாத்திரங்களாக, உயிர்களாகவே பார்த்தார் பீம்சிங்! வங்கக் கதையோ மராட்டியக் கதையோ கேரளக் கதையோ ஆந்திரத்துக் கதையோ… எதுவாக இருந்தாலும் தமிழ் வண்ணம் பூசி தமிழ் சினிமாவுக்குத் தக்கபடி கதை சமைப்பதில் வல்லவர் பீம்சிங் என்று இவர் இயக்கிய படமொன்றுக்கு விமர்சனம் எழுதின பத்திரிகைகள். அநேகமாக, திரைத்துறையில் நடிகர் திலகத்தின் முதல் ரசிகன் பீம்சிங்காகத்தான் இருக்கவேண்டும். சிவாஜியை ரசித்து ரசித்துப் படங்களை எடுத்தார். ‘பார்த்தால் பசி தீரும்’, ‘படித்தால் மட்டும் போதுமா’, ‘பாலும் பழமும்’ என்று ஒவ்வொரு விதமான கேரக்டர்கள் உருவாக்கினார். ஒவ்வொரு படத்திலும் சிவாஜி நடப்பதற்கும் நடிப்பதற்குமான காட்சிகளை வெகு கச்சிதமாக அமைத்தார். பீம்சிங்கை, சிவாஜி ‘பீம்பாய்’ என்றுதான் அழைப்பாராம். ‘என்ன, பீம்பாய்… இந்த ஸீனுக்கு இது போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?’ என்று பீம்சிங்கின் தோளில் கைபோட்டபடி ஸ்டைலாகக் கேட்பாராம் சிவாஜி. ’ஓகே’ என்றதும் அப்படியே இருவரும் கட்டிக்கொள்வார்களாம். அவர்களின் நட்புக்கு, கமலாம்மா திருஷ்டியே சுற்றிப்போடுவாய்களாம்! பீம்சிங்கின் ஒவ்வொரு படமும் தலைமுறைகள் கடந்தும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. வாழ்ந்துகொண்டேதான் இருக்கும். இன்று பீம்சிங்கிற்கு 101-வது பிறந்தநாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!