சுப்ரீம் கோர்ட்டை அணுகினோம். த.வெ.க.வின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது என ஆதவ் அர்ஜுனா கூறினார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் பற்றி சி.பி.ஐ. விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. இந்த விசாரணையை கண்காணிக்க ஒரு சிறப்பு குழு அமைக்கப்படும். அந்த குழுவுக்கு ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமை தாங்குவார். அந்த குழுவில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள். இந்த சிறப்பு குழு , சிபிஐ மேற்கொள்ளும் விசாரணையை தொடர்ந்து கண்காணிக்கும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், கரூர் சம்பவ வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு, பிறப்பித்த உத்தரவுகள் பற்றி த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, வலி மிகுந்த பயணத்தில் நாங்கள் இருக்கிறோம். வாயில் இருந்து வார்த்தைகள் வரமுடியாமல் தவிக்கின்றன. இது ஒரு நெருக்கடியான காலக்கட்டம் ஆகும்.
கரூரில் விஜய் நடத்தியது முதல் கூட்டம் அல்ல. காவல்துறை சொன்ன 3 மணி முதல் 10 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் சரியாகத்தான் அவர் சென்றார். எங்களை கரூர் எல்லையிலேயே போலீசார் வரவேற்றனர். இது எந்த மாவட்டத்திலும் நடக்கவில்லை. அவர்களே எங்களை திட்டமிட்ட ஒரு இடத்தில் கொண்டு நிறுத்தினார்கள். மாவட்ட எல்லைக்கு வந்து அவர்கள் ஏன் வரவேற்க வேண்டும்?.
சம்பவம் குறித்த தமிழக அரசின் விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. சம்பவம் நடந்ததில் இருந்து தி.மு.க. நாடகம் ஆடியது. எங்கள் கட்சியை முடக்க முயற்சிகள் மேற்கொண்டது. அந்த தினத்தில் இருந்து தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் எங்களால் எதுவும் செய்ய இயலவில்லை. இருந்தாலும் விஜய் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அறிவித்தார்.
த.வெ.க.வுக்கு எதிராக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் த.வெ.க. மீது கடுமையான பதிவுகளை நீதிபதி முன்வைத்தார். விஜய் குற்றவாளி போல ஆக்கப்பட்டார். இந்த நிலையில்தான் நாங்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகினோம். இங்கு த.வெ.க.வின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பு, 3 பேர் குழு,. சி.பி.ஐ. விசாரணை ஆகிய 3 கோரிக்கைகளுக்கும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. சரியான தீர்ப்பு எங்களுக்கு கிடைத்து இருக்கிறது. இதன்மூலம் உண்மையும், நீதியும் கிடைக்கும்.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களையும் தத்து எடுப்பது என விஜய் முடிவு செய்துள்ளார். அவர்களது வாழ்க்கை முழுவதும் த.வெ.க. பயணிக்கும் என்று அவர் கூறினார்.
