உலக அஞ்சல் தினம் (World Post Day) 1874-ஆம் ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மொத்தம் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1969-ஆம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் இந்த தினம் குறித்து முடிவெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலக அஞ்சல் தினத்தின் வரலாறு 1840-ஆம் ஆண்டுக்கு முந்தையது ஆகும். இங்கிலாந்தில், சர் ரோலண்ட் ஹில் ஒரு அமைப்பைக் கொண்டு வந்தார். இதன் மூலம் கடிதங்களின் தபால்களை முன்கூட்டியே செலுத்த வேண்டும். உள்நாட்டு சேவையில் ஒரு குறிப்பிட்ட அளவிலான எடை கொண்ட அனைத்து கடிதங்களுக்கும் ஒரே விகிதங்கள் வசூலிக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், உலகின் முதல் தபால் தலையையும் இவர் அறிமுகப்படுத்தினார். இருப்பினும், 1863-ஆம் ஆண்டில், யுனைடெட் ஸ்டேட்ஸ் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மாண்ட்கோமெரி பிளேர் என்பவர், பாரிஸில் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தார். அதில் 15 ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அழைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் பரஸ்பர ஒப்பந்தங்களுக்கான பல பொதுவான கொள்கைகளை வகுக்க ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் குறைபாடு என்னவென்றால், சர்வதேச அஞ்சல் ஒப்பந்தத்திற்கு எதுவும் நிறுவப்படவில்லை. அதன் பின்னர், 1874-ஆம் ஆண்டு பெர்னில் , வட ஜெர்மன் கூட்டமைப்பின் மூத்த அஞ்சல் அதிகாரி ஹென்ரிச் வான் ஸ்டீபன் ஒரு சர்வதேச அஞ்சல் தொழிற்சங்கத்திற்கான திட்டத்தை வகுத்தார். அவரது ஆலோசனையின் அடிப்படையில், சுவிஸ் அரசாங்கம் செப்டம்பர் 15, 1874 அன்று பெர்னில் ஒரு சர்வதேச மாநாட்டை நடத்தியது, அதில் 22 நாடுகள் தங்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதே ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி, பொது அஞ்சல் ஒன்றியத்தை நிறுவுவதன் மூலம் உலக அஞ்சல் நாள் தொடங்கப்பட்டது. 1878-ஆம் ஆண்டில், அதன் பெயர் யுனிவர்சல் தபால் ஒன்றியம் என்று மாற்றப்பட்டது. 1874-இல் கையெழுத்திடப்பட்ட பெர்ன் ஒப்பந்தம், சர்வதேச அஞ்சல் சேவைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பரிவர்த்தனை மற்றும் கடித பரிமாற்றத்திற்கான ஒரே அஞ்சல் பிரதேசமாக ஒழுங்குபடுத்துவதில் வெற்றி பெற்றது. இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9-ஆம் தேதி உலக அஞ்சல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) மறைந்த தினம் அர்ஜென்டீனாவைச் சேர்ந்த மாபெரும் புரட்சியாளர், மருத்துவர் மற்றும் பல புரட்சிப் போர்களில் பங்குப்பெற்ற ஒரு போராளியும்தான் சே குவேரா. மார்க்சியவாதியான இவர் உலகெங்கிலும் மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கும், வர்க்கச் சுரண்டல்களுக்கும் எதிராகப் போராடி அதில் வெற்றியும் கண்டார். கொரிலா போர் முறையில் வல்லவராகத் திகழ்ந்த இவர், அது குறித்தப் புத்தகங்களையும் எழுதினார். பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து இவர் கியூபாவின் விடுதலைக்காகப் போராடினார். மேலும் கியூபாவின் மத்திய வங்கியிலும் 14 ஆண்டு காலம் பணியாற்றியுள்ளார்.பின்னர், காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் பொலிவியா போன்ற நாடுகளை அமெரிக்காவின் பிடியில் இருந்து விடுவிப்பதற்காக, 1965ம் ஆண்டில் தனது பதவிகளை எல்லாம் ராஜினாமா செய்துவிட்டு, கியூபாவில் இருந்து ரகசியமாக வெளியேறினார்.இதை மோப்பம்பிடித்த அமெரிக்காவின் சிஐஏ உளவாளிகள் பொலிவியாவில் வைத்து சே குவேராவை கைது செய்தனர். ஏற்கனவே கியூபாவில் தங்களை அடித்து ஓடவிட்டதால் சே குவேரா மீது கோபத்தில் இருந்த அமெரிக்கா, அவரை அங்கேயே சுட்டுக்கொல்ல தீர்மானித்தது. பள்ளி ஒன்றில் வைத்து 1967 அக்.9ம் தேதி சே குவேரா சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் நினைத்திருந்தால் டாக்டர் பட்டத்தை வைத்து, கை நிறைய சம்பாதித்திருக்கலாம். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு அடிமைப்பட்ட மக்களுக்காக தன் கைகளில் துப்பாக்கியை ஏந்தி போராடியதாலேயே இன்றுவரை நமது நெஞ்சத்தில் வாழ்கிறார் சே குவேரா. அப்பேர்பட்ட சே குவேராவின் பொன்மொழிகள் சில 1. நீ ஊமையாய் இருக்கும்வரை, உலகம் செவிடாய் தான் இருக்கும். 2. நான் சாகடிக்கப்படலாம். ஆனால், தோற்கடிக்கப்படமாட்டேன். 3. “எங்கெல்லாம் அடக்கப்படுபவர்களின் குரல் கேட்கிறதோ? அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்.” 4. விதைத்துக் கொண்டே இரு. முளைத்தால், மரம். இல்லையெனில், உரம். 5. “இந்தப் பூமியில் உள்ள பெரிய பணக்காரர்களின் அனைத்துச் சொத்துக்களையும் விட, ஒரு மனிதனின் வாழ்க்கை பல மில்லியன் மடங்கு மதிப்புமிக்கது என்பதை நாங்கள் மிகச் சரியாகக் கற்றுக்கொண்டோம்.” 6. புரட்சி என்பது பழுத்தவுடன் விழும் ஆப்பிள் பழம் அல்ல, நீங்கள்தான் அதை விழ வைக்க வேண்டும். 7. அதிகமாக சாதிப்பதற்கு, முதலில் நீங்கள் அனைத்தையும் இழக்க வேண்டும். 8. இந்த உலகின் எந்தப் பகுதியிலும், எந்தவொரு நபருக்கும் எதிராக எந்தவொரு அநீதி இழைக்கப்பட்டாலும், முதலில் அதை ஆழமாக உணர முயற்சி செய்யுங்கள். அதுவே ஒரு புரட்சியாளரின் மிக அழகான பண்பாகும். 9. சொல்லின் சிறந்த வடிவம் செயல். செயல்கள் அற்ற வார்த்தைகள் மதிப்பற்றவை.
- நான் சிலுவையில் அறையப்படுவதை விட, என் கைக்கு எட்டக்கூடிய அனைத்து ஆயுதங்களையும் கொண்டு நான் போராடுவேன்.
- சதுரங்கம் என்பது மனித மூளைக்கு கல்வியையும் பயிற்சியையும் அளிக்கும் ஒரு ஆற்றல்வாய்ந்த வழியாகும்.
- இளைஞர்கள் எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும். இந்த உலகம் முழுவதும் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி விவாதித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்.
- “நீ என்னைக் கொல்ல வந்திருக்கிறாய் என்று எனக்குத் தெரியும். சுடு கோழையே, நீ ஒரு மனிதனை மட்டுமே கொல்லப் போகிறாய்.”
- மனிதர்களை மிருகங்களாக மாற்றுவதே ஏகாதிபத்தியத்தின் இயல்பு.
- ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரப்பட்டால், நீயும் என் தோழன்.
வாழ்க்கையில் ஏற்படும் பல தடைகளுக்குப் போராட்டம் குணம் என்பது மிகவும் அவசியம். அந்தப் போராட்ட குணங்களுக்கு, சே குவேராவின் வார்த்தைகள் அதைவிடவும் மிகவும் அவசியமாகும்.
கணக்கு கேட்ட எம் ஜி ஆர் @ கழகம் பிளந்த தினம் அரசியலிலும், திரைப்படத்துறையிலும் நெருங்கிய நண்பர்களாக இருந்த கருணாநிதிக்கும், எம்.ஜி. ஆருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. “எம்.ஜி.ஆர். அமைச்சராக விரும்பினார். சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டால், அமைச்சராகலாம் என்று நான் சொன்னேன். அதனால் எம்.ஜி.ஆருக்கு என் மீது வருத்தம் ஏற்பட்டது” என்று பின்னர் கருணாநிதி தெரிவித்தார். எப்படி இருப்பினும், இந்த கருத்து வேற்றுமை, தி.மு. கழகத்தைப் பிளவுபடுத்தும் அளவுக்கு வளர்ந்தது.இதையடுத்து 1972 அக்டோபர் 8 ந்தேதி திருக்கழுக்குன்றத்திலும், பின்னர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலும் நடை பெற்ற கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசும்போது, தி.மு.கழகத்தில் ஏற்பட்டிருந்த பிளவு பகிரங்கமாக வெடித்தது. எம்.ஜி.ஆர். பேசுகையில் கூறியதாவது:- “எம்.ஜி.ஆர். என்றால் தி.மு.க.; தி.மு.க. என்றால் எம்.ஜி.ஆர். என்று சொன்னேன். உடனே ஒருவர், “நாங்கள் எல்லாம் தி.மு.க. இல்லையா?” என்று கேட்டார். நான் சொல்கிறேன். நீயும் சொல்லேன். உனக்கும் உரிமை இருக்கிறது. முன்பொரு முறை காமராஜர் அவர்களை “என் தலைவர்” என்றும், அண்ணா அவர்களை “வழிகாட்டி” என்றும் சொன்னேன். தலைவர்கள் பலர் இருப்பார்கள்.ஆனால் கட்சிகளுக்கு கொள்கைகளைத் தருகிற வழிகாட்டி ஒருவர்தான் இருக்க முடியும். அண்ணா அவர்கள்தான் தி.மு.க. வழிகாட்டி. காங்கிரசுக்கு மகாத்மா காந்திதான் வழிகாட்டி. கழக நண்பர்களுக்குச் சொல்கிறேன், நான் மக்களை சந்திக்கிறவனே தவிர, தலைவர்களைத் தேடிப்போய், வாழ்க்கையை உயர்த்திக்கொள்ள வேண்டிய நிலையில் என் தாயும், தமிழகமும், அண்ணாவும் வைக்கவில்லை. நான் யாருக்கும் பயந்து கொள்கையை மாற்றிக் கொண்டவன் அல்ல. அப்படிப்பட்ட தேவையும் இல்லை. தேர்தல் நேரத்தில், “தி.மு.க.வுக்கு வாக்குத் தாருங்கள். இன்னென்ன காரியங்களை நிறைவேற்றுவோம், ஊழல் இருக்காது, நேர்மை இருக்கும்” என்று சொன்னேனே. அப்படிப்பட்டவைகள் கழகத்தில் இருக்கவேண்டும் என்று விரும்புவதற்கு, சொல்வதற்கு எனக்கு உரிமை இல்லையா? மந்திரிகள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்குக்காட்ட வேண்டும் என்று சொல்கிறோம். கணக்கு அங்கே காட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இவர்களின் சொந்தக்காரர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற கணக்கை தி.மு.கழகப் பொதுக்குழு ஏன் கேட்கக் கூடாது? ராமச்சந்திரன் சினிமாவில் நடிக்கிறான்;சம்பாதிக்கிறான். நீ சம்பாதித்தால் அதற்குக் கணக்குக்காட்டு. மாவட்டச் செயலாளர்கள், கிளைக்கழகச் செயலாளர்கள் வட்டச் செயலாளர்கள் பதவிகளில் இருப்பவர்கள், குடும்பத்திற்கு வாங்கியிருக்கிற சொத்துக்கள் இருந்தால் கணக்குக் காட்டவேண்டும். அவை எப்படி வந்தன என்று விளக்கம் சொல்ல வேண்டும். பொதுக்குழுவில் நிறைவேற்றி, அதற்காகக் குழு அமைத்து, அதனிடம் ஒவ்வொருவரும் தங்கள் கை சுத்தமானது என்பதை கூறி, மக்கள் முன் நிரூபிக்கலாம். நிரூபிக்க முடியாதவர்கள் மக்கள் முன்னால் நிறுத்தி, அவர்கள் தவறு செய்திருந்தால் தூக்கி எறிவோம். அண்ணாவின் கொள்கைக்கு ஊறு தேடியவர்களை எல்லாம் மக்கள் முன் நிறுத்தி தூக்கி எறிவோம்.”என் எம்.ஜி.ஆர். பேசினார். இதுதான் அ தி மு க வுக்கு அச்சாரம் போட்ட ஸ்பீச்!! இந்த பேச்சு தமிழகம் எங்கும் பரவிய தினமின்று.
விடுதலைப் போராட்ட வீரரும், தலைசிறந்த நிர்வாகி எனப் போற்றப்பட்டவருமான தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் (M.Bhaktavatsalam) பிறந்த தினம் இன்று பிரபல வக்கீலாக இருந்தவர் நாடு விடுதலை பெற்றதும், தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 1946 முதல் 1962 வரை பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். 1963-ல் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். தனது ஆட்சிக்காலத்தில், ஏராளமான மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டுவந்தார். குறிப்பாக திருக்கோயில்கள் நிதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள், மாணவர் விடுதிகள் உள்ளிட்ட சமுதாய நலத் திட்டங்களைத் தொடங்கலாம் என சட்டத் திருத்தம் கொண்டுவந்தவர். ரூ.5 லட்சம் நிதியுதவி செய்பவர்களின் பெயரிலேயே கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவித்து, பணக்காரர்கள் பலரையும் கல்வி வளர்ச்சியில் பங்கேற்கச் செய்தார்.
எஸ். எஸ். சந்திரன் காலமான தினமின்று இந்த சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் காலூன்றி போயிருந்தாலும் நம்ம தமிழ்நாட்டை சேர்ந்த நகைச்சுவை நடிகர் மற்றும் தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகத்திறமை கொண்ட எஸ். எஸ். சந்திரனை ரசிகர்கள் இப்ப வரைக்கும் மறக்க முடியாது. ஒரு சிலர் தான் இறந்தாலும் அவர்களுடைய புகழ் குறையாமல் இருந்து வருகிறது. அதில் ஒருவராக எஸ். எஸ். சந்திரன் இருந்து வருகிறார். 15 வயதில் நடிக்கத் தொடங்கிய இவர் 700 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் தமிழகத்திலும் அதை சுற்றியுள்ள பகுதியிலும் பின்னர் இலங்கையிலும் நடத்தப்பட்ட பல நாடகங்களில் இவர் நடித்திருக்கிறார்.எஸ். எஸ். சந்திரன் சிவாஜி கணேசன் காலம் முதல் ரஜினி கமல் உட்பட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து இருந்தாலும் தன்னுடைய தனித்துவத்தினால் அனைவரின் மனதிலும் நல்ல இடத்தைப் பிடித்திருக்கிறார். வில்லன் நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் இவர் நடித்திருந்தாலும் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் இவர் தனித்துவமாக தான் வாழ்ந்திருக்கிறார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான ராஜ்யசபாவில் தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். எஸ்.எஸ்.சந்திரன் வில்லன் நடிகராக நடித்து இருந்தாலும் அதிலும் காமெடியை செய்து தனித்துவமான திறமையை வெளிக்காட்டி இருக்கிறார். இவர் நடித்த திரைப்படங்களில் குறிப்பிட்டது என்று எதுவும் சொல்ல முடியாது. நடித்த படங்களில் எல்லாம் வித்தியாசமான நடிப்பை வெளிக்கட்டி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவரது மிகவும் பிரபலமான படங்களில் சகாதேவன் மகாதேவன், தங்கமணி ரங்கமணி, பாட்டி சொல்லை தட்டாதே மற்றும் கதைநாயகன் சந்திரன் போன்ற திரைப்படங்களையும் இவர் தயாரித்து தன்னுடைய தயாரிப்பாளர் முகத்தையும் ரசிகர்களுக்கு காட்டியுள்ளார். 2010-ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அக்டோபர் 09-ம் நாள் அவர் காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்து இருந்தாலும் அவருடைய புகழ் இன்னமும் நீடிக்கிறது.
