நவராத்திரி முதல் நாளிலிருந்து ஜி.எஸ்.டி. வரி குறைப்பு தொடங்கும்: பிரதமர் மோடி..!

ஜி.எஸ்.டி. 2.0 நாட்டுக்கான ஆதரவு மற்றும் வளர்ச்சிக்கான இரட்டை மருந்து ஆகும் என பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடி டெல்லியில் தேசிய ஆசிரியர் விருது பெற்றவர்களுடன் இன்று உரையாடினார். அப்போது அவர், ஜி.எஸ்.டி. வரி எளிமையாக்கப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களால், இந்தியாவின் துடிப்பான பொருளாதாரத்திற்கு 5 புதிய ரத்தினங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன என குறிப்பிட்டார்.

ஜி.எஸ்.டி. 2.0 நாட்டுக்கான ஆதரவு மற்றும் வளர்ச்சிக்கான இரட்டை மருந்து ஆகும். 21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அது துணையாக இருக்கும் என கூறினார்.

இந்தியாவை சுயசார்புடன் உருவாக்க அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தங்களை உருவாக்குவது என்பது முக்கியம். இதனை டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தன்று கூறினேன்.

இன்றுள்ள உலகளாவிய சூழலில், காலத்திற்கேற்ப மாற்றங்களை கொண்டு வராமல், நம்முடைய நாட்டுக்கான சரியான இடம் ஒன்றை நாம் தர முடியாது என்று கூறியுள்ளார். தீபாவளி மற்றும் சத் பூஜைக்கு முன்பு இரட்டை மகிழ்ச்சி இருக்கும் என நாட்டு மக்களுக்கு நான் வாக்குறுதி அளித்திருந்தேன்.

இதன்படி, ஜி.எஸ்.டி. வரி குறைப்பு நவராத்திரி முதல் நாளில் இருந்து தொடங்கும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியா முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது.

நாட்டின் மறைமுக வரி அமைப்பில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வந்த இந்த ஜி.எஸ்.டி. 4 அடுக்குகளை கொண்டிருந்தது. அதன்படி 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என 4 வகையான வரி விகிதத்தின் கீழ் அனைத்துப்பொருட்கள் மற்றும் சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டன.

ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்து 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்த ஜி.எஸ்.டி. விகிதங்களை குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது. பிரதமர் மோடி கடந்த மாதம் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது செங்கோட்டையில் ஆற்றிய உரையில் இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

பிரதமர் அறிவிப்பை தொடர்ந்து ஜி.எஸ்.டி. வரி விகிதக்குறைப்பை நிதியமைச்சகம் வெளியிட்டது. இதனை அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் எனவும், ஜி.எஸ்.டி 2.0 எனவும் அறிவித்தது.

அதன்படி 4 அடுக்கு ஜி.எஸ்.டி. 2 அடுக்காக குறைக்கப்படுகிறது. வெறும் 5 மற்றும் 18 சதவீத அடுக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் வகையில் வரி விகிதம் மாற்றப்பட்டு உள்ளது. அதேநேரம் சிகரெட் மற்றும் புகையிலை, பான் மசாலா போன்ற பாவப்பொருட்கள் மற்றும் சொகுசு கார் போன்ற உயர் ரக ஆடம்பர பொருட்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றுக்காக 40 சதவீத சிறப்பு வரி அடுக்கும் அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்த வரி குறைப்பு மூலம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை கணிசமாக குறையும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மக்களின் வாழ்க்கை செலவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று ஜவுளி, உரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கைவினைப்பொருட்கள், வாகனங்கள், வேளாண்மை, சுகாதாரம் மற்றும் இன்சூரன்ஸ் ஆகிய துறைகள் உத்வேகம் பெறும் நிலையும் உருவாகி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!