சர்வதேச நாய் வளர்ப்பு தினம் இது மனிதர்களுக்குத் துணையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் நாய்களைப் பராமரிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாய் வளர்ப்புக்கு ஆதரவாகப் பேசும் அதே வேளையில், நாய்கள் கடிக்க நேரிடுவது மனிதர்களால் ஏற்படும் நெருக்கடிகளே எனவும், அதைத் தடுக்க விதிகளை முறையாக அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது. மனித-நாய் உறவின் வரலாறு மற்றும் நன்மைகள் மனிதர்களும் நாய்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் பயனளிக்கும் வகையில் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். ஆரம்ப காலத்தில் வேட்டைக்கும், பாதுகாப்பிற்கும் நாய்கள் மனிதர்களுக்கு உதவின. அதற்குப் பதிலாக மனிதர்கள் அவற்றுக்கு உணவு மற்றும் இருப்பிடத்தை வழங்கினர். நாய்கள் மனிதர்களின் உடல்மொழி, முகபாவனைகளை நன்கு புரிந்துகொள்ளும். அதேபோல, நாய்களின் குரைப்பொலி மற்றும் சைகைகளையும் மனிதர்களால் புரிந்துகொள்ள முடியும். நாய் வளர்ப்பின் நன்மைகள்: உடல்நலம்: நாய் வளர்ப்பது ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், மன அழுத்த ஹார்மோன்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மனநலம்: தனிமை உணர்வைக் குறைத்து, மகிழ்ச்சியை அதிகரிக்கிறது. நாய்களுடன் விளையாடுவது மற்றும் வெளியே அழைத்துச் செல்வது ஒரு நல்ல உடற்பயிற்சியாக அமைகிறது. பாதுகாப்பு: வீடுகளுக்கும், மனிதர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதில் நாய்கள் சிறப்பாக செயல்படுகின்றன. நடைமுறைப் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் நாய் வளர்ப்பு பல நன்மைகளைத் தந்தாலும், தற்காலத்தில் சில முக்கியப் பிரச்சினைகள் உருவாகியுள்ளன. மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான மோதல்கள்: கடிப்பதும் இறப்புகளும்: உலக அளவில் நாய் கடிப்பதால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ரேபிஸ் நோயால் பலர் உயிரிழக்கின்றனர். பராமரிப்புச் சிரமங்கள்: நாய்களைப் பராமரிப்பது ஒரு குழந்தையை வளர்ப்பதற்குச் சமமான செலவுகளையும், பொறுப்புகளையும் கோருகிறது. தனி உணவு, குளியல், கழிவுகளை அகற்றுவது, மருத்துவ செலவுகள் எனப் பல சிரமங்கள் உள்ளன. இது குடும்பங்களில் சண்டைகளையும், பெரியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையே மனக்கசப்புகளையும் ஏற்படுத்துகிறது. சமூகப் பிரச்சினைகள்: தெருநாய்கள்: சமூக விரோதிகளால் விஷம் வைத்துக் கொல்லப்படுவது போன்ற வன்முறைக்கு ஆளாகின்றன. அதிகாரிகளின் மெத்தனம்: மாநகராட்சி அதிகாரிகள், தடைசெய்யப்பட்ட நாய் வகைகளை வளர்ப்போர் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. வாய்மூடி (muzzle) இல்லாமல் நாய்களைப் பொது இடங்களுக்கு அழைத்துச் செல்வது பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. சமூக அந்தஸ்து: சிலர் தங்கள் சமூக அந்தஸ்தைக் காட்ட வெளிநாட்டு நாய்களை வளர்க்கின்றனர். இது நாட்டு நாய்களைப் புறக்கணிப்பதாக அமைகிறது. மொத்தத்தில் நாய் வளர்ப்பு ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றது. இதில் நன்மைகளும் தீமைகளும் உள்ளன. நாய் வளர்ப்பதில் விருப்பம் இல்லாத பெற்றோர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் மீது அதைத் திணிக்காமல், விருப்பமுள்ளவர்களே அதனை அருகிலிருந்து கவனித்துக்கொள்ள வேண்டும். இது பிரச்சினைகளைத் தீர்க்க உதவும்.
பெண்கள் சமத்துவ நாளின்று சமூகத்தில் சம அந்ததஸ்தை பெறுவதற்காக அமெரிக்காவில் பெண்கள் கிளர்ந்தெழுந்து போராடி பெற்ற உரிமையின் வெற்றியை கொண்டாடும் தினமாகத்தான் ‘உலக பெண்கள் சமத்துவ தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. 1920 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி அமெரிக்க அரசியலமைப்பு பத்தொன்பதாம் திருத்தத்தைச் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்ட அந்த தினமே ‘உலக சமத்துவ தினம்’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் அமெரிக்க பெண்களுக்கு சொத்துரிமை, ஆண்களுக்கு வழங்கும் கூலியில் பாதி மட்டுமே பெற்று வந்தனர். இதனால் பெண்களுக்கு அரசியல் உரிமை மற்றும் பெண்கள் பிரதிநிதித்துவம் பெறவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுவதற்கு அச்சாரமிட்டது. இதையடுத்து 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில், பின்லாந்து, நியுசிலாந்து, பிரிட்டன் உள்ளிட்ட மற்ற நாடுகள் வாக்குரிமையை சட்டமாக்கின. அது உலகம் முழுவதும் பரவியது. பெண்களுக்கான வாக்குரிமைச்சட்டம் அமெரிக்காவில் 1878ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அப்போது அது தோல்வியுற்றது. முதலாம் உலகப்போரில் பெண்கள் ஈடுபட்டதையடுத்து, அவர்களின் உண்மையான பங்களிப்புள் வெளிச்சத்துக்கு வந்த பின்னர், பெண்களுக்கு வாக்குரிமை இயக்கத்துக்கு ஆதரவு கிடைத்தது. ஒரு சட்டம் வடிவம் பெற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவை அது பெற வேண்டும். அதன்படி இச்சட்டத்துக்கு 36 பேரின் ஆதரவு தேவைப்பட்டது. இந்த சட்டத்தை இயற்றிய 50ம் ஆண்டை கொண்டாடும் வகையில், தேசிய பெண்கள் மையம் தேச அளவிலான வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. அந்த அமைப்பைச் சேர்ந்த பெல்லா ஆகஸ்ட் 26ம் தேதியை பெண்கள் சமத்துவ நாளாக அறிவித்தார். 1973ம் ஆண்டு இந்த நாள் முதன்முதலாக கொண்டாடப்பட்டது. இந்த நாளில் பெண்கள் சுதந்திரம் மற்றும் உரிமைக்காக அவர்கள் போராடியதை நினைவு கூறுவதற்காக கொண்டாடப்படுகிறது. பெண்கள் உரிமைக்காக பாடுபட்டவர்கள் குறித்து நினைவு கூறுகிறது. பெண் இயக்கத்தில் இருந்து வன்முறையை எதிர்கொண்டவர்கள் மற்றும் பாகுபாட்டை அனுபவித்தவர்களை கௌரவிக்க இந்த தினம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் போராடி பெற்ற வாக்குரிமை, சம ஊதியம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளின் வளர்ச்சி மற்றும் பெண்களுக்கு இப்போது உள்ள பிரச்னைகள், அதுகுறித்து செய்ய வேண்டிய செயல்களையும் இந்த நாள் நினைவூட்டுகிறது. இந்த நாளில் பல்வேறு நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், உரையாடல்கள் என பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் நிகழ்வுகளை உலகம் முழுவதிலும் பெண் அமைப்புகள், பெண்ணுரிமை ஆதரவாளர்கள் செய்கிறார்கள். பெண் முன்னேற்றம், வேலை, தலைமை, அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கு இருக்கவேண்டும் ஆகியவை குறித்து இந்த நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பெண்கள் காலம் முழுவதும் இந்த சமூகத்துக்கு செய்ய அர்ப்பணிப்புகளை போற்றுவதற்காகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
எஸ்.எஸ்.வாசன் நினைவு தினம் அகில இந்தியாவையும் தமிழகத்தை நோக்கித் திரும்பிப் பார்க்கவைத்த மேதை எஸ்.எஸ்.வாசன். ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். திறமை, புத்திக்கூர்மை, கடுமையான உழைப்பு மூலம் பத்திரிகைத் துறையிலும் சினிமா துறையிலும் உச்சத்தைத் தொட்டவர். 1903 மார்ச் 10-ல் தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறந்தார் எஸ்.எஸ்.வாசன். தந்தை பெயர் சுப்ரமணியம், தாயார் வாலாம்பாள். வாசனின் முழுப் பெயர் சீனுவாசன். நான்கு வயதுக் குழந்தையாக இருந்தபோதே தந்தையை இழந்தார். தாயார் அரும்பாடுபட்டு வாசனைப் படிக்கவைத்தார். வாசன் பற்றி நடிகர் சிவகுமார் சொன்னது இது: வாசன் அவர்கள் தஞ்சையில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து விதவைத் தாயால் வளர்க்கப் பட்டவர். வீட்டில் இட்லி சுட்டு, தெருவில் விற்று, தாயார் குழந்தையை படிக்க வைத்தார். மூன்று இட்லி, குழந்தைக்குப் போதவில்லை..கூடையில் விற்க வைத்திருந்த இட்லி யிலிந்து ஒன்றை எடுத்துச் சாப்பிட்டு வளர்ந்தது.வாலிப வயதில் திருச்சியிலிருந்து 200 மைல் சைக்கிள் சவாரி செய்து சென்னை வந்தார். தானே சிறுகதை எழுதி துண்டு பிரசுரமாக அச்சிட்டு ஓடும் ரயிலில் அவரே விநியோகம் செய்தார். தமிழ் சினிமாவின் முன்னோடி கே.சுப்ரமணியம் அவர்களிடமிருந்து 86,467 ரூ 9 அணா 11 பைசாவுக்கு ஜெமினி ஸ்டுடியோவை வாங்கினார். 1940-லிருந்து தமிழ், தெலுங்கு, இந்தி படங்கள் தயாரித்தார். 1948 -ல் ‘சந்திரலேகா’- படத்தை அன்றே 30 லட்சம் செலவில் (இன்று 100 கோடிக்கு மேல் ) தயாரித்து அந்தப் படத்திற்கு சுமார் 700 பிரதிகள் எடுத்து இந்தியா முழுக்க ரிலீஸ் செய்து இந்தியாவின் ‘ செசில் பி டெமில்லி ‘ என்று பெயர் எடுத்தார். 1953 -ல் ‘ஒளவையார்’ -படத்தை – 6 ஆண்டுகள் தயாரித்து மீண்டும் சரித்திரம் படைத்தார். ஔவையாக நடித்த கே. பி. சுந்தராம்பாள் அம்மையாருக்கு 4 லட்சம் சம்பளம் கொடுத்தார்.ஆனந்த விகடன் பத்திரிக்கையின் நிறுவனரும் அவரே. அந்த மாமனிதர் இயக்கத்தில் 1966-ல் காஞ்சனாவின் கணவராக, சிவாஜியின் மருமகனாக ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ -படத்தில் 1500 ரூ சம்பளத்தில் நடித்ததை பாக்கியமாக நினைக்கிறேன் அடிசினல் சேதி 1 சைனா பஜாரில் சிறிதும் பெரிதுமாக நடந்துவந்த வியாபாரங்கள் வாசனின் மனதைக் கவர்ந்தன. அங்கு விற்கப்படும் பொருட்களைப் பற்றி பத்திரிகைகளில் விளம்பரம் செய்வது, அதைக் கேட்டுக் கடிதம் எழுதுவோருக்கு வி.பி.பி.யில் பொருளை அனுப்பிப் பணம் பெறுவது என்ற ‘மெயில் ஆர்டர்’ முறையை முதல் முறையாகத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார். அதே சமயத்தில், அவருக்கு எழுதும் ஆர்வமும் இருந்தது. அந்நாட்களில் பலரும் பேச அச்சப்படுகிற விஷயத்தைத் துணிச்சலாகப் புத்தகமாக எழுதினார். 1927-ல் வெளிவந்த அந்தப் புத்தகத்தின் தலைப்பு ‘இல்வாழ்க்கையின் ரகசியங்கள்’. ஆங்கிலத்தில் அதற்கு ‘மிஸ்டரீஸ் ஆஃப் மேரீட் லைஃப்’ (`MYSTERIES OF MARRIED LIFE’) – எஸ்.எஸ்.வாசன், ஃபிக்ஷனிஸ்ட் அண்ட் எத்னலாஜிஸ்ட்’ என்று கவர்ச்சிகரமாகத் தலைப்பும் கொடுத்தார். அதை அவரே அச்சிட்டு, விற்பனை செய்தார். இதனிடையே பூதூர் வைத்தியநாதய்யர் என்ற தமிழறிஞர் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையை நடத்திவந்தார். தன்னுடைய பொருட்களுக்கு ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் விளம்பரம் கொடுத்திருந்தார் வாசன். ஆனால், அதற்குரிய பணம் செலுத்தியும் பத்திரிகையும் வரவில்லை, விளம்பரமும் வரவில்லை. அதை விசாரிக்கப் போனார் வாசன். நிதி நெருக்கடியால் பத்திரிகை வரவில்லை; அடுத்த மாதம் வரும் என்றார் வைத்தியநாதய்யர். அதே போல் வந்தது. ஆனால், 1927-க்குப் பிறகு, அவரால் தொடர்ந்து பத்திரிகை நடத்த முடியவில்லை. அப்போது வாசன் பத்திரிகையை விலைக்கு வாங்கிக்கொள்ளத் தயார் என்றார். பேச்சுவார்த்தை முட்வில் ‘ஆனந்த விகடன்’ எட்டெழுத்து. ஒரு எழுத்துக்கு ரூ.25 என்று முடிவுசெய்து ரூ. 200-க்கு ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையை விற்க முன்வந்தார். விகடன் வாசன் கைக்கு வந்தது. அடிசினல் சேதி 2 S .S .வாசன் -க்கு ஜெமினி ஸ்டூடியோ கட்ட பணம் எப்படி வந்தது தெரியுமா? வாசன் ஒருதடவை குதிரை பந்தயத்திற்கு போனார். ஜெமினி என்ற குதிரையின் மேல் பணம் கட்டினார்.அந்த பந்தயத்தில் ஜெயித்து, அவருக்கு எக்கச்சக்கமான பணம் கிடைத்தது. அதன் ஞாபகார்த்தமாகவே, பரிசு பணத்தில் ,ஸ்டூடியோ வாங்கி, ஜெமினி என்ற பெயரையும் சூட்டினாராம்!. (அத்தோடு குதிரை பந்தய பழக்கத்துக்கும் முற்றுபுள்ளி வைத்தாராம்).
அன்புக்கும் கருணைக்கும் உடலும் உயிரும் கொடுத்து, உதாரண மனுஷியாகத் திகழ்ந்தவர் அன்னை தெரசா பிறந்த நாள் இந்த நாளில், அன்னை தெரசாவின் அமுத மொழிகளை ஏற்று நடப்போம்.
- பிரார்த்தனை செய்யுங்கள். கடவுளுக்கு அருகே நீங்கள் செல்வீர்கள். அதேசமயம், மக்களுக்குச் சேவை செய்து பாருங்கள். கடவுளே உங்களுக்கு அருகிலேயே வருவார்.
- மனிதர்களை நீங்கள் மதிப்பீடு செய்து கொண்டே இருந்தால், ஒருபோதும் உங்களுக்கு அன்பு செய்ய வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது.
- இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய்யுங்கள்.
- இறப்பதற்காகத்தான் பிறந்தோம். அதுவரை இரக்கத்துடன் வாழ்வோம்.
- அன்பு என்பது சொற்களைக் கொண்டு வாழ்வதாக நினைக்கிறோம். ஆனால் அன்பை, சொற்களால் விளக்க முடியாது. செயல்களால் உணர்த்துவதே அன்பு.
- உங்கள் மீது அன்பு செலுத்துகிறவர்களை நேசியுங்கள். உங்கள் மீது கோபம் கொண்டவர்களை இன்னும் அதிகமாவே நேசியுங்கள்.
- மனம் விட்டுப் பேசுங்கள், அன்பு பெருகும்.
- கண்ணுக்குத் தெரிந்த மனிதரை மதிக்காவிட்டால், கண்ணுக்குத் தெரியாத கடவுளை மதித்தும் பயனில்லை.
- கொடுப்பது சிறியதுதானே என்று தயங்காதீர்கள். ஆனால் பெறுபவருக்கு அது மிகப்பெரியது. அதற்காக எடுப்பது சிறிது என்று திருடாதீர்கள். அது இழந்தவருக்கு மிகப்பெரியது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
- உனக்காக வாழ்கிறேன் என்று சொல்லுவது நமக்கு இன்பம். உன்னால்தான் வாழ்கிறேன் என்று நம்மைப் பார்த்துச் சொல்லவைக்கும்படி வாழ்வது பேரின்பம்.
- வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள்.
திரு.வி., க. பிறந்த நாளின்று எளிய குடும்பத்தில் பிறந்து எளிய வாழ்வு மேற்கொண்டு எளியவர்கள் நலனுக்காக வாழ்ந்து மறைந்த தொண்டறச் செம்மல், தொழிற்சங்க மேதை, இலக்கிய வாதி, தமிழறிஞர், சமயங்களில் பொதுமை வேண்டிய மனிதநேயர், கவிஞர், வரலாற்றாசிரியர், ஆய்வாளர், பத்திரிக்கையாளர் ‘‘தமிழ்த்தென்றல்’’ திரு.வி.கல்யாணசுந்தரம் ஆவார். திருவாரூரை பூர்வீகமாகக் கொண்ட திரு.வி.க. 1883ஆம் ஆண்டு இதே ஆகஸ்ட் தற்போது தண்டலம் (திருப்பெரும்புதூர்) என்றழைக்கப்படும் துள்ளம் என்னும் ஊரில் பிறந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த அத்தனைத் தலைவர்களிடமும் அரசியல் வேறுபாடின்றி தொடர்பு வைத்திருந்தார். இளம் வயதில் சித்த வைத்திய மருந்து சாப்பிட்ட போது சாப்பிட்ட மருந்து பத்தியம் இல்லாமல் போனதால் பக்கவிளைவு ஏற்பட்டு கை கால்கள் முடமாகிவிட, அதை சரி செய்தவர் அயோத்திதாசப் பண்டிதர். காந்தியார் சென்னைக்கு முதன் முதலாய் வந்தபோது அவரின் ஆங்கிலப் பேச்சை மொழி பெயர்த்து அழகுத் தமிழில் விளக்கமளித்து காந்தியாரிடம் நற்பெயர் எடுத்தார்.1921இல் ‘‘மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்’’ என்ற நூலினை எழுதினார் .சமயம், அரசியல்,இலக்கியம், கவிதைகள்,வரலாறு, தன் வரலாறு என்று அனைத் துத் தளங்களிலும் மூழ்கி ஆய்வு செய்து எழுதிய நூல்கள் மொத்தம் 56. தமிழக வரலாற்றில் அரிய செய்திகள், சிந்தனை கள் விரவிக் கிடக்கும் அந்த நூல்களை ஆய்வு செய்து பட்டம் பெற்றோர் பலராவார். சட்டசபையில் தமிழில் பேச வற்புறுத்தி அதைத் தன் வாழ்நாளில் கண்ட தமிழறிஞர். மேடைப் பேச்சில் தனக்கென ஓர் பாணியை மேற்கொண்டு ஆற்றொழுக்கான தமிழ்ப்பொழிவை நிகழ்த்தியவர். ஒரு மணி நேரம் பேசினால் அதில் கடைசி பத்து நிமிடங்கள் இதுவரை தான் பேசியது என்ன என்பதை சுருக்கமாய்ப் பேசி முடிப்பார். திரு.வி.கவின் மேடைத் தமிழ், எழுத்து நடையைப் பலர் பின்பற்றினர். தற்போது அண்ணாசாலையில் உள்ள “Spencers” கட்டடத்தில் இருந்த நிறுவனத்தில் கணக்கு வழக்கு எழுதி வாழ்க்கை நடத்திய போது, அந்த உரிமையாளரிடம் ஆங்கில ஆட்சிக்கு எதிராக இவர் நடந்து வருவதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பணியை ராஜினாமா செய்தார். 20.04.1918இல் வாடியாவுடன் இணைந்து தொழிலாளர்கள் நலன் காக்க திரு.வி.க. உருவாக்கியதே ‘‘சென்னை மாகாணத் தொழிலாளர் சங்கம்’’ என்பதாகும். 1919 முதல் 1922 வரை எட்டு மணி நேர வேலை மற்றும் வேலைக்கேற்ற ஊதியம் வேண்டி நடந்த பின்னி மில் வேலை நிறுத்தப்போராட்டம்தான் முதல் மாபெரும் தொழிலாளர்கள் போராட்டமாக வரலாறு பதிவு செய்து இருக்கிறது. அதை முன்னின்று நடத்தியவர் திரு.வி.க. தொழிற்சங்கப் போராட்டம் தீவிரமாதல் கண்டு அவரை நாடு கடத்த ஆங்கில அரசு முற்பட்ட போது, அன்றைய நீதிக் கட்சித் தலைவர்களான சர்.பிட்டி தியாக ராயர். பனகல் அரசர் ஆகியோர் திரு.வி.கவை நாடு கடத்தினால் பதவியை ராஜினாமா செய்து விடுவோம் என்று கூறியதால் நாடு கடத்தும் பேச்சு முடிவுற்றது. தேசபக்தன், நவசக்தி ஆகிய பத்திரிகை களை நிறுவி அதன் மூலம், தான் கொண்ட கொள்கைகளைப் பரப்பினார். 1919இல் முதன் முதல் மேடையேறிப் பேசியது “திராவிடரும் காங்கிரசும்” என்ற தலைப்பில், 1925இல் பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கம் காண திரு.வி.க.வும் காரணம். பின்னாளில் பெரியார் கூட்டிய மாநாட்டில் பேசியபோது சுயமரியாதை இயக்கத்தின் தந்தை என் நண்பர் பெரியார் என்றால் தாய் நான்தான் என்றார். சுதந்திரம் பெற்ற 1947ஆம் ஆண்டில் திரு.வி.க. தொழிற்சங்கம் அமைத்துக் கம்யூனிசம் பேசுவார் என்று கருதிய காங்கிரஸ் அரசு, டிசம்பர் 9 வரை அவரை வீட்டுக்காவலில் வைத்தது. எண்ணற்ற கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பெரியாருடன் அவருக்கிருந்த நட்பின் தன்மை மாறாமல் இருந்தது. எனக்காகக் கண்ணீர் சிந்த இருக்கும் ஒரே நண்பர் நாயக்கர் தான் என்றார். அதன் படியே அவர் இதே நாளான 17.09.1953 இல் மறைந்த போது வெளியூரில் இருந்த பெரியார் ஓடோடி வந்து இரங்கல் கூறி அவருக்குச் செய்ய வேண்டிய அனைத்து இறுதிச் சடங்கு களையும் முன்னின்று அறிஞர் அ.ச.ஞான சம்பந்தம் மூலம் செய்தார். ‘‘எனக்கு மீண்டும் பிறவி வேண்டும்; பிறந்து தமிழ்ப் பணியும் சமூகப் பணியும் ஆற்றவேண்டும்’’ என்று கூறிய திரு.வி.க., வள்ளலாரின் கொள்கை வழி நின்றவர்.திரு.வி.க.நடத்திய நவசக்தியில் துணை ஆசிரியராக இருந்த கிருஷ்ணமூர்த்தி அவர் மேல் கொண்ட பற்றால் “கல்கி” என்று அறியப்பட்டார். பல்வகையிலும் தமிழுக்கும் தமிழர்க் கும் தொண்டாற்றிய திரு.வி.க வின் நூற்றாண்டை 1983இல் அரசு கொண்டாடி விட்டு மறந்து விட்டது.
