உலகக் கொசு தினம் அனுசரிக்கப்படுகிறது. டாக்டர் ரொனால்டு ராஸ் 1897-ம் ஆண்டு செய்த முக்கியமான கண்டுபிடிப்பைக் குறிக்கவே இது கொண்டாடப்படுகிறது. பெண்ணின அனாஃபிலஸ் கொசுக்கள்தான், மனிதர்களுக்கு மலேரியா ஒட்டுண்ணிகளைப் பரப்புகின்றன என்பதை அவர் கண்டுபிடித்தார். ஒவ்வொரு ஆண்டும் மலேரியாவானது 20 கோடிக்கும் அதிகமான மக்களைப் பாதிக்கிறது. அத்துடன், 6 லட்சத்துக்கும் அதிகமான பேர் இதனால் உயிரிழக்கின்றனர். மலேரியாவும் டெங்கு காய்ச்சலும் கொசுக்களாலேயே ஏற்படுகின்றன. இந்த இரண்டு நோய்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னவென்றால், மலேரியா கொசு இரவில் கடிக்கும். எனவே கொசு வலைகள் கொசுக்கடியிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். ஆனால், டெங்கு கொசு பட்டப்பகலில் நாம் விழித்திருக்கும்போதே கடிக்கும். இந்தக் கொசுக்களிடமிருந்து தப்பிக்கவும், தவிர்க்கவும் ஒரு வழி உண்டு.கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அழிப்பதுதான் இதற்கான வழி. வீட்டைச் சுற்றித் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்ற வேண்டும். குட்டைகள், தொட்டிகளின் கீழேயிருக்கும் வாளிகள், டயர்கள் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீண்ட நாட்களுக்கு ஒரே இடத்தில் தண்ணீரைத் தேங்க விடக் கூடாது. ஏனென்றால், இப்படிப்பட்ட இடங்கள்தான் கொசுக்களுக்கு விருப்பமானவை. இப்படிப்பட்ட தண்ணீரை அகற்றிவிட்டாலே கொசு உற்பத்தியைப் பெருமளவு தடுக்கமுடியும்.
ஒண்டி வீரன் நினைவு நாள் ஒண்டிவீரன் திருநெல்வேலி வட்டம் சங்கரன்கோவில் வட்டத்திற்கு உட்பட்ட நெற்கட்டான் செவலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரரான பூலித்தேவன் என்பவரின் படையில் படைவீரராகவும், படைத்தளபதியாகவும் இருந்தார். இவர் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் பிரிவைச் சேர்ந்தவர் புலித்தேவனின் படையில் தளபதியாக செயல்பட்ட வெண்ணிக் காலாடி, மற்றும் பொட்டி பகடை போன்றோறும் இவருடன் சேர்ந்து விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்டவர்களேயாவர். 1767 ம் ஆண்டு ஆங்கிலேயருடனான போரில் ஆங்கிலேய தளபதி கர்னல் எராலின் படையினை இரண்டாயிரம் வீரர்களுடன் போரிட்டு வெற்றி பெற்றார். பாளையங்கோட்டையில் தமிழக அரசு சார்பில் ஒண்டிவீரன் நினைவு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
மத நல்லிணக்க தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சத்பவனா திவாஸ் எனப்படும் மத நல்லிணக்க தினம் மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளான ஆகஸ்ட் 20-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் மகள் இந்திரா காந்தி. இந்திய அரசியலில் அசைக்கமுடியாத ஆளுமையாகத் திகழ்ந்தார். இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்கிற பெருமையையும் பெற்றவர். அவரது பாதுகாவலர்களாலேயே சுடப்பட்டு இறந்தார். அவரது மகன்தான் ராஜீவ்காந்தி. ராஜீவ் காந்தி 1944ஆம் ஆண்டு ஆகஸ்டு 20ஆம் தேதி பிறந்தார். இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல்மீது ஆர்வம் இல்லாமல் விமானம் ஓட்டும் தொழிலில் ஈடுபட்டார். படிக்கும் காலத்தில் இத்தாலி நாட்டுப் பெண்ணான சோனியாவைக் காதலித்து மணந்தார். அவர்களுக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என இரு பிள்ளைகள். சோனியாவுக்கும் ராஜிவ் காந்திக்கும் விருப்பம் இல்லாவிட்டாலும் இந்திரா திடீரென மரணமடைந்ததால் ஒரே இரவில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முழு நேர அரசியல்வாதியானார் ராஜிவ் காந்தி. இந்திய இறையாண்மையைக் காக்க பாடுபட்டார். இந்தியக் கொள்கையில் உறுதியாக இருந்தார். அந்நிய சக்திகளின் கரங்கள் இந்திய மண்ணில் விழாமல் பாதுகாத்தார். அதனாலேயே அவர் கொல்லப்பட்டார் எனக் கருதப்படுகிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் உயரிய கொள்கையான அனைத்து மதங்களுக்கும் சம உரிமை என்ற தன்மையைப் பல்வேறு இன, வகுப்பு, கலாசார மற்றும் மதங்களின் சங்கமமான இந்தியத் திருநாட்டில் நிலைநாட்டுவதைக் குறிக்கும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய மக்களிடம் மதங்களின் மத்தியில் தேசிய ஒருங்கிணைப்பு, அமைதி, தேசிய ஒருமைப்பாடு, சமூக நல்லிணக்கம், காதல், பாசம் இவற்றை ஊக்குவிக்கும் நோக்குடன் இத்தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் அரசு அலுவலகங்களில் மத நல்லிணக்க உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. அது “நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்குத்துக்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன். மேலும் எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக்கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன்.” நாமும் உறுதிமொழி ஏற்போம்.
சார்லஸ் டார்வின் இயற்கைத் தேர்வு மூலமான கூர்ப்புக்கொள்கை அல்லது பரிணாமக் கொள்கையை வெளியிட்டார். அறிமுகப் படுத்தப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை மதம் மற்றும் அரசியல் பிரிவு களிலிருந்து பலத்த எதிர்ப்புகள் வந்தபோதிலும், படிவளர்ச்சி அறிவியல் துறையிற் சில அறிவியலாளர்களால் ஏற்கப்பட்டும் போற்றப்பட்டும் வந்துள்ளது. அதே நேரம், வேறு பல அறிவியலாளர்களால் எதிர்க்கப்பட்டும் இகழப்பட்டும் வந்துள்ளது. தகுதியும் வலிமையும் உள்ள உயிரினங்கள் மட்டுமே உலகில் நிலைத்து வாழும் என்கிறது சார்லஸ் டார்வினின் கூர்ப்புக் கொள்கை.
பி.கே.எஸ். ஐயங்கார் காலமான நாளின்று தற்போது, உலக யோகா தினம் என்றெல்லாம் வந்த பிறகு யோக பயிற்சி மையங்கள், புற்றீசல் போல பெருகி விட்டாலும், ஆரம்ப காலத்தில் இப்பயிற்சிக்கு வித்திட்டவர் பி.கே.எஸ்.அய்யங்கார் தான். இவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் பலர்தான் தற்போது உலகம் முழுவதும் இந்த யோக கலையை பரப்பி வருகின்றனர். கர்நாடக மாநிலம் புல்லுர் மாவட்டத்தில் பிறந்த கிருஷ்ணமாச்சாரிய சுந்தரராஜ அய்யங்கார், இளம் வயதில் காசநோய், மலேரியா, டை பாய்டு போன்ற நோய்களால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு ஆரோக்கியமற்ற நிலையில் இருந்தார். இதையடுத்து பள்ளி ஆசிரியரான இவரது தந்தை கிருஷ்ணமாச்சாரியர், இவரை, 16 வயதில் யோகா வகுப்புக்கு அனுப்பினார். இவரது குரு டி.கிருஷ்ணமாச்சாரியர் அனைத்து யோக வித்தைகளையும் கற்றுக் கொடுத்து, அவரது உடல் நிலையை தேற்றினார். அத்துடன் பி.கே.எஸ்.அய்யங்காருக்கு ஆங்கில புலமை இருந்ததால், 18 வயதிலேயே இவரை புனேவுக்கு அனுப்பி, யோக கலையை கற்பிக்க செய்தார் இவரது குரு. இந்த அய்யங்காரிடம் பயிற்சி பெற்றவர்களில் பிரபலமானவர், ஜெயபிரகாஷ் நாராயணன், ஜெ.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் ஆவர். நாட்டின் முதல் ஜனாதிபதியான ராஜேந்திர பிரசாத்தால் பாராட்டப் பெற்றவர் அய்யங்கார். யோகாசன கலையை, சீரிய முறையில் கற்றுத்தந்த அய்யங்காரை, போப் ஜான் பால், இந்தோனேசிய துணை அதிபர் முகமது ஹட்டா போன்றவர்கள் வாயார புகழ்ந்துள்ளனர். புகழ் பெற்ற வயலின் மேதையான யெகுதி மெனுஹிமுக்கு, 1952ல், அய்யங்காரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து. அய்யங்காரிடம் உள்ள திறமையை கண்டு, அவரை, மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து, பெல்ஜியம் அரசி போன்றவர்களிடம் பி.கே.எஸ்.அய்யங்காரை அறிமுகப்படுத்தி வைத்தார் மெனுஹிம். இவரது உதவியால், அய்யங்கார், பிரிட்டன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று, யோகாசனத்தை கற்பித்தார். கடந்த, 1966ல், இவர் எழுதிய, “லைட் ஆப் யோகா’ என்ற புத்தகம், 18 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், யோகா குறித்து, 14 புத்தகங்கள் எழுதியுள்ளார். 1996, 1998களில் இரண்டு முறை கடும் மாரடைப்பால் தாக்கப்பட்ட அய்யங்கார், தனது யோகா பயிற்சியைக் கொஞ்சம்கூட மாற்றிக் கொள்ளாமல் தொடர்ச்சியாகச் செய்துவந்தார். இறப்பதற்கு ஒரு மாதம் முன்புவரை ஆசனங் களைச் செய்துள்ளார். 92 வயதில் ஏழு மணி நேர யோகா பயிற்சிகளை வாரத்தின் ஏழு நாட்களிலும் கொடுத்து வந்தார். 95 வயதான போது இதே நாளில் மாரடைப்பால் காலமானார்.
முற்போக்கு எழுத்தாளர் டாக்டர் நரேந்திர தாபோல்கர் நினைவு தினம் (2013). மராட்டிய அந்தா ஷ்ரத்தா நிர்மூலன் சமிதி என்ற மூடநம்பிக்கை எதிர்ப்பு இயக்கத்தை 1989-ல் நிறுவி, தொடர்ந்து நடத்தி வந்த தாபோல்கர் அந்த இயக்கத்தின் மூலமாக பல போலி சாமியார்களை, பாபாக்களை, மந்திரவாதிகளை மக்கள் முன் அம்பலப்படுத்தி உள்ளார். இவர் மூடநம்பிக்கை எதிர்ப்பு பிரச்சார அமைப் பு மூலமாக மூடநம்பிக்கைகளினால் ஏற்படும் உயிரிழப்பு, பொருள் இழப்பு குறித்து 40 வருட காலத்திற்கும் மேலாக பிரச்சாரம் செய்து வந்தார். மேலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டுமென இயக்கங்கள் நடத்தினார். மக்களை முட்டாள்களாக்கும் சடங்குகளையும், மூட நம்பிக்கைகளையும் எதிர்த்து தொடர்ந்து போராடி வந்த நரேந்திர தபோல்கர் அடிப்படையில் ஒரு மருத்துவர். சமூகத்தை அறிவியல் மனப்பான்மையுடன் வளர்ப்பதில் அவரது நிர்மூலன் சமிதி முன்னணியில் நின்றது. சிவசேனா, பிஜேபி போன்ற கட்சிகள் வீறு கொண்டு எழத் துவங்கிய 90-களில், மராட்டிய மாநிலத்திலேயே இந்து மத மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பேசுவது அப்படி ஒன்றும் எளிதல்ல. தபோல்கர் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் மக்கள் மன்றத்தில் சாமியார்களை, மோசடிகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தார். இதனால் வெறுப்புக்கொண்டஇந்துத்துவ மத வெறியர்கள் இவரை சுட்டுக் கொன்றனர். இவரை கொல்வதற்கு இந்துமதவெறியர்களும், ஆதிக்க சாதிவெறியர்களும்தான் காரணம் என்பதை உலகமே அறியும். கொலை செய்தது யாரென்று தெரிந்த போதிலும் ஆண்டுகள் பல ஆனாலும் கூட இன்னமும் கொலையாளி பிடிபடவில்லை இந்து மத காவி தீவிரவாதிகளை முறியடிப்பதன் மூலம்தான் உழைக்கும் மக்கள் நிம்மதியையும், விடுதலையையும், மகிழ்ச்சியையும் பெற முடியும்.
எம். சி. ராஜா காலமான தினம் இன்று ராவ் பகதூர் மயிலை சின்னத்தம்பிப்பிள்ளை ராஜா எனப்படும் எம். சி. ராஜா (ஜூன் 17, 1883 – ஆகஸ்ட் 20, 1943) தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தலித் அரசியல்வாதி மற்றும் சமூகச் செயற்பாட்டாளர். பி. ஆர். அம்பேத்கருக்கு இணையாக இவரும் தலித்துகளின் நலனுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டவர். அவரது பங்களிப்புகள்: கல்விச் சேவை: எம். சி. ராஜா, பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றியதோடு, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். சட்டமன்ற உறுப்பினர்: சென்னை சட்டமன்றத்தின் உறுப்பினராகவும், சென்னை மாகாண சட்டமன்றக் குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அரசியல் இயக்கம்: அகில இந்திய ஒடுக்கப்பட்டோரின் நலனுக்கான அமைப்பை (All-India Depressed Classes Association) நிறுவியவர். இந்த அமைப்பின் மூலம் நாடு முழுவதும் தலித் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். அம்பேத்கருடன் தொடர்பு: பூனா ஒப்பந்தத்தின் (Poona Pact) போது பி. ஆர். அம்பேத்கருடன் இணைந்து செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. எம். சி. ராஜா, இந்திய விடுதலைப் போராட்டக் காலகட்டத்தில், தலித் சமூகத்தின் உரிமைகளை நிலைநாட்ட கடுமையாக உழைத்த ஒரு முக்கியமான தலைவர். அவரது நினைவு தினம், அவர் சமூகத்திற்கு ஆற்றிய பெரும் சேவைகளை நினைவுகூற உதவுகிறது.
