கேரளாவில் 20-ந்தேதி வரை பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த ஓரிரு தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக திருச்சூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 20-ந்தேதி வரை கேரளாவில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் காசர்கோடு, கண்ணூர், திருச்சூர், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே வங்கக்கடலில் காற்றின் வேகம் சுமார் 65 கி.மீ. வரை அதிகரிக்கக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
