இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஆகஸ்டு 13)

உலக இடதுகை பழக்கமுடையோர் நாள் பன்னாட்டு இடக்கை பழக்கத்தவரின் நிறுவனம் இந்நாளைக் கொண்டாடி வருகின்றது. இது முதன் முதலில் 1976-ம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. உலகளாவிய ரீதியில் மொத்த மக்கள்தொகையில் 10 முதல் 13 சதவிதத்தினர் இடது கை பழக்கமுள்ளவர்கள் என கணக்கிட பட்டுள்ளது. இந்த இடதுகை பழக்கமுடையவர்கள் சிறுபான்மையாளராக இருப்பதனால் சமூகத்தில் பல்வேறு பட்ட சிரமங்களை அவர்கள் எதிர்நோக்க வேண்டி ஏற்படுகின்றது. இந்த இடதுகைப் பழக்கம் பிறப்பிலே சிலருக்கு ஏற்படுகின்றது. தனித்துவமான போக்கினைக் கொண்ட இடக்கைப் பழக்கமுள்ளோரின் செயற்பாடுகளை கௌரவிக்கவும் மானசீகமான தாக்கங்கள் ஏற்படாமல் காப்பதற்கும் இவர்கள் மத்தியில் போட்டி நிகழ்ச்சிகளை நடத்துவதும், கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்துவது என்பன இந்நாளில் முக்கியமாக மேற்கொள்ளப்படுகின்றன.

உலக உறுப்பு தான தினம் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கம். ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் உறுப்புச் செயலிழப்பால் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வு. ஆனால், தேவைப்படும் உறுப்புகள் கிடைப்பது மிகவும் குறைவாக உள்ளது. உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே இதற்கு முக்கியக் காரணம். இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 3-ம் தேதி தேசிய உறுப்பு தான தினம் கொண்டாடப்படுகிறது. இது, 1994-ல் இந்தியாவின் முதல் வெற்றிகரமான இறந்தவர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்ற தினத்தை நினைவுகூறும் வகையில் கடைப்பிடிக்கப்படுகிறது. உறுப்பு தானம் பற்றிய சில முக்கிய தகவல்கள்: உயிர்காக்கும் செயல்: உறுப்பு தானம் ஒருவரின் உயிரைக் காப்பாற்ற அல்லது அவரது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. ஒரு உறுப்பு தானம் செய்பவர் மூலம் 8 உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று கூறப்படுகிறது. தானம் செய்யக்கூடிய உறுப்புகள்: இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம், குடல் போன்ற முக்கிய உறுப்புகளும், கண்கள், திசுக்கள், தோல், எலும்பு போன்ற பிற உறுப்புகளும் தானம் செய்யப்படலாம். யார் தானம் செய்யலாம்? எந்த வயதினரும், எந்த மதத்தினரும் உறுப்பு தானம் செய்யலாம். உறுப்பு தானம் செய்ய உங்கள் உடல்நிலை மற்றும் மருத்துவ நிலைமைகள் முக்கியம், வயது அல்ல. தவறான புரிதல்கள்: உறுப்பு தானம் பற்றிய பல தவறான நம்பிக்கைகள் மக்களிடையே உள்ளன. இவற்றைப் பற்றித் தெளிவான விழிப்புணர்வைப் பெறுவது அவசியம். உறுப்பு தானம் என்பது ஒரு மனிதநேயம் நிறைந்த செயல். இதன் மூலம் நீங்கள் இன்னொருவருக்கு வாழ்க்கையை மீண்டும் பரிசளிக்க முடியும். நீங்கள் உறுப்பு தானம் செய்ய விரும்பினால், உங்கள் முடிவை உங்கள் குடும்பத்தினரிடம் தெரியப்படுத்துவது மிகவும் முக்கியம்.

கை விளக்கேந்திய காரிகை’ நைட்டிங்கேல் காலமான நாளின்று! நவீன செவிலியர் முறையை உருவாக்கியவர் இங்கிலாந்தை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல், நர்ஸ் தொழிலின் புனிதத்துவத்தை உணர்த்திய இவர் போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டு சேவை செய்தார்.நர்ஸ் பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் ஆரம்பித்தார்.’கை விளக்கேந்திய காரிகை’ (The Lady with the Lamp)என்று அனைவராலும் போற்றப்பட்ட இவர் ஓர் எழுத்தாளர் ஆவார். பிரிட்டனில் செல்வச் செழிப்பு மிக்க உயர் குடிக் குடும்பத்தை சேர்ந்த நைட்டிங்கேல், இத்தாலியின் ஃபுளோரன்ஸ் நகரில் பிறந்தார். இவர் பிறந்த இடத்தின் பெயரைத் தழுவி இவருக்குப் பெயரிட்டார்கள். கிறிஸ்தவரான இவர் தனக்கு இறைவனால் விதிக்கப்பட்ட பணியாகவே செவிலியர் சேவையை உணர்ந்தார். பெற்றோர் எதிர்ப்பை மீறி நோயாளிகளைப் பராமரிக்கும் கல்வி நெறியை மேற்கொண்டு, மூன்றாண்டுகளில் நோயாளர்களைப் பராமரிப்பதில் நிபுணத்துவம் பெற்றார்.அந்தக் காலத்தில் செவிலியர் சேவை ஒரு கவுரவமான பணியாகக் கருதப்படவில்லை. வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களே இந்தப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்தக் காலத்தில் செவிலியர், உயர் செல்வக் குடும்பங்களில் சமையல்காரியாகவும் வேலை செய்யவேண்டி இருந்தது. பிளாரன்ஸ் வறியவர்கள் மீதும், இயலாதவர் மீதும் அக்கறை கொண்டிருந்தார். 1844, டிசம்பரில் லண்டனிலிருந்த ஆதரவற்றோர் விடுதியன்றில் வறியவர் ஒருவர் இறந்தது பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து பிளாரன்ஸ், ஆதரவற்றோர் விடுதிகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னணியில் நின்று வாதாடினார். 1854-ல் கிரிமியாவைக் கைப்பற்றிய ரஷ்யாவுக்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் போர் தொடுத்தன. கிரிமியன் போரில் பாதிக்கப்பட்டுள்ள படையினருக்கு உதவும் பொருட்டு 38 செவிலியருடன் ராணுவ மருத்துவமனைக்கு சென்றார்.வசதி குறைவுகளுக்கு மத்தியில் ராணுவ வீரர்களுக்குச் சிகிச்சை வழங்கினார். அன்பினாலும் சிகிச்சைகளாலும் பிளாரன்ஸ் டையினரைக் குணப்படுத்தினார். இரவு வேளைகளில் கையில் விளக்கு ஒன்றை ஏந்திய வண்ணம் நோயாளர்களிடம் சென்று நலம் விசாரித்து மருந்துகளையும் வழங்கி வந்தார்.தங்களை காக்க ‘விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்கு வந்த தேவதை’ என ராணுவ வீரர்கள் பிளாரன்ஸைக் கவுரவித்தனர். மருத்துவ வசதிகளுக்கும், சுகாதார நுட்பங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த மருத்துவமனைகள் பற்றிய குறிப்புக்கள் மருத்துவத் துறையில் செவிலியர் பணிக்கான நூலாக இருக்கின்றன. போரிலிருந்து நாடு திரும்பிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் சாதனைப் பெண்மணியாக வரவேற்கப்பட்டார். விக்டோரியா அரசிக்கு அடுத்தபடியாக மிகவும் அறியப்பட்ட பெண்ணாக ‘பிபிசி’யினால் இனங்காட்டப்பட்டார். அப்பேர்பட்டவரின் நினைவு நாளின்று.

இந்திய விடுதலைக்கு 40 ஆண்டுகளுக்கு முன்னரே மூவர்ணக் கொடியை ஏற்றிய பிகாஜி ருஸ்டோ காமா நினைவு நாளின்று இந்தியா சுதந்திரமடைந்த பிறகு இந்திய தேசியக் கொடி பட்டொளி வீசி பறக்கிறது. ஆனால், இந்திய சுதந்திரத்திற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு, பிகாஜி காமா என்ற சுதந்திர போராட்ட வீராங்கனை ஜெர்மனியில் முதல் இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றினார். அந்த நேரத்தில் இந்திய சுதந்திர போராட்ட இயக்கத்தில் சேர பயந்த அனைத்து பெண்களுக்கும் ஒரு ஊந்துசக்தியாக உருவெடுத்தார் மேடம் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட பிகாஜி காமா படேல். ஜெர்மனியில் முதன்முறையாக இந்தியக் கொடியை ஏற்றிய மாபெரும் சுதந்திரப் போராளி பிகாஜி படேல் காமா பிகாஜி காமா அவர்களின் பெயர், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2, 1907 அன்று, ஜெர்மனியின் ஸ்டட்கார்ட்டில் சர்வதேச சோசலிச மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஐரோப்பா, அமெரிக்கா, வட ஆப்பிரிக்கா உட்பட பல நாடுகள் பங்கேற்றன. அந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட, ​​46 வயதான பிகாஜி காமா, இந்திய தேசியக் கொடி இந்தியக் கொடியின் முதல் வடிவமைப்பு பதிப்பின் முதல் பதிப்பை வெளியிட்டார்.இந்தியாவின் தேசியக் கொடியை முதன்முறையாக ஏற்றிய கொடியை தொகுத்து வழங்கிய பிகாஜி படேல் காமா என்பது பெருமைக்குரிய விஷயம் ஆகும். சுதந்திரத்திற்கு முன்னரே மூவர்ணக் கொடி ஏன் ஏற்றப்பட்டது? என்ற கேள்விகளுக்கு, சுதந்திர போராட்ட வரலாறு பதில் சொல்கிறது. முதல் முறையாக இந்திய தேசியக் கொடியை ஏற்றிய பெண் பிகாஜி காமா, பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை இந்திய திருநாட்டில் முடிவுக்கு கொண்டுவர விரும்பினார். அதற்கு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருந்தது. எனவே, இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்ற கருத்தாக்கத்தை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வர விரும்பினார், அதற்கு அவர் எடுத்த முயற்சிகளில் ஒன்று இந்திய மூவர்ணக் கொடியை வடிவமைத்தது. அதில் அவர் பெரிய அளவில் வெற்றி பெற்றார். மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, இது சுதந்திர இந்தியாவின் கொடி என்று கூறினார். அதோடு, அந்த மாநாட்டில் இருந்த அனைவரையும் எழுந்து நின்று கொடி வணக்கம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். பிரிட்டிஷ் அரசிடமிருந்து சுதந்திரம் தேவை என்ற எண்ணத்தை சர்வதேச அளவில் ஆழப் பதிக்க வைத்தவர் மேட்ம் பிகாஜி காமா படேல்.

ஹெச். ஜி. வெல்ஸ் நினைவு நாள் இளைமையில் வறுமை கொடுமை. முதுமையில் தனிமை கொடுமை என்று சொன்னால் மிகையாகாது. அளவுக்கதிகமாக வறுமை வந்துவிட்டால் அதிலிருந்து எப்படியாவது மீளவேண்டும் என்று எல்லாவற்றுக்கும் துணிந்து செயல்படுபவர்கள் பலர். இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருந்ததையெல்லாம் இழந்தாயிற்று. இழந்ததை எல்லாம் மீட்டு, எழுந்து நிற்கவேண்டும் என்றால் வறுமையை ஒழித்துக்கட்ட வேண்டும். அதற்கு உழைப்பு, உழைப்பு, உழைப்புதான். அதை சிறப்படையச் செய்யும். அதற்குத் துணிய வேண்டும். அதுபோல் ஹெச்.ஜி. வெல்சின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் எல்லோரையும் ஊக்குவிக்கும் விதமாக அமைகிறது. ஹெச்.ஜி.வெல்ஸின் தந்தை கிரிக்கெட் விளையாட்டை தொழிலாகக் கொண்டவர். அவர் ஒரு சிறு பானை, சட்டி கடையை வைத்திருந்தார். அந்த கடையில் இருந்த ஒரு சிறு அறையில்தான் வெல்ஸ் பிறந்தார். அந்தக் கடையும் சிறிது காலத்திற்குப் பிறகு மூடப்பட்டுவிட்டது. எனவே அவருடைய தாய் ஒரு வீட்டில் வேலைக்கு அமர்ந்தார். குடும்பத்தை நடத்தும் பொறுப்பு 13 வயதிலேயே வெல்ஸின் தலையில் விழுந்தது. எனவே அவர் துணிக்கடையில் வேலைக்கு அமர்ந்தார். துணிக்கடை முதலாளியும் ஒரு மாதத்திற்குப் பிறகு அவரை வெளியே அனுப்பிவிட்டார். பின்பு ஒரு மருந்து கடையில் சேர்ந்தார். அங்கும் அப்படியே நடந்தது. மற்றொரு துணிக்கடையில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தார். அப்பொழுது அங்கே இருக்கும் கடை மேலதிகாரி பார்க்காத சமயத்தில் தனியாக ஓர் அறைக்குள் சென்று ஹெர்பட் ஸ்பென்சர் என்ற மகாகவி நூலை படித்துக்கொண்டு இருப்பாராம். அங்கும் அவரை அவர் முதலாளி வேலையை விட்டு நீக்கிவிட்டார். அவர் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை உணவு அருந்தக்கூட இல்லாமல் வெறும் வயிற்றோடு 15 மைல்களுக்கு அப்பால் இருந்த தம்முடைய தாயிடம் சென்று அழுதார். இனியும் அந்த கடையில் வேலை செய்வதாக இருந்தால் உயிரோடு இருக்கமாட்டேன் என்று கூறிவிட்டார். பின்னர் உடைந்த மனசுடன் தன் ஆசிரியருக்கு நீண்ட கடிதம் எழுதினார். தம்முடைய தாங்கொணா வறுமையையும், தான் இனிமேல் உலகில் வாழ விருப்பமில்லை என்பதையும் அவர் அதில் எடுத்துக்காட்டி இருந்தார். அவருடைய ஆசிரியரும் அக்கடிதத்தைப் படித்தார். பின்னால் பெரிய எழுத்தாளனாகக் கூடிய திறமை அவருக்கு இருக்கிறது என்பதை கடிதத்தின் வாசகங்கள் எடுத்துக்காட்டின. இதைப் புரிந்து கொண்ட அவர், அவர் பள்ளியிலேயே வேலை கொடுத்தார். அப்பொழுதும் அவருக்கு அந்த வேலை ஒத்து வரவில்லை. காரணம் பால் விளையாடும் பொழுது கீழே விழுந்த அவருடைய சுவாசப்பையும், சிறுநீரகத்தில் சில பிரச்னையும் ஏற்பட்டது. இதனால் மருத்துவர்கள் கைவிட்டனர். எனினும் பிழைத்துவிட்டார் வெல்ஸ். ஆனால் ஓடி ஆடி வேலை பார்க்க முடியாத சூழல் இருந்ததால் வேறு வழி இன்றி கதைகளும், கட்டுரைகளும் எழுத தொடங்கினார். ஐந்து ஆண்டுகள் ஓயாமல் எழுதி, அவர் எழுதியவை அவருக்கே பிடிக்காமல் போனதால் அனைத்தையும் எரித்து சாம்பலாக்கிவிட்டார். பின்னர் அவர் எழுதிய நூல்களே ஆங்கிலக் கலையின் மணிகளாகத் திகழ்கின்றன. இப்போது உலகப் பேரறிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் ஹெச்.ஜி.வெல்ஸ் தம் பேனாவினால் மட்டுமே இரண்டு லட்சம் பவுண்டுகள் ஈட்டியிருக்கிறார். இவ்வளவு துயரங்களையும் துடைத்தெறிந்து விட்டு எழுத்தின் வழியாக எழுந்து நிற்றல் என்பதை ஹெச்.ஜி.வெல்ஸின் வாழ்க்கைப் படிக்கட்டுகள் உணர்த்துகின்றன. அவர் எல்லா சூழ்நிலைகளிலும் உழைக்க தயாராக இருந்தார். கிடைத்த வேலையை செய்துகொண்டே வறுமையை துடைத்தெரியத் துணிந்தார். கடைசியில் அழியாப் புகழ் பெற்றார். வறுமையைக் கண்டு பயந்து நிற்கும் வாலிப பிள்ளைகளுக்கு இதெல்லாம்தான் நம்பிக்கை ஒளியாய் ஊக்கமூட்டும் சிறப்புப் பாடங்கள். ரோம் நகரம் ஒரே நாளில் உருவாக்கப்பட்டவை அல்ல என்பதை நாம் அறிவோம். அதைப் போல்தான் புகழ் பெற்றவர்கள் எல்லோரும வசதியாகவே இருந்து அதைப் பெறவில்லை. வறுமையிலும், ஏழ்மையிலும் இருந்து மேல் உயரத்தை தொட்டவர்கள்தான் அவர்கள். அவர்களின் வாழ்க்கை வரலாற்றையெல்லாம் படித்து அறிவோம். அதன் வழி நடப்போம்.

சரோஜ் நாராயணசுவானி காலமான தினமின்று ஆகாசவாணி.. செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண சுவாமி..” 1980, 90களில் வானொலி ரசிகராக இருந்திருந்தால், நிச்சயம் நீங்கள் இந்தக் காந்தக் குரலைக் கேட்டு மயங்கியவர்களில் ஒருவராகத்தான் இருப்பீர்கள். குரலில் ஒரு கம்பீரம்.. அனைவரையும் குரலாலேயே கட்டிப் போடும் வசீகரம்.. என அகில இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இந்த சரோஜ் நாராயண சுவாமி. சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஒலிபரப்புத்துறையில் பணியாற்றி, பல பெண்கள் ஊடகத்துறையில் கால் பதிக்க காரணமாக இருந்த இவர், தனது 87 வயதில் மும்பையில் (20220இல்) காலமானார். புத்தகங்கள் எப்படி நம் கற்பனைத்திறனை வளர்க்க உதவுமோ, வானொலியும் அது போன்றதுதான். தன் காந்தக் குரலால் ஒரு ஊரையே கட்டிப் போட்டு, ஓரிடத்தில் அமர வைக்கும் திறமை கொண்ட வானொலி செய்தி வாசிப்பாளர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர்தான் இந்த சரோஜ் நாராயண் சுவாமி. பரபரவென குழந்தைகள் பள்ளி, கல்லூரிக்கும், பெரியவர்கள் அலுவலங்களுக்கும் தயாராகிக் கொண்டிருக்கும் காலை வேலையில், 7.45 மணிக்கு செய்திகள் வாசித்து மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனவர் தான் இவர். எப்படி நடிகர், நடிகைகளுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் ரசிகர்கள் ஏராளமோ.. அதேபோல், 80களில் சரோஜ் நாராயண சுவாமி குரலுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. “எல்லோரும் உன் குரல் Male voice (ஆண் குரல்) மாதிரி இருக்கே’ன்னு சொல்வாங்க. அவங்களுக்கெல்லாம் என்னுடைய பதில் ஆமா, என் குரல் மேலான வாய்ஸ்தான்!” என ஒரு பேட்டியில் தன் குரலைப் பற்றி பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார் சரோஜ் நாராயண் சுவாமி. தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் சரோஜ் நாராயணசாமி. ஆனால், பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாமே மும்பையில் தான். திருமணமாகி டெல்லி சென்ற பிறகு, செய்தி வாசிப்பாளராகி புகழ் பெற்றார். இவரது கணவர் பெயர் நாராயண சுவாமி. கணவரின் பெயரையும் தன் பெயரோடு சேர்த்துக் கொண்டு, சரோஜ் நாராயண சுவாமி ஆனார். “பிஏ ஆங்கிலம் படிச்ச எனக்கு தமிழ் வாசிப்பாளர் வேலை. கேட்கவே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். பெரும்பாலும் வானொலி அறிவிப்பாளர் என்றாலே அந்தந்த மொழிகளில் புலமைபெற்றவர்களாக இருப்பதுதான் வழக்கம். ஆனால் நான் அதற்கு எதிர்மாறாக ஆங்கிலம் படித்து விட்டு, தமிழ் செய்தி வாசிப்பாளர் ஆனேன். கம்பீரக் குரலுக்குச் சொந்தக்காரி என்பதில் எப்பவும் எனக்கு பெருமைதான்,” என்றார் சரோஜ் நாராயண சுவாமி. நாராயணசுவாமியை திருமணம் செய்து கொண்டு, டெல்லி சென்றதும் யூகோ வங்கியில் முதலில் பணிபுரிந்தார் சரோஜ். இந்த வங்கி, இந்திய வானொலி மையத்திற்கு அருகில் அமைந்திருந்தது. தினமும் தன் வங்கிப் பணிக்கு சென்று வந்தபோது, சரோஜின் ஆர்வம் வானொலி மீது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. இப்போது போல், கடுமையான தேர்வுகள் அப்போது இல்லாததால், 1962ல் வாணி சான்றிதழுடன் தமிழ் செய்திவாசிப்பாளர் ஆனார் சரோஜ். “வானொலியைப் பொறுத்தவரை உச்சரிப்பு மிகவும் முக்கியம். தினம் தினம் உச்சரிப்பில் புதிது புதிதாக கற்றுக் கொள்வோம். ஒவ்வொரு நாளும் மாணவியாக, கற்றுக் கொள்ளவும், என் உச்சரிப்பைத் திருத்திக் கொள்ளவும் நான் தயங்கியதே இல்லை. உச்சரிப்பு மாதிரியே மொழிபெயர்ப்பும் முக்கியம். செய்திகள் எப்பவும் ஆங்கிலம் அல்லது இந்தியில் இருக்கும். நாம்தான் அதை மொழிபெயர்ப்பு செய்து கொள்ள வேண்டும். தினமும் அதிகாலை 5.30 மணிக்கு செய்திகள். ஆனால், 3 மணிக்கே மொழிபெயர்ப்பு வேலை ஆரம்பித்தாக வேண்டும். சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது. அப்போது அந்தந்த நாட்டுத் தூதரகங்களுக்கு போன் செய்து தெளிவு பெறுவேன். எங்கம்மா குடித்த காவிரி தண்ணீரும், நான் பார்த்த தமிழ் சினிமாக்களும்தான் என் தமிழ் உச்சரிப்புக்கு காரணம். பாரதியார் கவிதைகள் அவ்வளவு பிடிக்கும். திரும்பத் திரும்ப அதைப் படிப்பேன்,” என பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் சரோஜ். அகில இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளர் என்ற பெருமை இவரையே சாரும். சுமார் 35 ஆண்டுகள் ஒலிபரப்புத் துறையில் பெண்களுக்கு முன்னோடியாக இருந்த இவர், தமிழ் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், விளம்பரங்களுக்கும் குரல் கொடுத்துள்ளார். மொரார்ஜி தேசாய், இந்திரா காந்தி, பி.வி.நரசிம்மராவ் உள்பட பிரதமர்களிடம் பேட்டி எடுத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. ஒலிபரப்புத் துறையில் அவர் செய்த ஒட்டுமொத்த பங்களிப்பிற்காக 2008ல் தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம் சார்பா கலைமாமணி விருது பெற்றார். நான்கு மொழிகளில் புலமை பெற்றவர் சரோஜ். “சுகமோ துக்கமோ அது குரல்ல வெளிப்படக் கூடாது. இதுதான் செய்தியாளர்களின் முக்கியமான கடமை,” இதுதான் மற்ற செய்தி வாசிப்பாளர்களுக்கு சரோஜ் கூறிய அறிவுரை. ஆனால், தான் பேட்டி கண்ட முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மரணத்தை அறிவித்தபோது, தனது குரலே கொஞ்சம் தழுதழுத்துப் போனதாக சரோஜ் குறிப்பிட்டுள்ளார். அந்த சரோஜ் நாராயண சுவாமி மறைந்தாலும் தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்னமும் பல தொலைத்தொடர்பு சாதனங்கள், ஊடகங்கள் வந்தாலும், எப்போதும் ‘செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண சுவாமி..’ என்பது நம் மனதைவிட்டு அகலவில்லை என்பதுடன் அகலாது என்பது நிச்சயம்.

உலகின் மிகச் சிறந்த மருத்துவர் என்று போற்றப்படுபவரும் நோய்களைக் கண்டறிய புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்தவருமான ரெனே லென்னக் (Rene Laennec) நினைவு நாளின்று பிரான்ஸில் பிறந்தவர். 6 வயதில் தாயை இழந்தார். பாதிரியாரான உறவுக்கார தாத்தா இவரை வளர்த்தார். பிறகு, நான்ட்ஸ் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயிற்றுவித்து வந்த வேறொரு உறவுக்காரர் இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றார். ஆங்கிலம், ஜெர்மன் ஆகிய 2 மொழிகளிலும் சிறந்து விளங்கினார். படிப்பிலும் சிறந்த மாணவராக பல பரிசுகளை வென்றார். சிறு வயதிலேயே தன் மாமாவின் வழிகாட்டுதலுடன் மருத்துவம் பயிலத் தொடங்கினார். வழக்கறிஞரும், கவிஞருமான அப்பா அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மருத்துவப் படிப்பை நிறுத்தினார். கிரேக்க மொழி பயின்று கவிதைகள் எழுதத் தொடங்கினார். 1799-ல் மீண்டும் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்தார். 19 வயதில் பாரிஸ் சென்று ‘எகோலே பிராட்டிக்’ ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி நிறுவனத்தில் பயின்றார். அங்கு மருத்துவம், அறுவை சிகிச்சைக்கான முதல் பரிசை வென்றார். 1802-ல் மாணவராக இருந்தபோதே தனது முதல் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். கல்லீரல் நோய்கள், ரத்தத்தில் காணப்படும் நுண்ணுயிர்கள் குறித்து கட்டுரைகள் வெளியிட்டார். மருத்துவ அறிவியல் இதழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1804-ல் மருத்துவப் படிப்பை முடித்தார். உடல்கூறு குறித்து பல மாணவர்களுக்குப் பயிற்றுவித்தார். 1808-ல் அத்தெனி மெடிக்கல் (Athenee Medical) என்று அமைப்பை நிறுவினார். பிறகு அது சொசைட்டி அகாடமிக் டி பாரிஸ் (Societe Academique de Paris) என்ற பிரபல அமைப்புடன் இணைக்கப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் நோய்இயல், உடற்கூறுஇயல் குறித்து பல கட்டுரைகள் எழுதினார். 1816-ல் பாரிஸில் உள்ள நெக்கர் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றினார். 1822-ல் பிரான்ஸ் கல்லூரியில் மருத்துவப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். காசநோய், புற்றுநோய் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இவர் கண்டுபிடித்த நோய்களின் பெயர்கள், சிகிச்சை முறைகள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன. அந்த நாட்களில் மார்பில் காதை வைத்துதான் இதயத்துடிப்பு சத்தத்தை மருத்துவர்கள் கேட்டனர். பெண்களுக்கு இது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. மாற்றுவழி கண்டுபிடிக்க முடிவு செய்தார் லென்னக். குழாய் போன்ற நீண்ட மரத் தண்டுகளை வைத்து குழந்தைகள் பேசி விளையாடுவதைக் கண்டார். உடனே மரத்தால் ஆன உருளை வடிவ கருவியை வடிவமைத்தார். பின்னாட்களில் இதை பிரிக்கக்கூடிய மூன்று பகுதிகளால் ஆன கருவியாக மேம்படுத்தினார். பிரெஞ்சில் ‘ஸ்டெதஸ்’ என்றால் மார்பு; ‘ஸ்கோப்ஸ்’ என்றால் சோதித்தல். அதனால், தனது கருவிக்கு ‘ஸ்டெதஸ்கோப்’ என்று பெயரிட்டார். மருத்துவ அறிவியலில் இவரது கண்டுபிடிப்பு மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியது. மருத்துவராக, கண்டுபிடிப்பாளராக மட்டுமின்றி, சமூகத்துக்கு பல நன்மைகளை செய்துவந்தார். பல அறப்பணிகளிலும் ஈடுபட்டுவந்த லென்னக் 1826 இதே ஆகஸ்ட் 13இல் 45 வயதில் காசநோயால் பாதிக்கப்பட்டு மறைந்தார்.

உலக திரை ரசிகர்களை மிரட்டிய இயக்குநர் ஹிட்ச்சாக் பிறந்த நாள் – ஆக்ஸ்ட் 13 – சில நினைவுகள்! ஆல்பிரட் ஹிட்ச்காக் 1899ம் ஆண்டி ஆகஸ்ட் 13ம் தேதி பிறந்தார்.பொதுவாக 13 என்பது மேற்கத்திய உலகினருக்கு அதிர்ஷ்டமில்லாத எண். ஆனால் இவருக்கு இதுவே ராசியான எண்ணாக அமைந்துவிட்டது. பிரிட்டனில் சில மௌனப்படங்களை இயக்கிய பிறகு அவர் ஹாலிவுட்டுக்கு வந்தார்.1956ல் அமெரிக்க குடியுரிமை பெற்ற அவர் சினிமா கலையின் புதிய சகாப்தத்தை உருவாக்கினார். ரசிகர்களை திகிலடைய வைக்கும், முதுகுத் தண்டைச் சில்லிட வைக்கும் திடுக்கிடும் திருப்பங்கள் கொண்ட திரைக்கதைகளையே அவர் படமாக்கினார். ஆனாலும் காட்சி வழியே கதை சொல்லும் பாணியால் உலகையே வியக்க வைத்தார். தஸ்தவஸ்க்கியின் கிரைம் அன்ட் பனிஷ்மென்ட் எப்படி ஒரு மர்ம நாவல் போல தெரிந்தாலும் அதைக் கடந்த தத்துவார்த்தப் பிரச்சினைகளைப் பேசுகிறதோ அதைப் போலவே, ஹிட்ச்காக்கின் திரைப்படங்களும் தத்துவ சாயை கொண்டிருந்தன. மரணபயம், அச்சம், துரோகம் போன்ற காரணங்களால் அந்தப் படங்கள் உளவியல் மற்றும் சமூகவியல் ஆவணங்களாகவும் கருதப்பட்டன. ஹிட்ச்காக் ஹாலிவுட்டுக்கு வந்த போது ஸ்டூடியோ முறை பிரபலமாக இருந்தது.தயாரிப்பு, விநியோகம், திரையிடுதல் போன்ற சகல விஷயங்களிலும் ஈடுபட்டு பிரம்மாண்டமான நெட்வொர்க்கை கொண்டிருந்த 5 முன்னணி ஸ்டூடியோக்களில் நடிகர்கள் உட்பட அனைவரும் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். ஸ்டூடியோ முத்திரைக்காகவே படங்கள் பாராட்டும் புகழும் பெற்றன. தவறான குற்றத்தின் வலைக்குள் வந்து சிக்கிக் கொள்ளும் ஹிட்ச்காக்கின் கதாபாத்திரங்கள் தாஸ்தயவஸ்கியின் நாவல் பாத்திரங்களுக்கு நிகரான மதிப்பைப் பெற்றன. ஆசை, பொறாமை, சந்தேகம் போன்ற குணங்களால் ஏற்படக் கூடிய வன்முறை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.உணர்ச்சியின் மிகுதியால் நிகழ்ந்துவிடும் கொலை போன்ற குற்றங்களின் மறுபக்கத்தை ஹிட்ச்காக்கின் படங்கள் ஒளியூட்டின. இதனால்தான் தாஸ்தயவஸ்கி, காப்காவுக்கு இலக்கியத்தில் உள்ள இடம் சினிமாவில் ஹிட்ச்காக்குக்கு உண்டு என்றார் திரைப்பட மேதை ட்ரூபோ. ஹிட்ச்காக்கை பேட்டி கண்ட அவர் அதை ஒரு புத்தகமாக்கியிருக்கிறார். திரைப்படத்தின் நுட்பங்களை அறிய விரும்பும் ரசிகர்களுக்கு அந்தப் படம் ஒரு பிரமாதமான ஆவணம். திரைப்படம் குறித்த ஹிட்ச்காக்கின் ஆழமான எண்ணங்கள் அதில் பதிவாகியுள்ளன.அவருடைய திரைக்கதை உத்திகள் ரசிகர்களுக்கு அதிகபட்ச திகிலையும் தவிப்பையும் ஏற்படுத்தும் நோக்கம் உடையவை. அழகான பெண்களை கொலை செய்வதற்கு ஏற்ற கதாபாத்திரங்கள் என்று தனது படப் பாத்திரங்களைப் பற்றி ஹிட்ச்காக் கூறுகிறார். ஓர் அழகான பெண் அநியாயமாக கொலை செய்யப்படும் போது ஏற்படும் அனுதாபம் மொத்தமும் அவளுக்கு கிடைத்துவிடும் என்ற அவரது கணிப்பு சரியானதுதான். சைக்கோ படத்தில் கதாநாயகி ஷவரில் குளி்க்கும்போது கொலை செய்யப்படும் அந்த பிரசித்திப் பெற்ற காட்சி சினிமா ரசிகர்களால் மிகவும் சிலாகிக்கப்படுகிறது. அழகான கழுத்து வெட்டுவதற்கு ஆசையைத் தூண்டுவது என்ற விதமாக படுகொலை படங்களின் தந்தையான ஹிட்ச்காக் கூறுவார் என்றாலும் அவர் உண்மையில் போலீஸ்காரர்களைப் பார்த்தால் பயந்த சுபாவம் உடையவராகவே இருந்தார். ஒரு படத்தின் வில்லன் எவ்வளவு வெற்றிகரமாக செயல்படுகிறானோ அந்த அளவுக்கு படம் வெற்றி பெரும் என்பது அவர் கணிப்பு. மிகச் சாதாரணமான பின்புலங்களில் மிக அதீதமான நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக காட்டுவது அவருக்குப் பிடித்தமானது. இருள் கொண்ட திகிலான ஒரு பாழடைந்த கட்டிடத்தில் ஒரு கொலை நடப்பதைக் காட்டுவதை விட மக்கள் புழுங்கும் இடத்தில், கூட்டத்தின் இடையே வில்லன் புகுந்து கொலை செய்து தப்பிச் செல்வது பரபரப்பை ஏற்படுத்தும் என்பதை நன்கு அறிந்த ஹிட்ச்காக் இந்த உத்தியையே பின்பற்றினார். தி மேன் ஹூ நியு டூமச் படத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் கொலை நடக்கும் போது ஏற்பட்ட பரபரப்பை நினைத்துப் பாருங்கள். ரசிகர்களை அது அந்தளவுக்கு திடுக்கிட வைத்தது. தனக்கு வலுவான விஷூவல் மைன்ட் இருப்பதாக ஹிட்ச்காக் ஒருமுறை கூறினார். படத்தின் திரைக்கதை தயாரானதும் அதை முழுவதுமாக காட்சி வடிவில் கற்பனை செய்துக் கொள்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அதன் பிறகு அந்த திரைக்கதையை புரட்டிக் கூடப் பார்க்க மாட்டாராம். அதை தன் உள்ளத்தால் அணு அணுவாக அறிந்து வைத்திருப்பதாக அவர் கூறுவார். ஹிட்ச்காக் படங்களில் பெண்களுடனான மனித உறவுகளுக்கு கூடுதல் அழுத்தம் தரப்பட்டிருந்தது. குறிப்பாக தாயுடன் மனிதன் கொள்ளும் உறவு அவருடைய படங்களில் கூடுதல் முக்கியத்துவம் பெற்றது. நடிகர்களை மந்தையைப் போல் நடத்தியவர் என்று ஹிட்ச்காக் மீது புகார் உண்டு. ஆனால் நடிப்புக்கு என வந்துவிட்ட பிறகு அவர்கள் திரைக்கதைக்கு நியாயம் செய்ய வேண்டும் என்றும் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியவர் ஹிட்ச்காக். 60 ஆண்டு திரையுலக வாழ்வில் 53 படங்களை இயக்கியவர் ஹிட்ச்காக். Rear Window, A Man who knew too much, 39 Steps, Psycho, Vertigo, Rebecca போன்ற படங்கள் அவருடைய சாதனைகளாக கருதப்படுகின்றன. அகடமி விருதுகள் அவருக்கு பலமுறை நிராகரிக்கப்பட்ட போதும் ஸ்பெல் பவுண்ட் என்ற படத்தின் இசைக்கு அகடமி விருது கிடைத்தது. கலிபோர்னியாவில் தமது இறுதிக்காலத்தைக் கழித்த அவர் 80 வது வயதில் 1960ம் ஆண்டில் காலமானார். எந்த வித திடுக்கிட வைக்கும் மர்மம் இல்லாமல் இயற்கையாகவே அவர் உயிர் பிரிந்தது. ஆனாலும் மரணமும் எப்போது வரும் என்று தெரியாத ஒரு மர்ம வில்லன்தானே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!