யூடியூப் பார்த்து பழங்களை மட்டுமே சாப்பிட்டு வந்த பிளஸ் 2 மாணவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பர்ணட்டிவிளையை சேர்ந்தவர் நாகராஜன், சுங்கவரி துறையில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் சக்தீஷ்வர் (வயது17). இவர் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று என்ஜினீயரிங் கல்லூரியில் சேர தயாராகி வந்தார்.
அதாவது மாணவன் சக்தீஷ்வர் உடல் பருமனால் அவதியுற்று வந்துள்ளார். தற்போது மேற்படிப்பிற்காக கல்லூரிக்கு செல்ல இருந்த நிலையில் உடல் பருமனை பார்த்து சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்யலாம் என நினைத்துள்ளார். எனவே உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள் குறித்து யூடியூபில் தேடியுள்ளார். அதில் கிடைத்த தகவலின்படி கடுமையான உணவு கட்டுப்பாடுகளை கடைபிடித்து வந்துள்ளார்.
அதாவது கடந்த 3 மாதங்களாக திட உணவு சாப்பிடாமல் பழச்சாறு மட்டும் குடித்து உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். தொடர்ந்து பழச்சாறு குடித்து வந்ததால் சளித் தொல்லைக்கு ஆளாகி மூச்சு விட சிரமப்பட்டு உள்ளார். இந்தநிலையில் நேற்று காலையில் அதிக சளி தொல்லையால் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, உடல் பருமனை குறைக்க முறையாக அங்கீகாரம் பெற்ற சிறப்பு டாக்டர்களை அணுகி அவர்களின் பரிந்துரை அடிப்படையில் மட்டுமே உடல் பயிற்சி உள்ளிட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர். இதற்கிடையே இறந்த மாணவரின் இரு கண்களையும் பெற்றோர் தானம் செய்தனர்.
இந்நிலையில் ஆலோசனையின்றி டயட் முறையை பின்பற்ற கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
