தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வு கூடத்துக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் சப்-கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்பட 70 காலியிடங்களை நிரப்ப குரூப்-1 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த குரூப்-1 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது. இந்த பதவிகளுக்கு 2 லட்சத்து 27 ஆயிரத்து 982 பேர், குரூப்-1 ஏ பதவிக்கு 6 ஆயிரத்து 465 பேர், குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ பதவிக்கு 14 ஆயிரத்து 849 பேர் என மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இந்த நிலையில், குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ முதல்நிலை போட்டித் தேர்வு இன்று (ஞாயிற்றுகிழமை) நடைபெறுகிறது. தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும், கூடுதலாக 6 தாலுகாக்களிலும் என மொத்தம் 44 இடங்களில் குரூப் 1, குரூப் 1ஏ முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு கண்காணிப்பு பணியில் 987 பேர் ஈடுபடுகிறார்கள். தலைநகர் சென்னையில் மட்டும் 170 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வு கூடத்திற்கு அனுமதி சீட்டுடன் வந்து விடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காலை 9 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மேலும், 12.30 மணிக்கு முன்னர் தேர்வறையில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள், தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்த தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுடன் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும். அவ்வாறு வரத் தவறினால், அவர்கள் தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஆதார் அட்டை, பாஸ்போர்டு, ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டையின் அசல் அல்லது ஒளி நகலை கொண்டுவர வேண்டும்.
தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு உள்ளே செல்போன் மற்றும் மின்னணு கடிகாரம், புளூடூத் போன்ற மின்னணு உபயோகப்பொருட்கள் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
