அரபிக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 36 மணிநேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டது.
இந்நிலையில் அரபிக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு கொங்கன் கடற்பகுதிக்கு அப்பால் நிலை கொண்டுள்ள இது, அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயலாகவோ வலுவடையும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அப்படி புயலாக மாறினால், அதற்கு சக்தி என்று பெயரிடப்படும்.