வாரணாசி காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நிறைவடைந்தது. காசி என்று அழைக்கப்படும் வாரணாசிக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ள பன்னெடுங்கால தொடர்பை மீண்டும் புதுப்பிக்கும் வகையிலும், இரு மாநிலங்களுக்கு இடையே கலாசார பரிமாற்றம் மற்றும் வர்த்தக தொடர்பை மேம்படுத்தவும் காசி தமிழ் சங்கமம் என்கிற நிகழ்ச்சியை பிரதமர் மோடி முன்னெடுத்தார். இதன் அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளில் 2 தமிழ் சங்கமம் நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. இந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்த நிலையில், 3-வது காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வாரணாசியில் உள்ள நமோ காட் பகுதியில் கடந்த 15ம் தேதி தொடங்கியது. காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான தொன்மை , நாகரீக பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் நடந்த இந்த கலாச்சார நிகழ்வுக்கு பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் உத்தரப்பிரதேச அரசின் ஒத்துழைப்புடன் மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிலையில், தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று வந்த காசி தமிழ் சங்கமம் விழா நேற்று நிறைவடைந்தது. நமோ படித்துறையில் நிறைவு விழா நடந்தது. இதில் ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மாஞ்சி, மத்திய இணை மந்திரி சுகந்த மஜூம்தார் உள்ளிட்டோர் சிறப்பித்தனர். மேலும் மத்திய மந்திரிகள், தமிழ்நாடு மற்றும் உ.பி யை சேர்ந்த அறிஞர்கள், மாணவர்கள், தத்துவ ஞானிகள். கலைஞர்கள், கைவினைஞர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த 1,000 பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.