சி.பி.எஸ். இ பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது..!

நாடு முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான சி.பி.எஸ். இ பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது. மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அவற்றில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வுகள் தேதி நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுதேர்வு இன்று முதல் ஏப்ரல் 4ம் தேதி வரையும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 18-ம் தேதியும் நிறைவுபெறுகிறது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த முறை 23 நாட்களுக்கு முன்னரே தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.30 மணிக்கு முடிவடையும். இன்று 10ம் வகுப்பிற்கு ஆங்கிலம் பாடத் தேர்வும் 12 ம் வகுப்பிற்கு தொழில் முனைவு தேர்வும் நடைபெறுகிறது.

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நாடு முழுவதும் 24 லட்சத்து 12 ஆயிரத்து 72 பேர் எழுத உள்ளனர். அதேபோல் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை 17 லட்சத்து 88 ஆயிரத்து 165 பேர் என மொத்தமாக 42 லட்சத்து 237 பேர் எழுத உள்ளனர்.

மேலும் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட பள்ளிகளில் 7ஆயிரத்து 842 தேர்வு மையங்களில் 10லட்சத்து 50ஆயிரத்து 59 அறைகள் தேர்வுக்காக தயார் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் பாதுகாப்புக்காக உதவி கண்காணிப்பாளர்கள் 2 லட்சத்து 10 ஆயிரத்து 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *