அடடே.., அப்படியா!!!

தைப்பூசம்

கதை தெரியுமா..?

தைப்பூசம் விழா உலகம் முழுவதிலும் உள்ள முருக பக்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு முக்கிய விழாவாகும். இந்த விழா முருகனுக்குரிய முக்கியமான விரத, வழிபாட்டு நாள் என்றாலும் இந்த நாளில் சிவ பெருமான், அம்பாள் மற்றும் குரு பகவானை வழிபட சிறப்பான பலன் கிடைக்கும்.

தைப்பூச திருநாள் முருகப் பெருமானுக்குரியது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த தைப்பூசம் யாருக்குரியது, அன்று எந்த தெய்வத்தை, எப்படி வழிபட வேண்டும், தைப்பூச வழிபாடு தோன்றிய கதை, தைப்பூச நாளுக்குரிய சிறப்பு என்ன என்பது பற்றிய உண்மையான விளக்கங்களை தெரிந்து கொண்டு அன்றைய நாளில் விரதமிருந்து, வழிபட்டால் இறை அருளை முழுவதுமாக பெறலாம்.

முருகப் பெருமானுக்குரிய முக்கிய வேண்டுதல்களில் ஒன்று காவடி எடுப்பது. இந்த காவடி எடுக்கும் முறை தோன்றிய தலம் பழனி மலை. இந்த பழனி தலத்தில் மிக முக்கிய விழாவாக கொண்டாடப்படுவது தைப்பூசம். இந்த தைப்பூசத்திற்கும் பழனி மலை தலத்திற்கும் மிகப் பெரிய தொடர்பு உள்ளது.

சிவ பெருமான், நடராஜராக தனித்து ஆனந்த தாண்டவம் ஆடிய நாள், மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை. இந்த நடனத்தை பிரம்மா, விஷ்ணு, பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோருக்காக சிதம்பரத்தில் சிவ பெருமான் அரங்கேற்றினார். இந்த நடனத்தை பார்வதி தேவியும் ரசித்துக் கொண்டிருந்தார். சிவ பெருமானின் ஆனந்த தாண்டவத்தை கண்ட சிவகாமிக்கும் அதே போன்று தாண்டவமாட ஆசை வந்தது. சிவ பெருமானைப் போன்று அன்னையின் நடனத்தையும் காண பிரம்மா, விஷ்ணு உள்ளிட்டோர் ஆர்வம் கொண்டனர். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்டோரின் ஆசையையும் நிறைவேற்ற எண்ணிய அம்பிகை ஆனந்த தாண்டவம் நிகழ்த்திய நாள் தைப்பூச திருநாளாகும்.

சிவ பெருமான் ஆனந்த தாண்டவம் நிகழ்த்திய நாள் திருவாதிரை என கொண்டாடப்படுவதை போல், அம்பாள் நடனமாடிய திருநாள் தைப்பூசம் என கொண்டாடப்பட்டது. அதனால் இந்த நாள் அம்பிகை வழிபாட்டிற்குரிய நாளாக மாறியது. இந்த நாள் முருகனுக்குரிய திருநாளாக மாறிய தலம் பழனி தான்.

பழனி மலை அடிவாரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன், கைலாச நாதருடன் தனிக்கோவிலில் அருள்பாலிக்கிறாள். இக்கோவிலில் சிவன், அம்பாள் சன்னதிக்கு நடுவில் முருகன் சன்னதி அமைந்துள்ளது. கோவிலின் பிரதான தெய்வமாக பெரியநாயகி அம்மனும், சிவனும் இருந்தாலும், பிரதான வாசல் மற்றும் கொடிமரம் ஆகியன முருகன் சன்னதிக்கு எதிரிலேயே அமைந்துள்ளன. கோவிலுக்குள் வரும் போது முதலில் முருகனை தரிசித்த பிறகே அம்பாள் மற்றும் சிவனை தரிசிக்க முடியும்.

காலப் போக்கில் இக்கோவிலின் பிரதான தெய்வமாக முருகனே மாறினார். தைப்பூச விழாவிற்கான கொடி, முருகன் சன்னதிக்கு எதிரில் உள்ள கொடிமரத்திலேயே ஏற்றப்படுகிறது. இதனால் தைப்பூச விழாவும் முருகப் பெருமானுக்கு உரிய விழாவாக மாறிப் போனது. தற்போதும் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோவிலேயே நடத்தப்படுகிறது. தைப்பூச விழாவின் ஏழாம் நாளில் நடக்கும் தேரோட்டமும் இக்கோவிலில் இருந்தே புறப்பட்டு வீதி உலா வரும்.

இதே போல் பழனி மலைக் கோவிலில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமியும், அபிஷேகப்பிரியரான சிவனின் அம்சமாகவே திகழ்கிறார். இங்கு முருகனுக்கு தினமும் 6 முறை அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடத்தப்படுகிறது. ஆண்டிக் கோலம், ராஜ அலங்கார கோலத்தில் மட்டுமின்றி இன்னும் சில சிறப்பான கோலங்களிலும் அவர் காட்சி தருகிறார். இதில் அதிகாலையில் நடைபெறும் அலங்காரத்தின் போது முருகப் பெருமான், காவி உடையில் சிவ பூஜை செய்வதாக காட்சி தருவார். அதே போல் ஜடாமுனியுடன் சிவனை போன்ற காலத்திலும் காட்சி தருவார். அதோடு, அசுரர்களை வதம் செய்வதற்காக பழனி மலை முருகனின் பராசக்தி, சக்திவேலை அளித்த நாள் இந்த தைப்பூச நாளாகும். சிவனின் அம்சமாகவும், சக்தியின் அம்சமாகவும் முருகப் பெருமானே விளங்குவதால் தைப்பூசம் முருகனுக்குரிய வழிபாட்டு நாளாக மாறியது என்கின்றன புராணங்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!