சென்னையில் 29,187 பேருக்கு பட்டா..!

பெல்ட் ஏரியாவிற்கு எடுக்கப்பட்ட முடிவு வரலாற்றில் மிகப் பெரிய முடிவாக இருக்கும் என்று கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர். அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்றைக்கு ஏழை மக்களுக்கான நிவாரணத்தில் மிகப் பெரிய புரட்சியை செய்திருக்கிறார். அந்த புரட்சி என்னவென்று சொன்னால், சென்னையை சுற்றியிருக்கக்கூடிய 4 மாவட்டங்களில், பெல்ட் ஏரியா பகுதிகளில் இருக்கக்கூடிய 32 கிலோ மீட்டரில் குடியிருப்பவர்கள் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட நெடுங்காலமாக குடியிருப்பவர்கள் பட்டா பெறமுடியாமல் சிரமப்படுவதும், அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்யமுடியாமல் இருப்பதும் நம்முடைய முதல்-அமைச்சர் கவனத்திற்கு சென்றதின் விளைவாக இன்றைக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் சென்னையை சுற்றியிருக்கக்கூடிய அந்த நான்கு மாவட்டங்களில் இருக்கக்கூடிய பெல்ட் ஏரியா மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்திருக்கிறார்கள்.

முடிவு செய்த நேரத்தில், சென்னையில் மட்டும் 29,187 பேர் ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதியில் குடியிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் அந்த பட்டா வழங்குவதற்கான பணிகளை ஆறு மாத காலத்திற்குள் முடித்துக் கொடுக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த பெல்ட் ஏரியா சட்டம் 1962-ல் வந்தது. 1962-லிருந்து 2025 வரை அதன் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. இன்றைக்கு முதலமைச்சர் அவர்கள் மிகத் தெளிவாக ஒரு முடிவெடுத்து ஆறு மாதத்திற்குள் பட்டா வழங்கவேண்டும் என்று ஆணையிட்டது மட்டுமல்லாமல், மாவட்ட அளவில் ஒரு குழுவும், சென்னையில் மாநில அளவில் ஒரு குழுவும் அமைத்து உடனடியாக அந்தப் பணிகளை துவங்கி ஆறு மாத காலத்திற்குள்ளாக முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். அந்தப் பணிகளை நாங்கள் செய்யவிருக்கிறோம். சென்னையை சுற்றியிருக்கக்கூடிய 4 மாவட்ட மக்களுக்கும், மிகப் பெரிய வரப்பிரசாதமாக இது அமையவிருக்கிறது.

மதுரை, திருநெல்வேலி போன்ற மாநகராட்சிகளில் இதே போல பிரச்சினையிருக்கிறது. அங்கே இருப்பவர்களுக்கும் பட்டா வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டு, மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட தலைநகரில் இருக்கக்கூடிய பகுதிகளுக்கெல்லாம் சேர்ந்து மொத்தம் 57,054 பேர் ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதிகளில் குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற அந்த உத்தரவையும் முதல்-அமைச்சர் வழங்கியிருக்கிறார்கள். ஏறத்தாழ 86,000 பேருக்கு பட்டா வழங்குகின்ற அந்த தீர்மானத்தை

இன்றைக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஆறு மாத காலத்திற்குள் வழங்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். 86,000 பேர் போக இன்னும் விடுபட்டிருந்து மனுக்கள் வரும் என்று சொன்னால், அதையும் பரிசீலனை செய்யுங்கள் என்று முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். 1962-லிருந்து 2025-வரை உள்ள பிரச்சினையை இன்றைக்கு முடிவு செய்திருக்கிறார்கள்.

இதுவரை முதல்-அமைச்சர் ஆட்சி வந்த பிறகு, பத்து லட்சத்து இருபத்தி ஆறாயிரம் பேருக்கு நாங்கள் பட்டா வழங்கி இருக்கிறோம். முதல்-அமைச்சர் இன்னும் கொஞ்சம் விரைவுப்படுத்தி, வரும் ஆறு மாதத்திற்குள்ளாக ஆறு இலட்சத்து இருபத்தி ஒன்பாதாயிரம் பேருக்கு பட்டா வழங்குகின்ற அந்தப் பணியையும் செய்து கொண்டிருக்கிறோம். தொடர்ந்து பொதுமக்கள் பொதுவாக கலைஞர் வழியில் முதல்-அமைச்சர் ஒரு தனி மனிதனுக்கு குடியிருப்பதற்கு இடமோ, வீடோ இல்லாமல் இருக்கக்கூடாத அந்த உணர்வோடு ஒவ்வொரு காரியத்தையும் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த பெல்ட் ஏரியாவிற்கு எடுக்கப்பட்ட முடிவு மிகப் பெரிய அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய முடிவாக இந்த முடிவு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!