அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும்..!
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்தது. இதே போல் தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏரி, குளங்கள், அணைகள் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது அடுத்த 2 நாட்களில் மேலும் வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என்று வானிலை மையத்தின் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். தற்போது புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலை கொண்டு உள்ளது.
இது அடுத்த 2 நாட்களில் மேலும் வலுவடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இன்று (17-ந்தேதி) முதல் 19-ந்தேதி வரை 3 நாட்கள் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் இன்று (17-ந்தேதி) வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும். சென்னை,செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், காஞ்சிபும்,திருவள்ளூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (18-ந்தேதி) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதேபோல் 19-ந்தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் 20-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.