சூடானில் நீடித்து வரும் உள்நாட்டு போர்..!
சூடானில் நீடித்து வரும் உள்நாட்டு போரில் துணை ராணுவப்படை வீரர்களின் முகாம்கள் மீது குண்டு வீசப்பட்டதில் 127 பேர் உயிரிழந்துள்ளனர்.
சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு இராணுவமும், துணை இராணுவப் படையின் அதிவிரைவுப் படையினரும் இணைந்து இராணுவப் புரட்சியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமர் அப்துல்லா ஹாம்டொக் சிறைப்பிடிக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இதன் பிறகு, அங்கு இராணுவ ஆட்சி நடந்து வந்த நிலையில், மீண்டும் ஜனநாயக ஆட்சியைக் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இது தொடர்பாக, இராணுவத் தளபதி அப்தெல் ஃபத்தா அல் புர்ஹானுக்கும், துணை இராணுவத்தின் அதிவிரைவுப் படைத் தளபதி முகமது ஹம்தான் டாக்லோவுக்கும் இடையே மோதல் வெடித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே உள்நாட்டு போர் மூண்டது. இதில் பொதுமக்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து போரை நிறுத்த இரு தரப்பினரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ஐ.நா சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின.
இதற்கிடையே இரு இராணுவ தளபதிகளும் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டதையடுத்து சவுதி அரேபியாவில் அமைதி பேச்சு வார்த்தை தொடங்கியது. இதில் இராணுவ பிரதிநிதிகள் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்திய போது எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் சூடானில் மீண்டும் உள்நாட்டு போர் தீவிரமடைந்து உள்ளது.
இந்த நிலையில் சூடானில் உள்நாட்டு கலவரம் நீடித்து வரும் நிலையில் துணை ராணுவப்படை வீரர்களின் முகாம்கள் மீது குண்டு வீசப்பட்டது. இதில் 127 பேர் உயிரிழந்தனர். இதற்கு துணை ராணுவம் பதிலடி கொடுக்கும் என்பதால் உள்நாட்டு போர் தீவிரம் அடையும் என்று கூறப்படுகிறது.