தெலுங்கானாவின் முழுகு மாவட்டத்தில் திடீர் நிலநடுக்கம்..!
தெலுங்கானாவின் முழுகு மாவட்டத்தில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஐதராபாத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
தெலுங்கானாவின் முலுகு மாவட்டத்தில் இன்று காலை 5.3 ரிக்டர் அளவில் 40 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் ஐதராபாத்திலும் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி தெலுங்கானாவின் ஐதராபாத், ஹனுமகொண்டா, கம்மம், பத்ராத்ரி கொத்தகுடேம் உள்ளிட்ட இடங்களிலும், ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா, ஜக்கையாபேட்டை, திருவூரு, கம்பாலகுடேம் ஆகிய இடங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று காலை 7.27 மணிக்கு ஏற்பட்ட இந்த திடீர் நிலநடுக்கம், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் அல்லது பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை. தற்போது அதிகாரிகள் அங்கு நிலைமையை மதிப்பிட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், பூகம்பங்களின் போது நெரிசலான அல்லது பாதுகாப்பற்ற கட்டமைப்புகளை தவிர்க்குமாறும் நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
முன்னதாக பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று (டிசம்பர் 4) நள்ளிரவு 12.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கு பிலிப்பைன்சை தாக்கிய இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.