இன்றைய முக்கிய நிகழ்வுகள் (04.12.2024)
இன்று தேசிய கடற்படை தினமின்று
இந்தியா, மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட தீபகற்ப நாடு. இந்தியாவின் எல்லைக்கோடு பெரும்பாலும் கடற்கரையை கொண்டு தான் உள்ளது. கடற்கரையின் நீளம் 7,517 கி.மீ.,. இதனால் கடலோர பாதுகாப்பு என்பது முக்கியமானது. அந்த வகையில் நாட்டை எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பதில், முப்படைகளுள் ஒன்றான கப்பற்படை, முக்கிய பங்கு வகுக்கிறது. உலகின் ஐந்தாவது பெரிய கடற்படையாகவும் திகழ்கிறது. 1947 முதல் செயல்படும் இந்திய கடற்படையில், 65 ஆயிரம் மேற்பட்ட வீரர்கள் பணிபுரிகின்றனர். 1971ல் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரின் போது, பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சி மீது இந்திய கடற்படை தாக்குதலை நடத்தியது. ‘ஆப்பரேஷன் டிரைடன்ட்’ என்ற பெயரில் இதே டிசம்பர் 4ம் தேதி தொடங்கப்பட்ட அந்த போரில் இந்திய கடற்படை சிறப்பாக செயல்பட்டு வெற்றியும் பெற்றது. இதனை நினைவுபடுத்தும் விதமாகவே இந்திய கடற்படை சார்பில் ஆண்டுதோறும் டிச.,4ம் தேதி இந்திய கடற்படை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தினத்தை முன்னிட்டு கடற்படை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பாதுகாப்பு துறையில் வீரத்துடன் போரிட்டு, தங்களது இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு ‘பரம் வீர் சக்ரா’, ‘மகா வீர் சக்ரா’ மற்றும் ‘வீர் சக்ரா’ ஆகிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றன. கடற்படையில் இளைஞர்கள் அதிகளவில் சேர முன்வர வேண்டும். இதற்கான முயற்சிகளில் கடற்படை ஈடுபட வேண்டும். மேலும் கடலோர பாதுகாப்பை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் திரு வி ஆர். கிருஷ்ண அய்யர் நினைவு நாள்.
சொந்த ஊர் கேரளா என்ற போதிலும் அவரது தாய் மொழி தமிழாகும். பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் பெற்றவர். கேரளா சட்டசபையில் கம்யுனிஸ்ட் கட்சி ஆதரவுடன் MLA வாக தேர்ந்தெடுக்கப்பட்டு EMS நம்புதிரிபாத் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றிய இவர் பல்வேறு சமூக சீர்திருத்த முற்போக்கு இயக்கங்களில் பங்கெடுத்துள்ளார். 1973 ஆம் ஆண்டு முதல் 1980 வரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். அரசியல்வாதியாக இருந்து சுப்ரீம் கோர் நீதிபதியானவர் இவர் மட்டுமே. மரணதண்டனைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். இன்று நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் பொதுநல வழக்கு என்ற முறைக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் கிருஷ்ணய்யர். ஒரு நபரைக் கைது செய்யும்போது அச்சுறுத்தல், பாதுகாப்பின்மை போன்ற காரணங்கள் எதுவுமில்லாத நிலையிலும் அவரது கையில் விலங்கிட்டு அழைத்து செல்வது மனித மாண்பிற்கு எதிரானது என்று கூறி அதற்கு எதிராக தீர்ப்பு வழங்கியவரிர். 1975-ல் அப்போதையை பிரதமர் இந்திரா காந்தியின் ரேபரேலி தேர்தல் வழக்கில் இவர் அளித்த அதிரடியான தீர்ப்பே, பின்னர் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட காரணமாக இருந்தது. சுப்ரீம் கோர்ட்டுக்கு சாமானிய மக்கள் தங்களுக்கு இழைக்கப்படும் மனிதஉரிமை மீறல்கள், துன்பங்கள், கொடுமைகள் பற்றிய சாதாரண போஸ்டில் கடிதங்களை அனுப்பி வைத்தால், அது கூட வழக்குகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. கடித வழி நீதி நல்கும் முறையை தீவிரமாக அமல்படுத்தினார். நூற்றுக்கணக்கான நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். அன்னாருக்கு நமது மரியாதை கலந்த அஞ்சலி உரித்தாகுக !
பாரசீகக் கவிஞர், மெய்யியலாளர், கணிதவியலாளர் உமர் கய்யாம் (Omar Khayyam) காலமான தினமின்று
பரந்த உலகப் பார்வையுடன், வாழ்க்கையில் ஒரு இலக்கை வகுத்து செயல்பட்ட இவர், ஒரு சூஃபி போன்ற வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். பல திறன்களைப் பெற்றிருந்தாலும், ஒரு கவிஞராகத்தான் மிகவும் புகழ்பெற்றார். தனக்கென ஒரு வாழ்க்கை நெறியை வகுத்துக்கொண்டு அவற்றை ரூபயாத் (Rubaiyat) எனப்படும் நான்குவரிக் கவிதைகளாக வெளிப்படுத்தினார். தனது துணிச்சலான கருத்துகளால் பல எதிர்ப்புகளை சந்தித்தார். இவர் வித்தியாசமான கவிஞர். கடவுள், ரோஜா மலர்கள், திராட்சை ரசம், அதை ஊற்றும் இளம்பெண்கள் இவற்றைக் கருப்பொருளாகக் கொண்ட இவரது கவிதைகளில் வேதாந்தமும் பரவிக் கிடக்கிறது. மதுவைப் பற்றி மிக அற்புதமாக பாடியுள்ளார். உமர் கய்யாமை நாத்திகவாதி என்று கூறுபவர்களும் உண்டு. சாம்பிளுக்கு இக்கவிஞரின் மொழிபெயர்ப்புகளில் மிகச் சில இதோ; சூடாகவும் குளிராகவும் இல்லாத இனிய நாள் இது ரோஜாத்தோட்டத்தைக் கழுவித்துடைக்கின்றன மழை மேகங்கள் ‘சிவப்பு மது’ என பாரசீக மொழியில் ரோஜாவிடம் சொல்கிறது வானம்பாடி தன் மஞ்சள் கன்னம் சிவக்க . ஓ என் காதலியே, நேற்றின் பாபங்களையும் நாளையின் பயங்களையும் இன்று போக்கும் கோப்பையை நிரப்பு, நாளை நான் நேற்றின் ஏழாயிரம் வருடங்களோடு நானாகவே இருக்கலாம் நாளையைப்பற்றி என்ன கவலை? . அந்தியிலே ஒருநாள் சந்தையிலே கண்டேன் குயவன் களி மண்ணைத் தட்டிக்கொண்டிருந்ததை அழிந்துபோன நாக்கோடு அது முனகியது மெல்ல சகோதரனே, மெல்ல . நகரும் விரல் எழுதுகிறது. எழுதி எழுதிச் செல்கிறது பக்தியாலோ, அறிவாலோ திரும்பப் பெறமுடியாது பாதி வரியைக்கூட உனது கண்ணீர் அத்தனையாலும்கூட அழித்துவிட முடியாது ஒரு சொல்லைக்கூட
டிசம்பர் 4 1976 தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்பட்ட ந.பிச்சமூர்த்தி நினைவு நாள்
தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கூறப்படுபவர் ந.பிச்சமூர்த்தி ஆவார். பாரதிக்குப் பிறகு மொழி ஆளுமை, கூறும் முறை ஆகியவற்றால் நவீனத் தமிழ் இலக்கியத்தில்ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் ந. பிச்சமூர்த்தி ஆவார். தாகூர் போன்ற தாடி வைத்த அவரின் தோற்றம், மரபின் மீது கொண்டிருந்த அசாத்திய நம்பிக்கை ஆகியன அந்தக் கருத்துக்குக் கொஞ்சம் வலுவும் சேர்த்தன. ஆனால், ந. பிச்சமூர்த்தி மரபை மட்டும் கொண்டாடும் படைப்பாளியல்ல அவர் நவீன மொழியின் புதுமையையும் பொருளின் இனிமையையும் தன்னகத்தே கொண்டவர்.பாரதிக்குப்பின் தமிழ்க் கவிதை உலகம் பல்வேறு மாற்றங்களைக் கண்டது. பல்வேறு கவியாளுமைகளும் தமிழ்க்கவிதை உலகை அணி செய்தனர். அவர்களில் முக்கியமானவர் ந. பிச்சமூர்த்தி. பாரதியின் வசன கவிதையையும் வால்ட் விட்மனின் கவிதைகளையும் தன் முன்னோடியாகக் கொண்டு புதுக்கவிதை என்னும் புதிய வகைமையைத் தொடங்கி வைத்தார். தத்துவார்த்தம் பிணைந்த கதைசொல்லும் முறையினைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும்இவரது கவிதைகள் திருமூலரின் பாடல்களைப் போன்று அமைந்திருப்பதால்இவரைத் தமிழ்ப் புதுக்கவிதையின் திருமூலர் என்றும் அழைக்கின்றனர். தமிழ்ப் புதுக்கவிதையின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டு அதனை வளப்படுத்த அயராது பாடுபட்ட தமிழ்ப்புதுகவிதையின் தந்தையாகிய பிச்சமூர்த்தி இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர் . வாழ்க்கை சார்ந்த இயல்பான பார்வையே ந.பி யின் கவிதைகள். இயற்கையை அதன் அழகை, அதன் ஒழுங்கைப் பாடிவந்தாலும், சமகால வாழ்க்கையையும் அவர் பாடத் தவறவில்லை. இவரின் கிளிக்கூண்டு, காட்டுவாத்து, வழித்துணை, பெட்டிக்கடை நாராயணன் ஆகிய கவிதைகள் மிகவும் புகழ்பெற்றவை. இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. தமிழின் புத்திலக்கியத்தின் முன்னோடி பிச்சமூர்த்தி உருவாக்கிய புத்திலக்கியம் அவரின் பெயரை என்றென்றும் தமிழிலக்கிய வரலாற்றில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த நாள் இன்று
1911ஆம் ஆண்டில் மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவட்ட ஆட்சியர் ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டவர்.[1]. இந்திய விடுதலை இயக்கப் போராட்டத்தில் இளம் வயதில், 20,000 போராளிகளை ஒன்று திரட்டி, புரட்சி இயக்கம் ஒன்றை தோற்றுவித்துப் போராடியவர். வாழ்வின் பெரும்பகுதியை இந்தியா, பாகிஸ்தான், மியான்மர் நாட்டுச் சிறைகளில் கழித்தவர். வாழ்வின் பிற்பகுதியில் விரக்தியுற்று சந்நியாசம் பெற்று மைசூர் அரசில் நந்தி மலையடிவாரத்தில் ஆஸ்ரமம் அமைத்துக் கொண்டு ஸ்ரீ ஓம்காரானந்த சுவாமி என்ற பெயரில், தனது 88ஆவது வயதில் 4 மார்ச் 1978இல் காலமானவர்.
ஆர்.வெங்கட்ராமன் பிறந்த நாள்
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன் 1910ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி தஞ்சாவுர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள ராஜாமடம் என்ற கிராமத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் ராமசாமி வெங்கட்ராமன்.இவர் ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்” (1942) ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டார்.
பின்பு இவர் லேபர்லா ஜர்னல் (1949) என்னும் இதழைத் தொடங்கினார். 1983ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார். இந்திய ராணுவ துறையில் ஏவுகணை திட்டப்பணிகளை கொண்டுவந்தார். சமூக அறிவியல் மருத்துவ பட்டம், தாமரைப் பட்டயம் போன்ற விருதுகளையும், மேலும் இவர் எழுதிய சோவியத் நாடுகளுடன் காமராஜரின் பயணம் என்ற நு}லுக்கு ரஷ்யாவின் ‘சோவியத் லேண்ட்” என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது. உண்மையான தேசபக்தரும், வழக்கறிஞரும், சிறந்த பணியாளரும் மற்றும் நாட்டின் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை கொண்டவருமான ஆர்.வெங்கட்ராமன் தனது 98வது வயதில் (2009) மறைந்தார்.