பூ வியாபாரி மனைவி அக்கவுண்ட்டுல ரூ.30 கோடியா?
கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் சன்னபட்னா நகரை சேர்ந்த பூ வியாபாரி சையத் மாலிக் புர்ஹான். இவரது மனைவிக்கு எஸ்.பி.ஐ வங்கியில் கணக்கு இருக்கிறது. இதில் ரூ.30 கோடி பணம் போடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.இதில் கடைசியாக வெறும் ரூ.60 மட்டுமே இருந்த நிலையில், இவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது என்று வங்கிக்கு சந்தேகம் எழுந்தது. உடனே சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரை அழைத்து விசாரித்துள்ளனர்.
அப்போது தான் அவருக்கு தனது வங்கிக் கணக்கில் பல கோடி ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரிக்கையில், சமீபத்தில் ஆன்லைன் மூலம் தனது மனைவிக்கு சேலை ஒன்று வாங்கியதாகவும், அதற்கு கார் பரிசாக விழுந்திருப்பதாகவும் கூறப்பட்டது. இதற்காக தங்கள் வங்கி கணக்கு விவரங்கள் வேண்டும் என்று தொலைபேசி மூலம் சிலர் கேட்டு வாங்கியுள்ளனர். அவர்கள் பின்னர் செல்போனிற்கு வந்த OTP குறித்தும் கேட்டு அறிந்து கொண்டனர்.
ஆனால் இவ்வளவு எப்படி வந்தது என்று தனக்கு தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி சன்னப்பட்னா போலீசில் அளித்த புகாரின் பேரில் மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில் இதே வங்கிக் கணக்கில் முறைகேடாக பல பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளன. இதை யார் செய்தது என்று விசாரித்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என்றனர்.இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த எஸ்.பி.ஐ நிர்வாகம், வங்கி கணக்கு மற்றும் OTP விவரங்கள் வாடிக்கையாளர் மூலம் அடையாளம் தெரியாத நபர்களுக்கு பகிரப்பட்டுள்ளது. இந்த மோசடியில் வங்கிக்கோ அல்லது வங்கி கிளைக்கோ எந்தவித தொடர்பும் இல்லை.
இந்த வங்கி கணக்கு தொடர்பாக சண்டிகர், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட் ஆகிய இடங்களில் மோசடி புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
யாரோ போலி அடையாளத்தை கொண்டு மோசடியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். வாடிக்கையாளர்கள் யாரும் தங்கள் செல்போனிற்கு வரும் OTPஐ யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள் என்று வங்கி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.