பொள்ளாச்சி வழக்கில் அடுத்த திருப்பம்

 பொள்ளாச்சி வழக்கில் அடுத்த திருப்பம்
`ஆதாரம் இல்லாததால் மேல் நடவடிக்கை இல்லை!’ 

பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய பொள்ளாச்சி வழக்குடன் தொடர்புடைய அடிதடி வழக்கில் ஆதாரம் இல்லாததால் மேல் நடவடிக்கையைக் கைவிடுவதாக சி.பி.ஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் பறித்ததாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார். பல பெண்கள் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக பல வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, இந்த வழக்கில் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். வழக்கில் தேடப்பட்டு வந்த திருநாவுக்கரசு என்பவர் மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். 

இதற்கிடையே, புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரை இரண்டு நாட்கள் கழித்து, 26-ம் தேதி பொள்ளாச்சி ஜோதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பாபு, செந்தில், வசந்தகுமார் ஆகிய 3 பேர் முதலில் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த மணிவண்ணன் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். தொடர்ந்து, மணிவண்ணனுக்குப் பாலியல் வழக்கிலும் தொடர்பிருப்பது விசாரணையில் தெரியவந்ததையடுத்து, அந்த வழக்கிலும் சேர்க்கப்பட்டார். இதனால், மணிவண்ணன் தவிர்த்து, மீதமுள்ள 3 பேரும் பிணையில் வெளியே வந்தனர்.

பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்ததையடுத்து, சிபிசிஐடி விசாரித்து வந்த இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை மற்றும் அடிதடி என இரு வழக்குகளையும் சிபிஐ விசாரித்து வந்தது. இதில், அடிதடி வழக்கில் ஆதாரம் இல்லாததால் மேல் நடவடிக்கையைக் கைவிடுவதாக கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது, சி.பி.ஐ. இந்த வழக்கின் விசாரணை 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
அன்றைய தினம் இறுதி வாதம் நடைபெற்று தீர்ப்பு தேதி அறிவிக்க வாய்ப்புள்ளது. முன்னதாக, அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட பார் நாகராஜ்,

இந்த அடிதடி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வருகிற 27-ம் தேதி பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை வர வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...