அரசு பேருந்தில் ஆன்லைன் முன்பதிவிற்கு பம்பர் பரிசு அறிவிப்பு..!
இம்மாதம் முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும், முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளில், 13 பேர் மாதந்தோறும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் – போக்குவரத்துத் துறை
தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் ஆன்லைனில் முன்பதிவு செய்வோருக்கு, குலுக்கல் முறையில், முதல் பரிசாக இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பேருந்துகளில், ஆன்லைன் முன்பதிவை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பு குலுக்கல் முறை மூலம் உயர் பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நவம்பர் 21 ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 20 ஆம் தேதி வரை அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்கு, குலுக்கல் முறையில் முதல் பரிசாக இரு சக்கர வாகனம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதே போன்று, 2-வது பரிசாக எல்இடி ஸ்மார்ட் டிவியும், 3 ஆவது பரிசாக குளிர்சாதனப் பெட்டியும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வரும் பொங்கலுக்கு பிறகு, சிறப்பு குலுக்கல் நடைபெற்று, பரிசுகள் வழங்கப்படும் என்றும் போக்குவரத்து கழகம் குறிப்பிட்டுள்ளது.
இவற்றுடன், வழக்கமான மாதாந்திர குலுக்கல் முறையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இம்மாதம் முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும், முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளில், 13 பேர் மாதந்தோறும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.அதில், முதல் 3 வெற்றியாளர்களுக்கு தலா 10,000 ரூபாயும், மற்ற 10 வெற்றியாளர்களுக்கு தலா 2,000 ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தினை முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.