பொங்கல் நம் பாரம்பரியத்தின் திருவிழா
பொங்கல் நம் பாரம்பரியத்தின் திருவிழாவாகும் இது மதம் கடந்து தமிழர் திருநாள் ஜனவரி மாதத்தில் தை முதல் நாளில் மூன்று நான்கு நாட்களில் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது. ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும். தைப் பொங்கல் என்பது நமக்கு நெல்லை விளைவிக்க எவையெல்லாம் உதவியதோ அவற்றிற்கெல்லாம் நன்றிகூறி வழிபடுவது.
புதிதாக விளைந்த நெல்லை அறுவடை செய்து அரிசியாக்கி பொங்கலிட்டு இயற்கைத் தெய்வத்துக்கும், சூரியன், மாடு உட்பட உதவிய எல்லாவற்றிற்கும் நன்றி செலுத்துவதே பொங்கல்.
நீர் வளம் கொண்ட இடங்களில் மூன்று வேளாண்மை நடக்கும். நீர் வளமில்லா இடங்களில் மழை நீர்த் தேக்கத்தால் ஒரு வேளாண்மைதான் விளைக்க முடியும். ஆகவே, மார்கழி அல்லது தை மாத அறுவடையே நாடெங்கும் நிகழும். அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும். செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போக்காமல் நீர் சேர்த்துச் சமைத்து பருப்புக் குழம்புடன் உண்பதும் மரபு. பொங்கு என்ற சொல் கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் எனப் பொருள்படும். பொங்குவதால் பொங்கல். பொங்கல் விழாவை தமிழர் என்னும் இனக்குழு தொடர்பான விழா என்று தெளிவாக உணரமுடியும்.
பொங்கல் விழாவை தமிழர் தேசிய விழாவாக பலர் கருதுகின்றனர். பொங்கலை தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கமும் உள்ளது. கிருத்துவர்கள் தங்கள் தேவாலயங்களில் கரும்புடன் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். தமிழ் முஸ்லீம்களில் பல குடும்பங்களில் பொங்கலன்று சர்க்கரைப் பொங்கலுடன் 16 வகைக் காய்கறிகளைச் சமைத்துச் சிறப்பு விருந்தாக குடும்பத்தினருடன் உண்பதும், பொங்கல் நாளன்று வீட்டில் அசைவ உணவுகளை தவிற்கும் வழக்கமும் உள்ளது.
இந்தப் பண்டிகை நான்கு நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.