வரலாற்றில் இன்று – 04.01.2020 – லூயி பிரெயில்
இருளின் சிறையில் இருந்தவர்களுக்கு வெளிச்சம் கொடுத்த லூயி பிரெயில் 1809ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார். இவருடைய பிறந்த தினமே சர்வதேச பிரெயில் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
லூயி மூன்று வயதில் தன்னுடைய தந்தையின் பட்டறையில் விளையாடி கொண்டிருக்கும் போது ஊசி அவருடைய கண்ணில் பட்டு பார்வையை இழந்தார். அதன்பின் மற்றொரு கண்ணிலும் பரிவுக்கண் நோய்
ஏற்பட்டு பார்வையை இழந்தார்.
இவருக்கு பார்வை திறன் இல்லாவிட்டாலும், புரிந்துகொள்ளும் சக்தி அதிகமாக இருந்தது. எனவே 1819ஆம் ஆண்டு விழி இழந்த இளைஞருக்கான நிறுவனத்தில் பிரெயில் சேர்க்கப்பட்டார்.
லூயி படிக்கும் நிறுவனத்திற்கு பிரான்ஸ் ராணுவத்தில் கேப்டனாக இருந்து ஓய்வு பெற்ற சார்லஸ் பார்பியா என்பவர் வருகை தந்து எந்த ஒளியையும் பயன்படுத்தாமல் தகவல்களை பரிமாற்றம் செய்யும் முறையை (நைட் ரைட்டிங்) விளக்கினார். இது விரல்களால் பேப்பரைத் தடவிப்பார்த்து எண்ணங்களை பரிமாற்றம் செய்யும் முறை.
பிரெயில், இந்தப் புதிய முறையைக் கற்றுக்கொண்டு, அதில் சில முன்னேற்றங்களையும் கொண்டு வந்தார். கடைசியாக புள்ளிகளை எண்ணி எண்ணி எழுத்துக்களை புரிந்துகொள்ளும் பிரெயில் முறையை உருவாக்கினார். பிரெயிலின் இந்த புதிய முறையை விளக்கும் முதல் புத்தகம் 1820ஆம் ஆண்டுகளின் இறுதியில் வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கான அங்கீகாரம் அப்போது கிடைக்கவில்லை.
1932ஆம் ஆண்டு கூடிய சர்வதேச மாநாட்டில் தான் பிரெயில் முறைக்கு அதிகாரப்பூர்வமான அங்கீகாரத்தை வழங்கியது. இவர் 1852ஆம் ஆண்டு மறைந்தார்.