பொறியாளர் தினம்
பொறியாளர் தினம்
வானம் கூரை
பூமி தரையாய்
கடலின் நீலம்
காட்டின் நீளம்
மலையின் உயரம்
மடுவின் பள்ளம்
யாவும் வீடாய்
வாழும் ஜீவன்
பொறிஞர் அன்றோ !
கோயில் கலசம்
ஆலய உயரம்
மசூதியின் வளைவு
அனைத்தும் அளக்க
ஒரே அளவீடு..
எங்கள் அளவில்
மதங்கள் இல்லை
இனங்கள் இல்லை
பூமியெங்கும் ஒரே அளவு
ஆண்டவனுக்கும்
மாண்டவனுக்கும்
அளந்து கொடுப்போம்
அங்குலம் என்பது
யாவருக்கும் ஒன்றே !
விண்ணைக் கிழிக்கும்
ஊர்தி செய்வோம்
கடலின் ஆழம் காணும்
கப்பல் செய்வோம்
பசியை போக்கும்
நெல்லுக்கும் உயிர்
கொடுப்போம்
ஆலைகளோடு
சாலை அமைப்போம்
ஆயுதம் செய்து
அமைதி காண்போம்
கழிவுகளையும்
நீங்க செய்வோம்
காடு வளர்த்து
நாடு காப்போம் !
எங்கும் காண்பீர்
எங்கள் ஆட்சி
இணையம் போதும்
அதற்கு சாட்சி…
யாரின் கனவும்
காட்சியாகும்
எங்கள் கைகள்
வரைந்து விட்டால்!
புத்தியை தீட்டி
பாயும் நீரை கட்டி
இயற்கையோடு முட்டி
அழியா கவிதை
நாங்கள் படைப்போம்…
மரத்தின் மதிப்பு
மண்ணின் அரிப்பு
நீரின் தெறிப்பு
வானின் விரிப்பு
அனைத்தும் அளப்போம்!
வெயிலும் மழையும்
ஒன்றே என்போம்
மழைநாளில் பார் துயில
அரணாய் நாங்கள்
அணையை காப்போம்…
சமாதியும் சாதனையாக
சாய்ந்த கோபுரம் அதிசயமாக
சலிக்காது உழைத்திருப்போம்
ஒற்றை தேநீரில் உலகின்
உயிர்ப்பை பெறுவோம் !
சோறு வேண்டோம்
சோர்வு அண்டோம்
திறந்த மடையில்
பொங்கும் நீராய்
உற்சாகமாய்
பணிகள் செய்வோம் !
உயிர்கள் துயில
இன்பம் பயில
அகிலம் காப்போம் !
கலைந்த சிகையும்
கறுத்த மேனியும்
காய்ந்த உதடும் தாங்கி
உலகம் காப்போம் !
பொறியாளர் தின நல்வாழ்த்துக்கள்
by Sugumar