பௌர்ணமி
இன்று பௌர்ணமி. வானில் இரவில் நிறை நிலா காணப்படும். பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
ஒவ்வொரு திங்களிலும் நிறை நிலா வந்து போவதுண்டு.
ஒரு காலத்தில், நிறை நிலா இருந்த போது, வள்ளல் பாரி, தனது பறம்பு மலையையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் அரசாட்சி செய்து கொண்டு தனது இரு தவப்புதல்விகள் அங்கவை, சங்கவையுடன் மகிழ்ந்த காலமும் ஒன்று இருந்தது.
அப்படி மகிழ்ந்த அந்த பௌர்ணமி தினத்தின் அடுத்த திங்களில், மூவேந்தர்கள் வஞ்சகத் தன்மையோடு போரிலே பாரியையும் கொன்று விட்டு, அவரது நாட்டினையும் கைப்பற்றினர். இந்த சோக நிகழ்வுகளை நினைத்துக் கொண்டு நாடு இழந்தும்,தம் தந்தையையும் இழந்து பாரி மகளிர் இருவரும் வருத்தமுடன் பாடும் பாடல் ஒன்று பாடியுள்ளனர் என்பதை புறநானூற்றில் நாம் அறிவோம்.
இந்த பௌர்ணமி தினத்தில், அந்தப் பாடலை மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.
” அற்றைத் திங்கள் அவ் வெண்ணிலவில், எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார்,
இற்றைத் திங்கள் இவ் வெண்ணிலவில்
வென்று ஏறி முரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார் : யாம் எந்தையும் இலமே “.
இப்பதிவினை மேற்கொள்ளும் போது, அரச குடும்பத்தில், வாழ்ந்த பாரியின் மகள்கள், காலத்தின் சோதனையால், தந்தை மற்றும் நாட்டனைத்தையும் இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட அக்காலத்தினை நினைத்து மிக வருத்தமுடன் பதிவை மேற்கொண்டேன்.
முருக. சண்முகம்.