இயக்குநர் துரை
பசி உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ள இயக்குநர் துரை உடல்நலக்குறைவு காரணமாக 22/4/2024 காலமானார். அவருக்கு வயது 84. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 46 படங்களை இயக்கியுள்ள துரை, தமிழ் திரையுலகின் மூத்த கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல தளங்களில் பணியாற்றியுள்ளார்.
இயக்குநர் துரையின் இயற்பெயர் செல்லதுரை. 25.02.1940-ம் வருடம் பிறந்தவர். தந்தை பெயர் – சாமுவேல் ஜாக்கப். திருநெல்வேலியைச் சேர்ந்தவர். தாய் – ராஜம்மாள், தஞ்சாவூரை சேர்த்தவர். இந்துவாக இருந்து மதமாற்றம் செய்யப்பட்ட குடும்பம். தந்தை ஆவடியிலுள்ள ஆர்டினன்ஸ் தொழிற்சாலையில் வேலை பார்த்தவர். அம்மா அம்பத்தூரிலுள்ள ஒரு பள்ளியில் டீச்சராக வேலை பார்த்தார். அதனால் இவர்கள் குடும்பம் அம்பத்தூரிலேயே தங்கும்படியாயிற்று.
இவருக்கு மூன்று சகோதரர்கள். மூவருமே நன்றாக படித்தார்கள். இவருக்கு சின்ன வயதிலேயே சினிமா பார்ப்பதில் ஒரு பைத்தியம். ஓட்டேரியிலுள்ள ஒரு பள்ளியில்தான் படித்தார். படிப்பில் சிறிதும் ஆர்வமில்லை. இதனால் தந்தைக்கும் மகனுக்கும் அடிக்கடி சண்டை நடக்கும். அதனால் அம்மா சிபாரிசில் தி.நகரிலுள்ள அவர் தங்கை பொறுப்பில் துரையை அனுப்பி வைத்தார்கள். சித்தியின் சிபாரிசில் டாக்டர் மதுர நாயகம் க்ளினிக்கில் துரைக்கு வேலை கிடைத்தது. அங்கு சினிமா சம்பந்தப்பட்ட கலைஞர்கள் நிறைய வருவார்கள். சினிமாவில் நுழைந்து எப்படியும் ஒரு பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசைப்பட்ட துரைக்கு, இந்த வேலை மிகவும் அனுகூலமாக இருந்தது.
அப்படி அந்த க்ளினிக்கிற்கு அடிக்கடி வந்து போகிறவர் இயக்குனர் டி. யோகானந்த். அவரிடம் துரை தன் ஆசையைக் கூற.. அவர் துரையை தன் அலுவலக்திற்கு வரச் சொன்னார்.
அப்போது யோகானந்த் ஸ்ரீ கிருஷ்ணா பிக்சர்ஸ் என்ற கம்பெனிக்காக ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அதனால் துரை அவரை பார்க்க ஸ்ரீ கிருஷ்ணா பிக்சர்ஸ் அலுவலகத்திற்கு சென்றார். யோகானந்தும் துரையை அன்புடன் வரவேற்றார். துரை அவரிடம் தன் எதிர்காலக் கனவுகளை கூறினார். பின்னாளில் தான் திரைப்பட உலகில் ஒரு நல்ல கதாசிரியனாக வரவேண்டும் என்ற ஆசையைக் கூறினார்.
துரை சொன்னதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட யோகானந்த் “உன்னுடைய ஆர்வம் புரிகிறது. எடுத்த எடுப்பிலேயே நீ ஒரு கதாசிரியனாக முடியாது. முதலில் சினிமா என்பது என்ன என்பதையும், அதன் தொழில் நுட்பங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்” என்ற அறிவுரை கூறி, ரேவதி ஸ்டூடியோ என்கிற ஒலிபதிவு கூடத்தில் சவுண்ட் அஸிஸ்டன்டாக சேர்த்து விட்டார். ரேவதி ஸ்டூடியோ இப்போது காங்கிரஸ் கிரவுண்ட் இருக்கும் இடத்தில் முன்பு இருந்தது. அங்கு சவுண்ட் இன்ஜினியராக இருந்தவர் டி.எஸ் ரங்கசாமி. ஒலிப்பதிவில் மேதை என்றே சொல்லுவார்கள். துரைக்கு காபி, டீ வாங்கி வரும் வேலைதான் முதலில். அங்கிருக்கும் ப்ரொஜக்டரை இயக்க கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். பெருக்கி துடைக்கும் ஆள் வரவில்லையா, அந்த வேலையும் இவரே செய்வார். சில நாட்களிலேயே அங்கிருக்கும் எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்கினார் துரை.
அங்கு வேலை பார்த்ததால் துரைக்கு நிறைய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அறிமுகம் கிடைத்தது. துரையின் சுறுசுறுப்பை பார்த்து அவர்கள் எல்லோருக்கும் துரையை நன்கு பிடித்துவிட்டது. ‘அனார்கலி’ என்ற படத்துக்கான முழு போஸ்ட் புரொடக்ஷன் வேலையும் அங்குதான் நடந்தது. அந்த படத்தில்தான் டைட்டிலில் – உதவி ஒலிப்பதிவு என்று துரையின் பெயர் முதல் முதலாக வந்தது.
-க. பரத்
நன்றி: விகடகவி