இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்”

 இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்”

சமீப காலங்களில் தமிழ் திரைப்படங்களில் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக திரை உலகில் மிகப் பெரிய நட்சத்திரங்களாக வலம் வருகிறவர்கள் கூட ‘ஓ’ வில் துவங்கி ‘த’ வில் முடியும் மூன்றெழுத்து வார்த்தையை ஒவ்வொரு திரைப்படத்திலும் பலமுறை உச்சரிப்பது, அதிலும், அழுத்தம் திருத்தமாக உச்சரிப்பது திரை உலகத்தின் உச்சியில் இருப்பவர்களின் பொறுப்பற்ற, அநாகரீக நடத்தையை வெளிக்காட்டுகிறது. அந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன? என்று அவர்களிடம் கேட்டால், மக்கள் அதை தான் விரும்புகிறார்கள் என்று கொஞ்சம் கூட தயக்கமே இல்லாமல் மக்களை கேவலப்படுத்துகிறார்கள்.

மேலும், ம…ரு, பு…கி, ஒக்….லி என நீள்கிறது இந்த பட்டியல். ஒவ்வொரு படத்தையும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் தணிக்கை செய்து, தரம்கெட்ட வார்த்தைகளை நீக்கினாலும், ஓ.டி.டி போன்ற இணையதளங்களில் தரம் கெட்ட வார்த்தைகளை நீக்காமல் வெளியிட்டு தங்களின் தரத்தை வெளிக்காட்டி கொள்வது மானக்கேடு. ஒவ்வொரு திரைப்பட தணிக்கையிலும் இந்த வார்த்தைகள் நீக்கப்பட்டாலும், டீஸர், மற்றும் ட்ரைலரில் தணிக்கை இல்லாத காரணத்தால் பயன்படுத்தி மக்களை இழிவுபடுத்தி வருவது சாபக்கேடு.

இளைய சமுதாயத்திற்கு வழிகாட்ட வேண்டிய கதாநாயகர்கள், அவர்களை சீரழிக்கும் பணியினை சிறிதும் தயங்காமல் செய்வது வெட்கக்கேடு. தரக்குறைவான வார்த்தைகள், ஆபாசமான சைகைகள், தேவையற்ற வன்முறை, போதை பொருட்கள் பயன்படுத்துவது என சமுதாய சீரழிவுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது தமிழ் திரைத்துறை. இல்லாத ஒன்றை, நடக்காத ஒன்றை, சொல்லக்கூடாத ஒன்றை மக்களிடையே புகுத்துவது அராஜகத்தின் உச்சக்கட்டம். வன்முறை இடம்பெறக்கூடாது என்று கூறவில்லை, ஆனால், வெறிபிடித்த வன்முறை கூடாது என்றே கூறுகிறோம். வசைபாடக்கூடாது என்று கூறவில்லை, ஆனால், தரக்குறைவான வார்த்தைகள் கூடாது என்றே சொல்கிறோம். கவர்ச்சி கூடாது என்று சொல்லவில்லை, ஆனால், ஆபாசத்தின் எல்லைக்கே சென்று விடுவது ஏன்? என்று தான் கேட்கிறோம்.

ஒரு சில ஜாதிகளை உயர்த்தி பேசுவதும், சில ஜாதிகளை கேவலப்படுத்துவதும் தங்களின் உரிமை என்றும் அதுவே தங்களின் கடமை என்றும் எண்ணிக்கொண்டு சமுதாய ஒற்றுமையை சீர்குலைக்கும், சமூக நீதியை சீரழிக்கும் சமூக விரோதிகள் சிலர் எதிர்மறையான திரைப்படங்களை வெளியிட முயற்சிப்பது காலத்தின் கொடுமை. இதை கேட்டால் ஐயோ, படைப்பாளிகளின் உரிமைகளை பறிப்பதா என்று பொங்கி எழுவார்கள்!

முதிர்ச்சியில்லாமல், பொறுப்பில்லாமல், ஒழுக்கமில்லாமல், நல்ல சிந்தனையில்லாமல், நடைமுறைக்கு ஒவ்வாத பல்வேறு எதிர்மறையான கருத்துக்களை மக்கள் மத்தியில், இளைஞர்கள் மத்தியில் புகுத்துவது சில சமூக விரோத சக்திகளின் எண்ணங்களாக இருக்கக்கூடும். ஆனால், தரக்குறைவான வார்த்தைகளை உச்சரிப்பது இளைய சமுதாயத்தை சீர்குலைக்கும் என்பது தெரிந்தும், பணத்திற்காக புகழின் உச்சியில் இருக்கும் நடிகர்களே பேசுவது சமுதாய சீர்கேடே. ஒரு படத்திற்கு பல கோடி பெரும் நடிகர்கள், தங்கள் ரசிகர்களை, ரசிகர்களின் குடும்பங்களை, அவர்களின் எதிர்காலத்தை சற்றேனும் சிந்தித்து பார்த்து பொறுப்புடன் நடந்து கொள்வது நலன் பயக்கும்.

போகிற போக்கை பார்த்தால், ‘ஓ’ வில் துவங்கும் இந்த வார்த்தை தமிழ் அகராதியின் முதல் வார்த்தை என்றும், பிள்ளையார் சுழி போட்டு நம் மாணவர்கள் எழுதுவது போல் இனி திரைப்படங்களுக்கு இந்த வார்த்தையை பயன்படுத்துவதோடு, அதற்கு விளக்கவுரை கூட எழுதுவார்கள் என்ற நிலை விரைவில் வரும் என் எண்ணுகிறேன்!

“நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்”

என்ற பாரதியாரின் சொற்கள் தமிழ் திரையுலகத்தினருக்கு தான் பொருந்துமோ?

✍நாராயணன் திருப்பதி.

From The Desk of கட்டிங் கண்ணையா

🔥

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...