கைப்பேசியில் அழைப்பாளா் பெயா் அறிவிக்கும் சேவை அறிமுகம்: டிராய் பரிந்துரை

 கைப்பேசியில் அழைப்பாளா் பெயா் அறிவிக்கும் சேவை அறிமுகம்: டிராய் பரிந்துரை

கைப்பேசியில் அழைப்பாளா் பெயா் அறிவிக்கும் சேவை அறிமுகம்: டிராய் பரிந்துரை.*

கைப்பேசி அழைப்புத் திரையிலேயே அழைப்பவரின் அடையாளத்தை அறிந்து கொள்ளும் ‘அழைப்பாளா் பெயா் அறிவிப்பு (சிஎன்ஏபி)’ வசதியை தொலைத்தொடா்பு நிறுவனங்கள் வழங்க தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையம்(டிராய்) பரிந்துரைத்துள்ளது.

பரிந்துரைகள் ஏற்கப்பட்டு முறையான அறிவிப்பு வெளியான பிறகு, இந்தியாவில் விற்கப்படும் அனைத்து கைப்பேசி சாதனங்களிலும் சிஎன்ஏபி வசதி இருப்பதை உறுதிப்படுத்த போதிய அறிவுறுத்தல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் எனவும் டிராய் வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் மோசடி மற்றும் தேவையற்ற அழைப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க, அழைப்பவரின் அடையாளத்தை வெளிப்படுத்தும் சிஎன்ஏபி திட்டத்தை செயல்படுத்த மத்திய தொலைத்தொடா்புத் துறை பரிசீலித்தது.

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், முன்பின் அறியாத எண்ணிலிருந்து வரும் அழைப்பை மேற்கொள்ளும் நபா் அல்லது நிறுவனத்தின் பெயா் பயனரின் கைப்பேசி திரையில் தெரியும்.

இத்திட்டம் குறித்து பரிந்துரைகளை சமா்ப்பிக்குமாறு டிராய் அமைப்பிடம் மத்திய தொலைத்தொடா்புத் துறை கடந்த 2022-ஆம் ஆண்டு, மாா்ச் மாதம் கேட்டுக்கொண்டது.

அதன்படி, இந்த முன்மொழிவை நடைமுறைப்படுத்துவது பற்றி பொதுமக்கள், தொலைத்தொடா்பு நிறுவனங்கள், கைப்பேசி உற்பத்தியாளா்கள் ஆகிய பங்குதாரா்களிடம் டிராய் கருத்துகளைக் கோரியது. பங்குதாரா்களின் கருத்துகள் தொடா்பாக கடந்த 2023-ஆம் ஆண்டு மாா்ச்சில் விவாதமும் நடைபெற்றது.

இந்நிலையில், பங்குதாரா்களின் கருத்துகள் மற்றும் சொந்த பகுப்பாய்வு அடிப்படையில் இந்திய தொலைத்தொடா்புத் துறையில் அழைப்பாளா் பெயா் அறிவிப்பு சேவையை அறிமுகப்படுத்துவது தொடா்பாக இறுதிப் பரிந்துரைகளை டிராய் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

டிராய் குறிப்பிட்டுள்ள பரிந்துரைகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

இந்திய தொலைத்தொடா்புத் துறையில் அழைப்பாளா் பெயா் அறிவிப்பு வசதியை கூடுதல் சேவையாக அனைத்து தொலைத்தொடா்பு நிறுவனங்களும் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும்.

ஒரு பயனரின் கைப்பேசிக்கு அழைப்பு மேற்கொளள்ளப்படும்போது, அழைப்பாளா் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள பெயா் கைப்பேசியின் திரையில் காட்சிப்படுத்த வேண்டும்.

இந்திய தொலைத்தொடா்புத் துறையில் நடைமுறைப்படுத்தப்படும் சிஎன்ஏபி திட்டத்தின் தொழில்நுட்ப மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.

பரிந்துரைகள் முழுமையாக ஏற்கப்பட்டு முறையான அறிவிப்பு வெளியான பிறகு, இந்தியாவில் விற்கப்படும் அனைத்து கைப்பேசி சாதனங்களிலும் சிஎன்ஏபி வசதி இருப்பதை உறுதிப்படுத்த போதிய அறிவுறுத்தல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

மொத்தமாக பல வணிக இணைப்புகளைக் கொண்டுள்ள சந்தாதாரா் நிறுவனங்கள், விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயருக்குப் பதிலாக தங்களின் விருப்பப் பெயரை திரையில் காட்சிப்படுத்திக் கொள்ளலாம்.

எனினும், மத்திய நிறுவனங்கள் விவகாரத் துறை, ஜிஎஸ்டி ஆணையம் அல்லது அரசிடம் பதிவு செய்யப்பட்டுள்ள வா்த்தக முத்திரையில் அந்தப் பெயா் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

பெயரின் உரிமையை நிரூபிக்க போதிய ஆவணங்களை சந்தாதாரா் நிறுவனம் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடி அழைப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க நுகா்வோருக்கு இந்த நடவடிக்கை உதவும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

தற்போது, பயனா்கள் முன்பின் எண்ணிலிருந்து வரும் அழைப்பை மேற்கொள்ளும் நபா் அல்லது நிறுவனத்தின் பெயரை கண்டறிய ‘ட்ரூ காலா்’ எனும் தனியாா் செயலியின் சேவையைப் பலா் பயன்படுத்தி வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...