சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி
சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: மறு ஆய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு ஹிந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. மேலும், இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, நாயர் சர்வீஸ் சொசைட்டி உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 64 மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் ஆர்.எஃப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகிய 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.
கேரள அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் ஜெய்தீப் குப்தா, விஜய் ஹன்சாரியா, திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம் சார்பில் ராகேஷ் துவிவேதி ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி இறுதி வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்த நிலையில், வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் அமர்வில் இடம்பெற்றுள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் இந்த வார இறுதியில் பணி ஓய்வு பெற இருப்பதால், அதற்கு முன்பாக இந்த வழக்குகளில் தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நவம்பர் 14ம் தேதி, சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இறுதி விவாதங்களில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் உங்களுக்காக…
கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் கூறியதாவது: கேரள ஹிந்து வழிபாட்டுத் தலங்கள் சட்டப்படி, சபரிமலை ஐயப்பன் கோயில், ஒரு குறிப்பிட்ட சமயத்தினர் மட்டும் வழிபடும் கோயில் அல்ல. எனவே, ஹிந்துக்கள் அனைவரும் கோயிலில் வழிபடுவதற்கு கேரள ஹிந்து கோயில்கள் சட்டம் அனுமதி அளிக்கிறது. மேலும், கோயில்களில் பெண்களுக்கு அனுமதி மறுப்பது, ஹிந்து மதத்தில் பின்பற்றப்படும் வழக்கமும் கிடையாது.
இதுமட்டுமன்றி, 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு தடை விதிப்பது என்பது, ஒருவருடைய வாழ்வின் பெரும்பாலான காலத்துக்கு தடை விதிப்பதாகும். இதுவும், கேரள ஹிந்து கோயில்கள் சட்டத்துக்கு எதிரானதாகும்.
மேலும், சபரிமலை தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் ஒன்றில் கூட அடிப்படையான, சட்ட ரீதியிலான பிரச்னைகள் குறிப்பிடப்படவில்லை.
சமூக அமைதி பாதிக்கப்படுவதாக எதிர்த் தரப்பில் வாதிடப்படுகிறது. சட்டம்-ஒழுங்கு பிரச்னை, சமூக அமைதி ஆகியவை குறித்து நீதிமன்றம் கவலை கொள்ளக் கூடாது. முதலில் எதிர்ப்பு வந்தாலும், இறுதியில் அமைதி நிலைநாட்டப்படும். அதுவரை, சட்டவிரோதச் செயல்களுக்கு துணைபோக முடியாது என்று அவர்கள் வாதிட்டனர்.
அதைத் தொடர்ந்து, நாயர் சர்வீஸ் சொசைட்டி(என்எஸ்எஸ்) சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கே.பராசரன் முன்வைத்த வாதம்:
அரசமைப்புச் சட்டத்தின் 15-ஆவது பிரிவின்படி, மதச்சார்பற்ற அமைப்பு அல்லது நிறுவனங்களில் அனைத்து தரப்பினருக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. அதே சமயம், மதச்சார்புள்ள இடங்களுக்கு அந்த அனுமதி பொருந்தாது. சபரிமலையில் அருள் பாலிக்கும் ஐயப்பன் பிரம்மச்சாரி என்பதால், அவருக்கு உரிய மரியாதை அளிக்கும் வகையில் சிறப்பு வழிபாட்டு முறை கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
அதைத் தொடர்ந்து வழக்கில் திடீர் திருப்பமாக, திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், சபரிமலையில் பெண்கள் அனுமதிப்பதற்கு ஆதரவாக வாதிட்டார். இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
தேவஸ்வம் வாரியம் நிலைப்பாட்டில் மாற்றம்
சபரிமலை விவகாரத்தில், தொடக்கம் முதலே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கடுமையாக வாதிட்டு வந்த திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம், தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. சபரிமலை தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.
அப்போது, திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராகேஷ் துவிவேதி முன்வைத்த வாதம்:
அரசமைப்புச் சட்டப்படி, சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும். எனவே, பாலினத்தைக் காரணம் காட்டி, எந்த வயதுடைய பெண்ணுக்கும் அனுமதி மறுக்கக் கூடாது என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி மல்ஹோத்ரா, இதற்கு முன்பு சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக வாதாடினீர்கள் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த ராகேஷ் துவிவேதி, ஆமாம், தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதற்கு தேவஸ்வம் வாரியம் முடிவு செய்துள்ளது என்றார். மேலும், அரசமைப்புச் சட்டத்தின் 25(1) பிரிவின்படி, அனைவருக்கும் வழிபாட்டு உரிமை வழங்கப்பட்டுள்ளது என்று ராகேஷ் துவிவேதி கூறினார்.