ரூ.7,200 கோடி வங்கி மோசடி விவகாரம்: 189 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை
7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வங்கி மோசடி தொடர்பாக நாடு முழுவதும், 189 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனையில் ஈடுபட்டது.
வங்கி மோசடி தொடர்பாக 42 வழக்குகளை பட்டியலிட்டு அது தொடர்பான இடங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் நாடு முழுவதும் 189க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
இந்த வழக்குகளில் 7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் அளவிற்கு வங்கி மோசடி நடந்திருப்பதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அதில் பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட 16 வங்கிகளில் மோசடி நடந்திருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிபிஐ வழக்கு விசாரணையில், பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் போலி ஆவணங்கள் மூலம், வழக்கில் சிக்கிய நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.
சோதனையில், வழக்குகள் தொடர்பாக பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.