இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஐந்தாவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையின் ‘விஞ்ஞான் பாரதி’ சார்பில் நடத்தப்படும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில், மத்திய சுகாதாரம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், அனைத்து மாநில அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
2015ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில், இந்த ஆண்டுக்கான கருப்பொருள் அறிவியலில் ஆய்வு, புதிய கண்டுபிடிப்பு மூலம் நாட்டை பலப்படுத்துவது தொடர்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அறிவியல் கிராமம், இளம் விஞ்ஞானிகள் மாநாடு, விஜயானிகா என்ற இலக்கிய திருவிழா, வேளாண் விஞ்ஞானிகள் சந்திப்பு, அறிவியலில் சிறந்து விளங்குவோர்களுக்கு இடையேயான நேருக்கு நேர் சந்திப்பு உள்ளிட்ட 28 வெவ்வேறு நிகழ்வுகள் இந்த திருவிழாவில் இடம்பெற்றுள்ளன.
வரும் 8ம் தேதி வரை நடைபெறும் விழாவில், 12 ஆயிரம் விஞ்ஞானிகள், விவசாயிகள், அறிவியலாளர்கள், பெண்கள், தொழில்முனைவோர், மாணவர்கள் உலகம் முழுவதிலும் இருந்து பங்கேற்க உள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.