சூப்பர் முதல்வர் டெல்லியில்
சூப்பர் முதல்வர் டெல்லியில்
ஆந்திர மாநிலத்தின் துடிப்பான முதல்வரான ஒய்.எஸ்.ஆர்.ஜெகன் மோகன் ரெட்டி பாஜக தலைவர்களில் ஒருவரும் , இந்திய நாட்டின் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை டெல்லியில் நேரில் சந்தித்தார்.
மரியாதை நிமித்தமாக நடந்த இந்த சந்திப்பின் போது, முதலில் அமித்ஷாவுக்கு பொன்னாடை போர்த்திய ஜெகன் மோகன் ரெட்டி, திருப்பதி வெங்கடாசலபதி திரு உருவப்படமும் வழங்கினார். மேலும் அன்பு நிமித்தமாக பரிசும் வழங்கினார்.
கடந்த மே மாதம் நாடாளுமன்றத் தேர்தலின் போது ஆந்திராவில் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. அதில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார் ஜெகன் மோகன் ரெட்டி.
ஆந்திர மாநிலத்தில் பல்வேறு புதிய திட்டங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கப்போகிறவர் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதி வந்தனர். அதற்கேற்ப மக்களுக்கான சிறப்புத்திட்டங்கள் பலவற்றையும் நிறைவேற்றி வந்தார்.
இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியதை அடுத்து கூட்டணியில் இல்லாத மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை பாஜக தலைமை தொடங்கியது.
அதன்படி அமராவதி தேர்தலின்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி ஆகிய இருவரும் சந்தித்து பேசினர். ஆந்திராவில் பாஜக கொள்ளைப்புறமாக நுழைய முயல்கிறது என்றும், அதற்கான பேச்சுவார்த்தைதான் இது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், தற்போது மீண்டும் இருவரும் சந்தித்து உள்ளது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி வெகு நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.