ஹகிபிஸ் புயல்
ஜப்பானை புரட்டி போட்ட ஹகிபிஸ் புயல்!
ஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்கியதில், 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது, இதனால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுளனர்.
ஜப்பானில் கிழக்கு கடற்கரையை நோக்கி ஹகிபிஸ் புயல் சின்னம் மணிக்கு 225 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 17 பேர் மாயமாகி உள்ளனர். 70 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறும்படி அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 50,000 பேர் இதுவரை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ரயில் மற்றும் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒரே இரவில் மட்டும் வெள்ளத்தில் தத்தளித்த 1,417 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இன்னும் எத்தனை பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விபரம் தெரியவில்லை என கூறப்படுகிறது. கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்துள்ளது. அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் உலகக் கோப்பை போன்ற விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. புயல் சின்னம் வலுவிழக்க வாய்ப்புள்ளதால் மழை அளவு அதிகரிக்கும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.