இலக்கியத்துக்கான நோபல் பரிசு
இலக்கியத்துக்கான நோபல் பரிசு: போலந்து, ஆஸ்திரிய எழுத்தாளர்கள் வென்றனர்
நோபல் பரிசு (பழைய வழக்கு) என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு. மார்ச் 2005 வரை 770 நோபெல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிலர் இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள மறுத்ததும் உண்டு. இது வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது. முதல் பரிசு 1901 ல் வழங்கப்பட்டது. சில ஆண்டுகள் ஒரு பரிசு கூட அறிவிக்கப்படாமல் போனதும் உண்டு. எனினும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசு அறிவிக்கப்படும். நோபெல் பரிசு, திரும்பப் பெறத்தக்கதல்ல.
இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி ஆகியவையே ஆல்ஃபிரட் நோபெல் அவர்களின் உயில் படி ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும். பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு 1968 ல் சுவீடன் நடுவண் வங்கியினால் அதன் 300 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது.
பரிசு பெறும் ஒவ்வொருவரும், ஒரு தங்கப்பதக்கமும் ஒரு பட்டயமும், நோபெல் அறக்கட்டளையின் அவ்வருட வருமானத்தைப் பொறுத்து பரிசுப் பணமும் பெறுவர்.
போலாந்தை சேர்ந்த எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸுக் மற்றும் ஆஸ்திரியாவின் பீட்டர் ஹேண்ட்கே ஆகியோருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடனை தலைமையிடமாக கொண்டு செயல்படும், நோபல் அமைப்பில் பரிசுக்குரியவர்களை தேர்வும் செய்யும் குழுவில் பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததால், சென்ற ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவில்லை. எனவே, இந்த ஆண்டு இலக்கியத்துறையில் இரண்டு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, புக்கர் பரிசு வென்ற எழுத்தாளரான ஓல்கா டோகார்ஸுக்கு 2018ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசும், பீட்டர் ஹேண்ட்கேவுக்கு இந்தாண்டுக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளன.
76 வயதான ஆஸ்திரிய நாடக ஆசிரியரும் நாவலாசிரியருமான பீட்டர் ஹேண்ட்கேவுக்கு, “மொழியியல் புத்தி கூர்மையின் மூலம் மனித அனுபவத்தின் தனித்துவத்தை ஆராய்ந்த ஒரு சிறப்புமிக்க படைப்புக்காக” நோபல் பரிசு வழங்கப்படுவதாக அந்த அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போலந்து நாவலாசிரியரான 57 வயதான டோகார்ஸுக்கின் எழுத்து நடைக்கும், கோணத்துக்கும் இந்த அங்கீகாரம் கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.