மங்களூரு: சாக்சபோன் இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் (69) உடல்நலக் குறைவால் மங்களூரு தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார்.
கர்நாடகா மாநிலம் பந்த்வால் தாலுகாவில் மிட்டகெரே கிராமத்தில் 1950-ம் ஆண்டு பிறந்தவர் கத்ரி கோபால்நாத். சாக்சபோன் இசைக் கலையில் உன்னதத்தைத் தொட்டவர் கத்ரி கோபால்நாத்.
தமிழக அரசின் கலைமாமணி, மத்திய அரசின் பத்மஶ்ரீ உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர். கே. பாலசந்தரின் டூயட் படத்தில் கத்ரி கோபால்நாத்தின் சாக்சபோன் இசை முழுமையாக பயன்படுத்தப்பட்டது.
கடந்த சில மாதங்களாக கத்ரி கோபால்நாத் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் மங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானார்.
கத்ரி கோபால்நாத்தின் 2 மகன்களில் ஒருவரான மணிகந்த் கத்ரி, இசை அமைப்பாளராக உள்ளார். மற்றொரு மகன் குவைத்தில் இருக்கிறார்.
