இது மாற… இனியொரு விதி செய்வோம்”

பனகல் மாளிகை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இயக்குனர் பார்த்திபன் நிவாரண பொருட்களை வழங்கினார்.

ரேஷன் அரிசி வாங்கவே வக்கில்லாதபோது, பேஷன் ஷோ எதற்கு?

‘மிச்சாங்’ புயல் காரணமாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதைத்தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். நடிகர்கள் மற்றும் சின்னத்திரை பாலா மற்றும் பலர் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இவர்களை போன்று இயக்குனர் பார்த்திபன் சைதாப்பேட்டை பனகல் மாளிகை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அவர் அதுகுறித்த விடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். த(க)ண்ணீர் தேசம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

மேலும், இயக்குனர் பார்த்திபன் இதுகுறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “நேற்று மக்களின் நிலையில்லா பரிதாப நிலைக் கண்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்.நான் வட்டம்-மாவட்டம் என குறுகிய அளவிலான அரசியலில் யாரையும் குற்றம் சொல்லவில்லை. பறவை பார்வையில் பார்க்கிறேன். ஏன் இந்த அவல நிலை? சென்னை மட்டுமல்ல, சமீபத்தில் கண்டுங்காணா குண்டுங்குழி நிறைந்த மும்பாபையிலும்(பணக்கார முதலைகள் சாலையை கடக்கும் மாநிலம்)இதே நிலை.

தனி மனிதனாகவும், தமிழ்நாடாகவும், வல்லரசு(?) நாடாகவும், இந்தியா தன்னிறைவடையாத (தண்ணீரும் வடியாத)நாடு! தண்ணீர் இருக்கிறதா?என ஆராய, சந்திரனுக்கு சந்திரயானும், செவ்வாய்க்கு செங்கல்வராயனும் அனுப்ப பல்லாயிரம் கோடி ஏன் செலவழிக்க வேண்டும்? ஒரு ப்ளாஸ்டிக் படகு எடுத்துக் கொண்டு (வேளச்)ஏரிக்குள் கட்டப்பட்டிருக்கும் lake view apartments-க்கு மிக அருகாமையில் நிறைமாத நீரை பார்வையிடலாமே?

அதிவேக புல்லட் ரயில், அதிநவீன தொழில் நுட்ப முன்னேற்றம் இப்படிப்பட்ட நாளைய இந்தியப் பெருமையில் எருமை urine போக! அடிப்படை தேவைகள்,வேலை வாய்ப்புகள், சாலை வசதிகள், மாசற்ற காற்று, இயற்கை சீற்றங்களை எதிர் கொள்ளும் இடரற்ற சக்தி, ஏழை மக்களும் எதற்கும் கையேந்தாமல் கவுரவமாக வாழும் உயர்நிலை இவைகளை வழங்க,வழங்கும் வரி பணத்தையெல்லாம் பயன்படுத்திவிட்டு பின்பு வுடலாம் ராக்கெட்டு! ஒரு சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 41 உயிர்களை மீட்ட போது எப்படி ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டோம். ஆனால் இந்தியா என்ற சுரங்கத்திற்குள் இருந்து இத்தனை கோடி உயிர்களை மீட்க முடியாத இழிநிலையில் சுதந்திர தின மூவர்ண பல்லி மிட்டாய்களும், குடியரசுதின பைக் சாகச கொண்டாட்ட செலவினங்கள் எதற்கு?

ரேஷன் அரிசி வாங்கவே வக்கில்லாத போது, ஃபேஷன் ஷோ எதுக்கு? இப்படி நூறாயிரம் கேள்விகளில் தூக்கம் தொலைந்தது. நானோ, kpy பாலாவோ, அறந்தாங்கி நிஷாவோ இன்னும் சிலரின் உண(ர்)வு பொட்டலங்கள் செய்திக்கு செய்தி சேர்க்குமே தவிற, அடுத்த வேளை அடுப்புக்கு நெருப்பும், அதில் பொங்க அரிசியும் சேர்க்காது. சமீபத்தில் கீர்த்தனாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்… இன்னும் 50 ஆண்டுகளில் என் காலத்திற்கு பிறகும் இந்தியாவிலேயே பறக்கும் கார்கள்(இப்போது மிதக்கும் கார்கள்) போன்ற அதியற்புத வளர்ச்சியை காணலாமென.

அதை விட… இந்திய வரைபடத்தில், வறுமை கோடும் அதனடியில் சில எலும்புக் கூடும் வாழும் நிலை மாற வேண்டும். (நான் குற்றஞ்சுமத்துவது அரசியல்வாதிகளை அல்ல.பொருளாதாரம் சார்ந்த அரசியலை.அதை சீர் செய்ய தொலைநோக்குள்ள தன்னலமற்றவர்கள் தகுதி பெற வேண்டும்!) இது ஒரு தனிமனித சிந்தனை எனவே தவறு இருக்கலாம். இருப்பின் பொருட்படுத்தாதீர்கள். இன்றும் இயன்றதைச் செய்து இடர் குறைப்போம்!” என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவை விமர்சித்து பலரும் பதிவிட்டு வந்தனர்.

இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் பார்த்திபன் புதிய பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “தேர்ந்தெடுக்கும் உடைகளில் ஒருவரது நாகரீகமும், பயன்படுத்தும் வார்த்தைகளில் அவர்களது தரமும் விளங்கும். என் கருத்து யாரையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். அது தனிநபர் தாக்குதலோ,ஒரு கட்சி சார்ந்த சாடலோ அல்ல. சுதந்திர இந்தியாவை இதுவரை பல கட்சிகள் ஆண்டுள்ளன. இன்றைய நிலைக்கு இதுவரை யாவும் காரணம். இது மாற… இனியொரு விதி செய்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: மாலை மலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!