திருட்டுப் பணத்தில் சினிமா எடுத்த கொள்ளைக்கும்பல் தலைவன்!

 திருட்டுப் பணத்தில் சினிமா எடுத்த கொள்ளைக்கும்பல் தலைவன்!
திருட்டுப் பணத்தில் சினிமா எடுத்த கொள்ளைக்கும்பல் தலைவன்!
லலிதா ஜூவல்லரி நகை கொள்ளைக்கு திட்டம் வகுத்து கொடுத்த முருகனை குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. திருடி பணம் சேர்த்து சினிமா தயாரித்த முருகன்,ஆங்கில இணையத் தொடரை பார்த்தே லலிதா ஜூவல்லரியில் கொள்ளைக்கு திட்டம் வகுத்த தகவலும் போலீசாருக்கு கிடைத்துள்ளது.
திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையில், 13 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பிடிபட்டுள்ள இரண்டு பேரிடமும் போலீசார் தொடர்ந்து பல மணி நேரமாக விசாரணை நடத்தி உள்ளனர். பிடிபட்டுள்ள கொள்ளையன் சுரேசின் தாய்மாமனான முருகன்தான், இந்த கும்பலுக்கு தலைவன் என்பதும், பிடிபட்டுள்ள மணிகண்டன், சுரேஷ் மற்றும் முருகன் உள்ளிட்ட 8 பேர் கொள்ளையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இணையத்தில் வெளியாகும் வங்கி கொள்ளை தொடரை பார்த்தே, முருகன் லலிதா ஜூவல்லரி கொள்ளைக்கு திட்டம் தீட்டியதாக மணிகண்டன் போலீசாரிடம் கூறியுள்ளான். இந்த தொடரில் வருவதை போலவே, சுவரில் துளையிடுவது, முகமூடி அணிந்து திருடுவது, திருடிய பின்னர் தப்புவது என அனைத்தும் ஒன்றாக இருப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.
மேலும் சுவரின் கன்னம் வைத்து திருடுவதில் முருகன் பலே கில்லாடி.திருவாரூர் அருகே உள்ள சீராத்தோப்பைச் சேர்ந்த முருகன் ஆரம்பத்தில் சின்ன சின்ன திருட்டு என ஆரம்பித்து, பிறகுதான் பெரிய திருடனாக மாறியுள்ளான். கர்நாடக மாநிலத்தில் மட்டும் முருகன் மீது 180 வழக்குகள் உள்ளன. 2011-ஆம் ஆண்டு கர்நாடக சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான முருகன் பெங்களூருவில் இருந்து ஐதராபாத் போய் தன் திருட்டை தொடர்ந்திருக்கிறான்.
ஐதராபாத்திற்கு சென்று கைவரிசை காட்ட ஆரம்பித்த முருகன், இதுவரை போலீசாரிடம் சிக்கவில்லை. சொந்த ஊரான சீரா தோப்பில் உள்ள தனது சொந்தக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு, திருடிய பணத்தில் ஒரு பகுதியை செலவிடுவதை முருகன் வழக்கமாக கொண்டு உள்ளான். அரிசி, பருப்பு முதல் வீட்டு உபயோக பொருட்கள், துணிமணிகள் என, அடுத்தவர் வீட்டு பணத்தில் தான, தர்மம் செய்து தன்னை வள்ளலாக முருகன் காட்டி வந்து உள்ளான்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் இருவரை த த்து எடுத்து முருகன் வளர்த்து வருவதாகவும், மாற்று திறனாளிகளுக்காக முருகன் ஒரு காப்பகம் ஆரம்பித்த தாகவும் சீராத்தோப்பு கிராம மக்கள் கூறியுள்ளனர். ஆனால் அந்த காப்பகத்திற்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். இந்நிலையில் முருகனுக்கு சினிமா ஆசையும் சேர்ந்து கொள்ள, 50 லட்ச ரூபாய் முதலீட்டில் பாலமுருகன் புரடெக்சன் என்ற பெயரில் சினிமா கம்பெனி தொடங்கி, மனாசா வினாவா என்ற தெலுங்குபடத்தை தயாரித்த தகவலும் போலீசாருக்கு கிடைத்துள்ளது.
கதாநாயகிக்கு 6 லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்த முருகன், தனது அக்காள் மகனும், இப்போது பிடிபட்டு உள்ளவனுமான சுரேசை அந்த படத்தில் நடிக்க வைத்து உள்ளான். ஆனால் அந்த படம் வெளியாகாத நிலையில் மீண்டும் திருட்டு, கொள்ளை என்று ஈடுபட்டு சிறைக்கு சென்ற முருகன், விடுதலையான பின்னர் ஆத்மா என்ற மற்றொரு படத்தை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டான்.
ஆனால் இப்போது குணப்படுத்த முடியாத நோயின் பிடியில் முருகன் சிக்கி உள்ளதாகவும், இதனால் மருத்துவ வசதிகளுடன் கூடிய ஒரு வேனில், அவன் ஊர், ஊராக சென்று கொண்டே இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. வேனிலேயே வாழ்ந்து வரும் முருகனைப் பிடிக்க, தமிழக காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...