POLITICS
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் பா.சரவணன், தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட மீண்டும் சீட் கிடைக்காததால் பாஜகவில் சேர்ந்தார். கட்சியில் சேர்ந்த சில மணி நேரத்திலேயே மதுரை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளராகவும் சரவணன் அறிவிக்கப்பட்டார்.
மதுரை வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் கட்சியின் மாநில பொதுச் செயலர் ராம.ஸ்ரீனிவாசன் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் ஸ்ரீனிவாசன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோ.புதூரில் திறக்கப்பட்ட பாஜக தேர்தல் அலுவலகத்தை பூட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கட்சியில் சேர்ந்த உடனேயே சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது மதுரை மாநகர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் பலருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்களும் அதிருப்தியில் இருந்தனர்.
இதையடுத்து மதுரையில் அதிருப்தியில் இருக்கும் பாஜகவினரை சமாதானப்படுத்துவதற்காக தமிழக பாஜக இணை தேர்தல் பொறுப்பாளரும், மத்திய இணை அமைச்சருமான வி.கே.சிங் நேற்று மதுரை வந்தார். அவர் மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதியில் மதுரை மாநகர் பாஜக நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
இதில் பாஜக மாநில பொதுச் செயலர் ஸ்ரீனிவாசன், வேட்பாளர் பா.சரவணன், மதுரை மாநகர் மாவட்ட தலைவர் கே.கே.சீனிவாசன், மாநில பாஜக அரசு தொடர்பு பிரிவு செயலர் ராஜரத்தினம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பாஜகவில் பல ஆண்டுகளாக இருந்து வரும் நிர்வாகிகளை விட்டு, கட்சியில் புதிதாக சேர்ந்தவருக்கு உடனடியாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது ஏன்? என பலர் கேள்வி எழுப்பினர்.
அதற்கு வி.கே.சிங் பதிலளிக்கையில், மதுரை வடக்கு தொகுதியில் வெற்றி வாய்ப்பைக் கருத்தில் கொண்டு சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.
அதை நிறைவேற்றும் வகையில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பிறகே சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் கட்சியின் முடிவை ஏற்று அனைவரும் கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று கூறி சமாதானப்படுத்தினார்.
பின்னர் வி.கே.சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அதை கடை கோடி மனிதர்கள் வரை கொண்டு செல்ல வேண்டும். பாஜகவின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றார்