வரலாற்றில் இன்று – 12.01.2021 சுவாமி விவேகானந்தர்

இளைஞர்களுக்கு எல்லாம் முன்னோடியாக திகழும் சுவாமி விவேகானந்தர் 1863ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.

சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமான ஜனவரி 12ஆம் தேதியை இந்திய அரசு 1984ஆம் ஆண்டு தேசிய இளைஞர் தினமாக அறிவித்தது.

இவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்’ மற்றும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்’ போன்ற அமைப்புகளையும் நிறுவினார்.

சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

ஆங்கிலேயர் ஆட்சியில், இருண்டுக் கிடந்த இந்தியர்களுக்கு மத்தியில் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக தன்னம்பிக்கை என்னும் விதையை விதைத்தார். அவரது ஆணித்தரமான, முத்துப் போன்ற வார்த்தைகளும், பிரமாதமான பேச்சுத்திறனும் உறங்கிக் கொண்டிருந்த தேசிய உணர்வைத் தூண்டியது.

1893ஆம் ஆண்டு சிகாகோ உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையை தொடங்குவதற்கு முன்,’அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே!’ என்று ஆரம்பித்தார். சுவாமி விவேகானந்தர் இங்கிலாந்திற்கும் சென்றார். அங்கே பல மக்கள் இவருக்கு சீடர்களாக மாறினர். அவர்களில் மிகவும் பிரபலமானவர்,’சகோதரி நிவேதிதா’.

இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்ந்த இவர் தன்னுடைய 39வது வயதில் (1902) மறைந்தார்.

டாக்டர் பகவான் தாஸ்

சுதந்திரப் போராட்ட வீரர் டாக்டர் பகவான் தாஸ் 1869ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் பிறந்தார்.

இவர் கல்வியிலும், எழுத்துப் பணிகளிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். பல்வேறு மதங்கள், தத்துவங்கள் குறித்து ஏராளமான நூல்களைப் படித்தார்.

மேலும் காங்கிரஸில் இணைந்து தேச விடுதலைக்காகப் பாடுபட்டார். இவர் ஆங்கிலேய ஆட்சி முறை காரணமாக மிக மோசமான நிலையில் இருந்து வந்த இந்திய மொழிகள், கலாச்சாரம், பண்பாட்டைக் காக்க வேண்டும் என உறுதியேற்றார்.

இவருக்கு 1955ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. தத்துவமேதையுமான டாக்டர் பகவான் தாஸ் 1958ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1908ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி முதல் முறையாக தூர இடத்துக்கான வானொலி செய்தி ஈஃபெல் கோபுரத்தில் இருந்து அனுப்பப்பட்டது.

1970ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி நைஜீரியாவில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!