மதுரையில் இன்று த.வெ.க.இரண்டாம் மாநில மாநாடு..!

மாநாட்டு மேடையின் உச்சியில் “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது” என்று குறிப்பிட்டு அண்ணா, எம்.ஜி.ஆர்., விஜய் படங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து, தீவிர களப்பணி ஆற்றுகிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தல்தான் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும். எனவே முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க அக்கட்சி தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநில மாநாடு இன்று (வியாழக்கிழமை) மதுரையில் பிரமாண்டமாக நடக்கிறது.

இதற்காக மதுரையில், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி பகுதியில் 506 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

மாநாட்டு மேடையின் உச்சியில் “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது” என்று குறிப்பிட்டு அண்ணா, எம்.ஜி.ஆர்., விஜய் படங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

மாநாட்டில் 2 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. தொண்டர்களை நடந்து சென்று விஜய் பார்க்கும் வகையில், சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு ‘ரேம்ப் வாக்’ நடைமேடை அமைக்கப்பட்டு உள்ளது.

அதன் இருபுறமும், 40-க்கும் மேற்பட்ட போக்கஸ் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. விஜய் மேடையில் நடந்து வரும்போது, முதல் அடுக்கில் பவுன்சர்கள், 2-வது அடுக்கில் போலீசார் என இரண்டடுக்கு பாதுகாப்பு ஏற்பாடும் உள்ளது.

மாநாட்டு திடலில், இரவை பகலாக்கும் வகையில் 200-க்கும் மேற்பட்ட உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. விசாலமான பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

மற்ற கட்சிகளிடம் இருந்து வித்தியாசத்தை காண்பிக்கும் வகையில் த.வெ.க. மாநாட்டில் சில வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதில் குறிப்பாக, தொண்டர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில், ‘ஆரோ வாட்டர் பிளாண்ட்’ மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக நிலத்திற்கு அடியில் சுமார் 8 ஆயிரம் மீட்டர் தூரத்திற்கு பைப்புகள் பதிக்கப்பட்டு உள்ளன. நிறைய குடிநீர் நல்லிகள் அவற்றில் பொருத்தி இருப்பதால், எந்த இடத்தில் இருந்தும் குடிதண்ணீர் பெறும் வகையில் வசதி உள்ளது.

இதற்கிடையே நேற்று, மாநாட்டு திடலில் 100 அடி உயர கொடிக்கம்பம் நிறுவும் பணி கிரேன் மூலம் நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கிரேனின் பெல்ட் அறுந்ததால் கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்தது. திடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது விழுந்ததில் அது நொறுங்கி சேதம் அடைந்தது. இதனால் பரபரப்பு நிலவியது. அதேநேரத்தில் காரில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்பதற்காக த.வெ.க. தலைவர் விஜய் சென்னையில் இருந்து நேற்று மதியம் காரில் புறப்பட்டார். இரவு 7 மணியளவில் மதுரை சென்றடைந்தார்.

பின்னர், சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். தொடர்ந்து அவர், பாரபத்திக்கு வந்து, மாநாட்டு பணிகளை பார்வையிட்டார். மேலும், சரிந்து விழுந்த 100 அடி கொடிக்கம்பம் குறித்து அங்கிருந்த நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். ஒவ்வொரு பகுதியில் செய்துள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகள் அவருக்கு விளக்கினர். தொண்டர்களுக்கு எந்த இடையூறும் வராத வகையில் மாநாட்டை நடத்த வேண்டும் என கட்சியினருக்கு உத்தரவிட்டார்.

பெண்கள் அதிக அளவில் மாநாட்டில் பங்கேற்பார்கள் என்பதால், அவர்களை வழிநடத்தும் வகையில் 50 பெண் பவுன்சர்கள் உள்பட 550 பவுன்சர்கள் நேற்று கேளராவில் இருந்து வந்தனர். இதுதவிர, தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின் சார்பில் 2 ஆயிரம் பேரும், காவல்துறை சார்பில் 3 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மாநாட்டில் பங்கேற்க இரவு முழுவதும் தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!