நெசவாளர்களுக்கு விருதுகளை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்..!

நேற்று கலைவாணர் அரங்கத்தில் 11 வது தேசிய கைத்தறி நாள் விழா நடைபெற்றது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (7.8.2025) கலைவாணர் அரங்கத்தில் 11 வது தேசிய கைத்தறி நாள் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கைத்தறி நெசவாளர்களால் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்ட தூய பட்டு தூய சரிகை கைத்தறி இரகங்களும், திறன்மிகு நெசவாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட தூய பட்டு, பருத்தி, கோரா மற்றும் சில்க் காட்டன் சேலைகள், புவிசார் குறியீடு இரகங்கள் (GI Products) மற்றும் ஏற்றுமதி ரக வீட்டு உபயோக ஜவுளி இரகங்கள் (Domestic and Export Variety) கண்கவரும் வகையில் அழகுற காட்சிப்படுத்தப்பட்ட காண்காட்சியை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு மேம்படுத்தப்பட்ட மின் வணிக தளத்தை (Revamped Co-optex e-commerce Website) தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர், 2024-2025-ஆம் ஆண்டில் சிறந்த வேலைப்பாடு கொண்ட இரகங்களை திறம்பட நெசவு செய்த நெசவாளர்களை சிறப்பிக்கும் வகையில், 60 விருதாளர்களுக்கு மொத்தம் ரூ.10 லட்சத்திற்கான காசோலைகள் மற்றும் திறன்மிகு நெசவாளர் விருதுக்கான பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும், நெசவாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 25 பயனாளிகளுக்கு தலா ரூ. 4. லட்சம் வீதம் ரூ. 1 கோடி மானியத்தில் வீடு கட்டுவதற்கான ஆணைகளையும், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 25 பயனாளிகளுக்கு பணப்பலன் ஆணைகளையும், 24 பயளாளிகளுக்கு முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,200/- வீதம் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளையும், நெசவாளர் குடும்ப ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் காலஞ்சென்ற நெசவாளர்களின் 10 வாரிசுதாரர்களுக்கு மாதம் ரூ.1,200/- வீதம் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளையும், கைத்தறி நெசவாளர் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 38 பயனாளிகளுக்கு ரூ.1.90 கோடிக்கான கடனுதவி ஆணைகளையும், 20 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.1.14 லட்சம் மதிப்பிலான தறி உபகரணங்களையும், தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் வழங்கினார்.

தொடர்ந்து, கோ-ஆப்டெக்ஸ் சார்பாக சிறந்த மூன்று விற்பனை வளாகங்களுக்கு தலா ரூ.1.00 லட்சம், ரூ.75,000/- மற்றும் ரூ.50,000/- வீதம் ரொக்க பரிசுகளையும், சிறந்த மூன்று மண்டல அலுவலர்கள் மற்றும் சிறந்த மூன்று மின் வணிக விற்பனை நிலையங்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்களையும் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் வழங்கினார்.

இவ்விழாவில் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் கோயம்புத்தூரிலுள்ள தமிழ்நாடு பஞ்சாலைக் கழகத்தில் நெசவு மேற்பார்வையாளராகப் பணிபுரிய தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும், கூட்டுறவு நூற்பாலைகளில் சிறப்பாகப் பணிபுரிந்தமைக்காக 6 தொழிலாளர்களுக்கு தலா ரூ.25,000/- வீதம் ”சிறந்த தொழிலாளர் விருதுகள்” மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகளில் 2024-25 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற 19 மாணவ மாணவிகளுக்கு ரூ.67,000/- ரொக்கப்பரிசுகளையும் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!