ராமேசுவரம் பகுதியில் மட்டும் 700-க்கும் அதிகமான விசைப்படகுகள் இன்னும் 2 மாதத்திற்கு நிறுத்தப்பட உள்ளன.
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன்கீழ், தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாத்திடும் வகையிலும் ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ந் தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளை கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விசைப்படகுகள் மீன்பிடி தடைக்கால சீசன் நாளை (திங்கட்கிழமை) நள்ளிரவு 12 மணியில் இருந்து தொடங்குகிறது. இதனால் ராமேசுவரத்தில் நேற்று விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லக்கூடிய நாளாக இருந்தும் இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கைக்கு பயந்து செல்லவில்லை.
இதனால் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுக கடல் பகுதியில் வரிசையாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. நாளை நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்கால சீசன் தொடங்கும் நிலையில் ராமேசுவரம் பகுதியில் மட்டும் 700-க்கும் அதிகமான விசைப்படகுகள் இன்னும் 2 மாதத்திற்கு நிறுத்தப்படுகின்றன.
இதேபோல் பாம்பன், மண்டபம், ஏர்வாடி, கீழக்கரை தொண்டி, சோழியக்குடி, மூக்கையூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுமார் 2000-க்கும் அதிகமான விசைப்படகுகள் நிறுத்தப்படுகின்றன. மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை கரையில் ஏற்றி வைத்து மராமத்து பணிகளில் ஈடுபடுவார்கள்.
தடைக்கால சீசனில் ராமநாதபுரம் மாவட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அரபிக்கடலில் மீன்பிடி தொழிலுக்காக சென்று வருகின்றனர். அதே நேரத்தில் நாட்டுப்படகுகள், சிறிய படகு மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.