சிம்லாவுக்கு அடுத்தபடியாக மலைபிரதேசத்தில் அமைக்கப்பட்ட 2-வது பெரிய மருத்துவமனை இதுவாகும்.
அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி புதிய திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து வருகிறார். அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்தநிலையில், இதில் ஊட்டி எச்.பி.எப். பகுதியில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் புதிதாக ரூ.353 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மருத்துவ ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.700 படுகைகள், 10 அறுவை சிகிச்சை அரங்குகளுடன் ஊட்டி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. சிம்லாவுக்கு அடுத்தபடியாக மலைபிரதேசத்தில் அமைக்கப்பட்ட 2-வது பெரிய மருத்துவமனை இதுவாகும்.
பழங்குடியினரின் பாரம்பரிய நடனத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் இருந்து மாலையில் புறப்பட்டு கோவைக்கு செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கொங்குநாடு கலைக்குழு சார்பில் வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சியை பார்வையிடுகிறார். பின்னர் கடந்த ஆண்டு பெருந்துறையில் நடந்த வள்ளிகும்மியாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று சாதனை படைத்த 16 ஆயிரம் பெண்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார்.
விழா முடிந்ததும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 6.35 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து இரவு 7.20 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.