ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6ம் தேதி திறந்து வைக்கிறார். ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் ரயில் பாலம் 1914-ம் ஆண்டு கட்டப்பட்டது. கடலுக்கு நடுவில் உள்ள இந்த பாலத்தில் 40 கி.மீ முதல் 50 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த பாலம் கட்டி 110 ஆண்டுகள் ஆனதால் கடல் அரிப்பின் காரணமாக இந்த பாலத்தின் பல இடங்களில் உறுதித்தன்மை குறைந்தது. கப்பல் போக்குவரத்திற்கு பயன்படும் தூக்குப்பாலத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டது. எனவே, பயணிகள் பாதுகாப்பு கருதி இப்பாலத்தில் 2022 டிசம்பர் 22-ம் தேதியுடன் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
இதனை அடுத்து அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாம்பன் நடுக்கடலில் சுமார் 550 கோடி மதிப்பீட்டில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக புதிய பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அதன் பணிகள் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைக்க உள்ளதாக தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் ரயில்வே துறை அதிகாரிகள் ராமேஸ்வரம் ரயில் நிலையம், நிகழ்ச்சி நடைபெற உள்ள ஆலயம் பகுதி உள்ளிட்டவற்ற பார்வையிட உள்ளார். இதையடுத்து பாம்பன் சாலை பாலத்தில் மேடைகள் அமைக்கப்பட்டு பிரதமர் வருகை தந்து திறந்து வைப்பது போன்று டெமோக்களும் நடத்தப்பட உள்ளனர்.