செங்கல்பட்டு, திருவண்ணாமலையில் மேம்படுத்தப்பட்ட சாலைகளை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..!

செங்கல்பட்டு, திருவண்ணாமலையில் ரூ.1,141 கோடியில் மேம்படுத்தப்பட்ட சாலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பொருளாதாரத்தின் அங்கங்களான விவசாயம், தொழில், வணிகம், சுற்றுலா போன்ற துறைகளின் மேம்பாட்டிற்கு சாலை உட்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தில் புதிய சாலைகள் மற்றும் பாலங்கள் அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல், கிராமப்புறங்களுக்கு இணைப்புச் சாலைகள் அமைத்தல் போன்ற முக்கியப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம், தமிழ்நாடு அரசு, நெடுஞ்சாலைத் துறை வாயிலாக தரமான மற்றும் பாதுகாப்பான சாலை கட்டமைப்பினை சிறந்த முறையில் உருவாக்கி, பராமரித்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, சென்னை – கன்னியாகுமரி தொழில்தடத் திட்டத்தின் கீழ், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன், நில எடுப்பு, பிற துறை சார்ந்த குழாய்களை மாற்றியமைத்தல் மற்றும் பராமரிப்பு செலவினம் உட்பட 1,141 கோடியே 23 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், 109 கிலோ மீட்டர் நீளத்திற்கு 10 மீட்டர் சாலையாக அகலபடுத்தப்பட்டு, சாலை பாதுகாப்பு அம்சங்களுடன் தரம் உயர்த்தப்பட்ட செய்யூர்-பனையூர் இணைப்புச் சாலை உள்ளிட்ட செய்யூர் – வந்தவாசி – போளூர் சாலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இத்திட்டத்தில், மருதாடு, வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஆகிய 3 ஊர்களுக்கு புறவழிச்சாலைகள், மழைநீர் வடிகால்கள், 5 உயர்மட்ட பாலங்கள், 14 சிறு பாலங்கள், 225 குறு பாலங்கள், சாலைப் பாதுகாப்பினை உறுதிசெய்ய தெருவிளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக கழிப்பறை வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையின் இருபுறங்களில் 47,700 மரக்கன்றுகள் நடப்பட்டு நன்கு பராமரிக்கப்படுகிறது. இத்திட்டத்தில், 7 ஆண்டுகளுக்கான செயல்திறன் அடிப்படையிலான பராமரிப்புப் பணியும் உள்ளடங்கும்.

இத்திட்டச் சாலையானது, கிழக்கு கடற்கரைச் சாலை, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் விழுப்புரம் – மங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கின்றது. இத்திட்டத்தில் மருதாடு, வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஆகிய 3 ஊர்களுக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளதால், கனரக வாகனங்கள் போக்குவரத்து நெரிசலும், பயண நேரமும் குறையும். அத்துடன் செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலுள்ள 67 கிராமங்களுக்கு விவசாய விளைபொருட்களை எடுத்துச் செல்லவும், அருகிலுள்ள நகர்புறங்களில் அமைந்துள்ள பள்ளி, கல்லூரி, மற்றும் மருத்துவமனை ஆகியவற்றிற்கு பொதுமக்கள் எளிதாக செல்லவும் இயலும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *