இன்றைய முக்கிய நிகழ்வுகள் (13.01.2025)
போகிப் பண்டிகை
வேளாண்மையே தமிழர்களின் முதன்மைத் தொழிலாக இருந்தபோது போகிப் பண்டிகை சுத்தம் செய்யும் விழாவாக மட்டும் இன்றி சுகாதாரம் பேணும் விழாவாகவும் இருந்து வந்துள்ளது. அந்த ஆண்டு முழுக்க உடுத்திய பழைய உடைகள், கால்நடைகளுக்கு சேமித்து வைத்திருந்த பழைய வைக்கோல் போன்றவை எல்லாம் தீயிட்டு அழித்துவிட்டு புதியவைகளை ஏற்கும் நாளாக போகி இருந்துள்ளது
இந்த நாளில் செய்ய வேண்டியவை என்னென்ன? செய்யக்கூடாதவை என்னென்னெ என்று பார்ப்போம்.
செய்ய வேண்டிய 5 விஷயங்கள் :
-
போகியில் வீட்டு தெய்வங்களை வழிபடும் வழக்கம் நம்மிடம் உண்டு. அதனால் நம் முன்னோர்களை குலதெய்வ கோயிலுக்குச் சென்றோ, நடுவீட்டில் விளக்கேற்றியோ வழிபடலாம். கன்னிப்பெண்கள் இறந்து போய் இருந்தால் அவர்களை சீலைக்காரியாக வழிபடும் வழக்கம் இன்றும் உண்டு.
-
மழைக்காலம் முடிந்து குளிர் உச்சமாகும் காலம் என்பதால் அதிகம் நோய்க்கிருமிகள் பரவும் ஆபத்து உள்ளது. அதுவும் நோய்த்தொற்று பரவும் இந்த சூழலில் பாரம்பர்யமாக நாம் செய்து வரும் மருத்துவ முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக வீடு முழுக்க மஞ்சள்,சாணம் தெளித்து சாம்பிராணி, குங்கிலிய தூபம் போட்டு சூழலை சுத்தமாக்கலாம்.
-
வழக்கமாக போகியில் கடைப்பிடிக்கும் காப்பு கட்டும் சடங்கை செய்யலாம். அதாவது வீட்டு வாசலில், பின் வாசலில் மூலிகைக் காப்பான்களை கட்டி வைக்கலாம். இந்த மூலிகைக் காப்பான்களில் கட்டாயம் மாவிலை, நொச்சி, வேம்பு, ஆவாரம், மஞ்சள் கொத்து, சிறுபீளை, தும்பை, பிரண்டை, துளசி இருக்க வேண்டும். இது சிறந்த நோய்த்தடுப்பானாக இருந்து உங்களையும் உங்கள் கால்நடைகளையும் பாதுகாக்கும்.
-
ஏடு எடுக்கும் தினம் என்று முன்னாளில் கடைப்பிடிக்க நாள் இது. இந்நாளில் பழைய ஓலைச் சுவடிகளை எடுத்து பழைய சிதைந்த ஏடுகளை நீக்கி விட்டு புதிய ஏடுகளைச் சேர்ப்பார்கள். அதேபோல இந்நாளில் புத்தகங்களைப் பராமரிக்கும் பணியைச் செய்யலாம்.
-
போகி அன்று நிலக்கடலை உருண்டை, போளி, ஒப்பிட்டு, வடை, சோமாசு, பாயசம், மொச்சை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் இவற்றுடன் ‘நிலைப்பொங்கல்’ வைத்து வீட்டு தெய்வங்களை வணங்கும் வழக்கம் இன்றும் கொங்கு பகுதியில் உள்ளது. இந்நாளில் எல்லோரும் குலசாமிகளை, கன்னி தெய்வங்களை வணங்குவது நலம் அளிக்கும்.
செய்யக் கூடாத 5 விஷயங்கள் :
-
இந்திரன், சூரியன், வீட்டு தெய்வங்களை வரவேற்று வணங்கும் நாள் என்பதால் இந்த நாளில் மாமிசம் சமைக்கக் கூடாது. போதை வஸ்துக்கள், பகல் உறக்கம் எதுவும் கூடாது என்பர்.
-
போகி அன்று சிலர் வெள்ளை அடித்து வீட்டை சுத்தப்படுத்துவார்கள். அதைவிட போகிக்கு முன்னரே சுத்தப்படுத்துவதே முறையானது. போகி அன்று வழிபாடு செய்வதே நன்று. மூடப் பழக்கங்கள், தீய பழக்கங்கள், ஒழுக்கக் கேடுகள், மனக்கசப்புகள், உறவுகளிடம் சர்ச்சை போன்றவற்றை ‘ருத்ர ஞான யக்ஞம்’ என்று அழைக்கப்படும் நம் மன யாகக் குண்டத்தில் எரித்துவிட வேண்டும் என்பதே போகி நாளின் தத்துவம்.
-
நகரங்களில் சாஸ்திரத்துக்காக பழைய துணிகள், கிழிந்த பாய்களை கொஞ்சமாக எரித்த காலம் போய், இப்போது எல்லாம் டயர்களையும், பிளாஸ்டிக் பொருள்களையும் எரித்து காற்றை மாசாக்குவது செய்யவேக் கூடாத செயல் எனலாம்.
-
புது மழையால் நிரம்பி இருக்கும் கிணறு, குளம் போன்றவற்றின் நீர் சுவையாகும் வகையில், சுத்தமாகும் வகையில் முன்பு அந்நீரில் நெல்லி, பனை போன்ற மரங்களின் துண்டை போடுவார்கள். இந்த அடிப்படை தெரியாமல் இப்போது கிராமங்களில் பெருமளவு மரங்களை வெட்டி நீரில் போடும் வழக்கத்தை செய்யவேக் கூடாது.
-
பெரும்பாலான கிராமங்களில் இருக்கும் ஏரிகளில் மீன் பிடிக்கும் விழா நடைபெறும். அப்போது ஊர் கூடி மீன் பிடிக்கலாம் தவறு இல்லை. ஆனால் ஏரியை அழித்து மீன் பிடிக்கிறோம் என்ற பெயரில் நீரை எல்லாம் வெளியே இறைத்துவிடுவது தவறானச் செயல். இதைச் செய்யவே கூடாது.
இயற்கைக்கு எதிரான, காற்றை மாசுபடுத்தும் எந்த செயலையும் செய்யாமல் இந்த போகிப் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவோம்.
போர் நாயகன் லெப்டினன்ட் ஜெனரல் ஜேக்கப் மறைந்த நாளின்று
1971-ம் ஆண்டு யுத்தத்தில் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட, போரின் நாயகனாக புகழாரம் சூட்டப்பட்ட லெப். ஜெனரல் ஜே.எப்.ஆர். ஜேக்கப் இதே ஜனவரி 13ல் (2016)உடல்நலக் குறைவால் டெல்லியில் காலமானார். 1971-ஆம் ஆண்டு யுத்த வெற்றியால்தான் வங்கதேசம் தனிநாடாக உருவெடுத்தது. இதனால் வங்கதேசமும் லெப்.ஜெனரல் ஜேக்கப் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வங்காள மாகாணத்தில் யூத குடும்பத்தில் பிறந்தவர் ஜேக்கப். தம்முடைய 19 வயதில் அதாவது 1942ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் கால கட்டத்தில் ராணுவத்தில் இணைந்தார். பின்னர் 1965ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் யுத்தத்திலும் பங்காற்றினார். 1971ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் கிழக்கு பிராந்திய கமாண்டராக இருந்தார் ஜேக்கப். அப்போதுதான் வங்கதேச விடுதலைக்காக இந்தியா- பாகிஸ்தான் இடையேயான யுத்தம் நடைபெற்றது. அந்த யுத்தத்தின் போது டாக்காவில் சரணடைந்த பாகிஸ்தானிய படையினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியவர் லெப். ஜெனரல் ஜேக்கப். தங்களுடைய நாட்டு விடுதலைக்காக தீரமுடன் போரிட்ட லெப்.ஜெனரல் ஜேக்கப்பட்டு வங்கதேசம் அந்நாட்டின் உயரிய விருதை வழங்கி சிறப்பித்திருந்தது. 1978-ம் வருஷம் ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற ஜேக்கப், கோவா, பஞ்சாப் மாநிலங்களின் ஆளுநராகவும் பதவி வகித்தார். 92 வயதான லெப். ஜெனரல் நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டி இதே நாளில் காலமானார்.
1942 – ப்ளாஸ்டிக் கார் தயாரிக்கும் முறைக்கு ஹென்றி ஃபோர்ட் காப்புரிமை பெற்ற நாள்
ஜனவரி 13._ சோயாபீன், கோதுமை, மக்காச்சோளம் உள்ளிட்ட விவசாய உற்பத்தித் பொருட்களைப் பயன்படுத்தி, ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் என்ற தாவரவியலாளரின் உதவியுடன் ஃபோர்ட் உருவாக்கிய இந்தக் கார், 1941 ஆகஸ்டிலேயே பொதுமக்கள் பார்வைக்குக் காட்சிப்படுத்தப்பட்டது. சணல் செடியிலிருந்து உருவாக்கப்படும் உயிரி எரிபொருளால் இயங்கக்கூடியதாக இருந்த இந்தக் காரை, விவசாயத்தையும், தொழில்துறையையும் ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கியதாகவும், உலோகத்தாலான கார்களைவிடப் பாதுகாப்பானது என்றும் ஃபோர்ட் குறிப்பிட்டார். இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் நிலவிய இரும்புத் தட்டுப்பாட்டால், பெருமளவு இரும்பு ஆயுதத் தயாரிப்புக்காக ஒதுக்கப்பட்ட நிலையில், வாகனத் தயாரிப்புக்கு மிகக் குறைந்த அளவு இரும்பே ஒதுக்கீடு செய்யப்பட்டதற்குத் தீர்வாக இந்தக் காரை உருவாக்கியிருந்தார். உலோகத்தாலான வழக்கமான கார்களின் எடையில் முக்கால் பங்கு மட்டுமே இருந்ததால், இது எரிபொருளையும் குறைவாகப் பயன்படுத்தியது. ஆனால், இரண்டாம் உலகப்போர்க் காலத்தில், அமெரிக்கக் கார்த் தொழிற்சாலைகளை, அரசு ஆயுதம் தயாரிக்கப் பயன்படுத்திக்கொண்டதால், இந்தக் கார் உற்பத்தி செய்யப்படாமலேயே நின்று போனது. மோட்டார் காரைக் கண்டுபிடித்தவர் ஃபோர்ட் இல்லையென்றாலும், கார் உற்பத்தியில் அவர் கொண்டு வந்த முன்னேற்றங்கள்தான், 1920-40 காலத்தில் உலகிலிருந்த மொத்தக் கார்களில் பாதி ஃபோர்ட் கார்களாக இருக்கக் காரணமாயின. அவர் கொண்டுவந்த முன்னேற்றங்களில் முக்கியமானது, 1930களிலேயே கார்களில் ப்ளாஸ்டிக் பாகங்களை அறிமுகப்படுத்தியதாகும். கார்கள் வெளியிடும் மாசுக்கான சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளுக்குத் தீர்வாக, தற்காலத்திய முன்னேறிய கார்களில் 50 சதவீதம் வரை ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும், இவை காரின் எடையில் 10 சதவீதம் மட்டுமே இருப்பதால், காரின் எடையை மிகப்பெரிய அளவுக்குக் குறைத்து, எரிபொருளைச் சேமிக்கின்றன. தேவையான வடிவங்களை உருவாக்குவதற்கு, உலோகத்தைவிட ப்ளாஸ்டிக் சிறந்த தேர்வு என்பதுடன், பாதுகாப்பும் அதிகம், எரிபொருளும் குறைவாகச் செலவாகும் ஆகிய காரணங்களால், கார்களில் ப்ளாஸ்டிக் பாகங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.
இதே ஜனவரி 13, 1964* மேற்கு பாகிஸ்தானிய ஆட்சியாளர்களின் கெடுபிடிகளை தாங்க முடியாமல் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து பலஆயிரம் இந்துக்கள் அகதிகளாக மேற்கு வங்காளத்தில் தஞ்சம் புகுந்தனர். அதன் எதிரொலியாக கல்கத்தாவாக இருந்த கொல்கத்தா நகரில் விளைந்த கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்டனர். பல ஆயிரம் மக்கள் கொல்கத்தா நகரை விட்டு தப்பி ஓடினர். இது சுதந்திர இந்தியாவில் ஏற்பட்ட முதலாவது பெரிய மதக் கலவரம் ஆகும்.